ஓட்டுத்தையலே ஜப்பானில் சில மாற்றங்களுடன் சஷிகோ எம்பிராய்டரி என அழைக்கப்படுகிறது. ஜப்பானில் இண்டிகோ சாயம்(இண்டிகோ செடிகளிலிருந்து பெறப்படும் நீல நிற சாயம்) பயன்படுத்தப்படுத்தி உருவாக்கும் துணிகளில் வெள்ளை நூலைக்கொண்டு பூத்தையல் போடுவதே சஷிகோ எம்பிராய்டரி! வீட்டை விட்டு வெளிவரமுடியாத பனிக்காலங்களில் ஜப்பானிய விவசாயக் குடிகள் சஷிகோ எம்பிராய்டரியை போடுவார்கள். இப்போது உலகம் முழுக்கவும் சஷிகோ எம்பிராய்டரி பிரபலமாகிவிட்டது. இதில் ஜியோமெட்ரிகல் டிசைன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு எளிமையான சஷிகோ எம்பிராய்டரி டிசைன் போட்டுப் பார்ப்போம். இண்டிகோ துணிக்கு பதிலாக பழைய ஜீன்ஸை ரீ சைக்கிள் செய்து அதில் எம்பிராய்டரி போடலாம். ஜீன்ஸ் உறுதித்தன்மை உடையது, ஆனாலும் குறிப்பிட்ட மாடல் சில காலத்துக்கு மேல் அவுட் ஆஃப் ஃபேஷனாகிவிடும். அத்தகைய ஜீன்ஸை மறுபயன்பாடு செய்யலாம். பைகள், பொம்மைகள், முதுகணைகள், தலையணைகள் தைக்கலாம். முதுகணை ஆக்கப்பட்ட ஜீன்ஸ் துணியில் சஷிகோ எம்பிராய்டரி போடுவோம்.
கூட்டல் குறி போன்றதே இந்த டிசைன். ஒரு வெள்ளைத் தாளில் சந்துப் புள்ளி வைப்பதுபோல, சிறு கோடுகளைப் போட்டுக் கொள்ளுங்கள். இறுதி புள்ளி ஒன்றில் முடிய வேண்டும். டிசைனை மஞ்சள் கார்பன் பேப்பர் வைத்து துணியில் டிரேஸ் செய்துகொள்ளுங்கள். வெள்ளை எம்பிராய்டரி அல்லது புத்தகங்களைத் தைக்கப் பயன்படுத்தும் வெள்ளை நூலைக் கொண்டு எம்பிராய்டரி போடலாம். நூலுக்கேற்ற ஊசியைப் பயன்படுத்துங்கள். முதலில் கிடை மட்டமாக தையல்களை டிசைன் முழுக்க போட்டு முடியுங்கள். பிறகு, படத்தில் காட்டியுள்ளபடி கூட்டல் குறி போடுவதுபோல வரிசையாகப் போடுங்கள். அவ்வளவுதான் சஷிகோ எம்பிராய்டரி! போடுவது எளிதாக இருந்தாலும் பார்க்க மிக அழகாக இருக்கும்.
நீங்கள் முயற்சித்துப் பார்க்க இதோ சில சஷிகோ எம்பிராய்டரி டிசைன்கள்…