பைனாப்பிள் ஸ்மூதி
தேவையானவை:
மாம்பழம் – 1
பைனாப்பிள் – ஒரு கப்
தேங்காய் துருவல் – கால் கப்
இளநீர் அல்லது தேங்காய் நீர் – 1 கப்
தேன் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
தேங்காய் துருவலை மிதமான தீயில் வெறும் வாணலி வறுத்துக்கொள்ளவும். பைனாப்பிள் மற்றும் மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழத்துண்டுகள், வறுத்த தேங்காய் துருவலை ஒரு ஸிப் லாக் கவரில் போட்டு, ஃபீரிசரில் வைக்கவும். ஸிப் லாக் கவரில் உள்ளவை ஐஸ் கட்டிகளாக மாறியதும் அதனுடன் இளநீர் , தேன் சேர்த்து மிக்ஸியின் பிளண்டரில் போடவும். நன்றாக அரைபட்டதும் கண்ணாடி தம்ளரில் ஊற்றி குடிக்கலாம். குளு குளு வென சர்க்கரை சேர்க்காத ஹெல்தியான ஸ்மூதி தயார். ஸிப் லாக் கவரில் பைனாப்பிள், மாம்பழ, தேங்காய் துருவலைச் சேர்த்து ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு தேவையான போது ப்ளன்ட் செய்து ஸ்மூதி ஆக்கலாம். ஐந்து நாட்கள் வரை இப்படி தயாரித்து வைத்து பயன்படுத்தலாம்.
திணை கட்லெட்
தேவையானவை:
கம்பு அல்லது சோளம் அல்லது ஏதேனும் ஒரு வகை திணை – வேகவைத்தது இரண்டரை கப்
கோதுமை பிரட் – 2 ஸ்லைஸ்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
பச்சை பட்டாணி – 1 கப்
முட்டை – இரண்டு
கோதுமை மாவு – கால் கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
கம்பை, வழக்கமாக அரிசியை சமைப்பது போலவே ஊறவைத்து சமைக்கலாம். தண்ணீரை வடிக்கவும் செய்யலாம். அல்லது மிதமான தண்ணீர் வைத்து குக்கரிலும் வேகவைக்கலாம். வேகவைத்த கம்பை ஆற விடுங்கள்.
கோதுமை பிரட் துண்டுகளை வெறும் வாணலியில் மிதமான தீயில் டோஸ்ட் செய்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கம்பு, பொடித்த பிரட் துகள்கள், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பச்சை பட்டாணி (வேக வைக்க தேவையில்லை), முட்டை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். கலவையை கெட்டியாக்க போதுமான அளவுக்கு கோதுமை மாவு சேருங்கள்.எல்லா மாவையும் சேர்க்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.
கலந்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒரு வாழை இலையில் எண்ணெயைத் தடவி அதன் மேல் பரப்பி 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து சிறு சிறு வட்டங்களாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.