லட்சுமி பாலசுப்ரமணியம், ஓய்வுபெற்ற ஆசிரியர். சென்னையில் தன் மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார். கைவினைப் பொருட்கள் செய்வது, மாடி தோட்டம் அமைப்பது, பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் சேகரிப்பது என தன்னுடைய பொழுதை பயனுள்ள வகையில் ஆக்கிக்கொள்கிறார் லட்சுமி. தன்னுடைய கைமணம் மிக்க சில உணவுகளின் ரெசிபிக்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்…
கொட்டு குழம்பு (வற்றல் குழம்பு)
தேவையானவை:
புளி – சின்ன எலுமிச்சை அளவு
கடுகு, கடலை பருப்பு – கால் தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள், வற்றல் மிளகாய், பெருங்காயம், உப்பு, சாம்பார் பொடி – தேவை, காரத்துக்கு ஏற்ப
கறிவேப்பிலை
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
காய்கள்:
அவரைக்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், வெண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வெங்காயம்.
செய்முறை:
வாணலி (கல்சட்டியில் செய்தால் சுவை கூடும்)யில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வற்றல் மிளகாய், பெருங்காயம், வெந்தயம் இவறைப் போட்டு தாளிக்கவும். அடுத்து இதில் அரிந்த வெங்காயம் மற்றும் காய்கறிகள் அல்லது வற்றலைப் போட்டு வறுக்கவும். புளியைக் கரைத்து உற்றி,மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். கொதிவந்தவுடன் அரிசிமாவை சிறிதளவு நீரில் கரைத்து சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்குங்கள்.
மாங்காய் குழம்பு
தேவையானவை:
கொட்டையுடன் கூடிய சிறிய மாங்காய் – 4
புளி – பாதி எலுமிச்சை அளவு
தனியா – 1 தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
வற்றல் மிளகாய் – 3
பெருங்காயம் – சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தாளிக்க
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
செய்முறை:
புளியை கால் ஆழாக்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். வெந்தயம், பெருங்காயம், வற்றல் மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைக்கவும். புளி கரைத்த தண்ணீரை கொதிக்க வைத்து, வெட்டிய மாங்காய், அரைத்த விழுது, உப்பைப் போட்டு கொதிக்க விடுங்கள். புளி வாசனை போக கொதித்ததும் வெல்லத்தையும், அரிசி மாவையும் சேருங்கள். மீண்டும் ஒரு கொதிவிட்டு, குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு, கடுகை தாளித்து அதில் சேருங்கள்.
பின்குறிப்பு: அரைத்த விழுதிற்கு பதில் சாம்பார் பொடியை சேர்க்கலாம். மாம்பழத்தை சேர்த்தும் இந்த குழம்பு வைக்கலாம்.
கோங்குரா கீரைக் குழம்பு
தேவையானவை:
கோங்குரா கீரை – ஒரு கட்டு
துவரம் பருப்பு – கால் ஆழாக்கு
வெங்காயம் – 3
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
வற்றல் மிளகாய் – 2
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை வேக வைத்து, மசிக்கவும். கோங்குரா கீரையை பொடியாக நறுக்கி, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். கீரை வெந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சிவப்பாக வதக்கி சேர்க்கவும். இதில் மசித்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வற்றல் மிளகாய், கடுகை தாளித்து கொட்டி, அரிசி மாவு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
என்னுடைய பச்சை சுண்டைக்காய் குழம்பின் படமே.மிக்க ஸந்தோஷம். அன்புடன்
கொட்டு குழம்பு நன்றாக உள்ளது. அன்படன்