கைவினை கலைகளை அறிவியல் ரீதியாகவும் அர்ப்பணிப்போடும் அணுகும் கைவினைஞர் நம்மிடையே மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களில் காகித கைவினைஞர் தியாக சேகருக்கு தனித்த இடத்தை தரலாம்! பேப்பர் ஆர்ட் என்னும் காகித கலைகளில் ஒரிகாமி என்னும் காகிதம் மடிக்கும், க்வில்லிங் எனப்படும் காகிதம் சுருட்டும் கலை, கிரிகாமி எனப்படும் காகிதம் வெட்டும் கலை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் தியாக சேகர். ஒரிகாமியில் 500 வகைகளுக்கும் அதிகமான டிசைன்களை செய்யக்கூடியவர் . தன்னுடைய நிபுணத்துவத்தை பரப்பும் முயற்சியாக தமிழக முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்தும் வருகிறார்.
“என்னுடைய சொந்த ஊர் பாபநாசம். முதுகலை சமூக பணிகள் படித்துக்கொண்டிருந்தபோது மாற்று வாழ்வியல் தொடர்பான தேடலில் அதை பாதியிலேயே விட்டுவிட்டு இயற்கை வேளாண் செயல்பாட்டாளர் நம்மாழ்வாருடன் பயணிக்கத் தொடங்கினேன். சேலம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளுடன் நண்பர் ஆண்டோ பணியாற்றிக்கொண்டிருந்தார். உலக சினிமா, இலக்கியம் என அங்கு நிறைய கற்றேன். பிறகு, குக்கூ சிவராஜ் உடன் அறிமுகம் கிடைத்தது.
சின்ன வயதிலேயே எனக்கு காகித மடிப்புகள் மீது அதீத ஆர்வம் இருந்தது. பள்ளி விழாக்களில் நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களில் காகித அலங்காரங்களைச் செய்ய என்னைத்தான் அழைப்பார்கள். அப்போது காகித மடிப்பு என்பது ‘ஒரிகாமி’ என்ற கலைவடிவம் என்றெல்லாம் தெரியாது. பின், அடுத்தடுத்த வாழ்க்கைச் சூழலில் அந்தத் தொடர்பு அப்படியே இருந்தது. அது மேலெழும்பக் காரணம் சிவராஜ் கொடுத்த ஊக்கம். குக்கூ என்ற பெயரில் குழந்தைகளுக்கான செயல்பாடுகளை துவக்கியபோது, என்னுடைய காகித மடிப்பு திறன்களைப் பார்த்த அவர், மேற்கொண்டு இதில் அடுத்தக் கட்டம் நோக்கிச் செல்லுங்கள் என்றார்.
ஆர்வத்துடன் ஒரிகாமி படிக்கத் தேடியபோது, முறையாக பயின்று அதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலை நாட்டு புத்தகங்களை தருவித்தும் இணையம் மூலமாகவும் நானே பலவற்றைத் தேடித் தேடி கற்று செய்து பார்த்தேன்.
2011-ஆம் ஆண்டு நுண்கலை படித்த எழில் அறிமுகம் கிடைத்தது. நான் கற்றுக்கொண்டதை தொழில் முறையாக எப்படி செய்வது என என்னை வழிநடத்தினார். கடந்த இரண்டு வருடங்களாக நான் கற்ற கலையை தமிழகம் முழுக்கவும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தியாகசேகர், ஒரிகாமி கலை குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ஒரிகாமியில் ஜப்பானியர்கள் மிகச் சிறந்த கலைஞர்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரிகாமி மாடல்கள் உள்ளன. அது வளர்ந்துகொண்டேதான் செல்லும். மூன்று-நான்கு ஸ்டெப்பில் ஆரம்பித்து 600 ஸ்டெப் வரைக்கும்கூட காகிதங்களை மடித்து கலைப் பொருட்களை உருவாக்கலாம்.
ஒரிகாமி ஒரு கலைவடிவம் என்றாலும் மற்ற பயன்களும் உள்ளன. காகித மடிப்புகளை கவனமாக செய்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் மனதை ஒருநிலைப்படுத்த ஒரிகாமி உதவுகிறது.
வகுப்புகளில் ஒன்றாக இத்தகைய கலைகளை கற்பதன் மூலமாக மாணவர்களின் குழு மனப்பான்மையும் அதிகரிக்கிறது.
சிறுவயதிலேயே இத்தகைய எளிய கலைகளை செய்யும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வளர்கிறார்கள். தன்னாலும் ஒரு வடிவத்தை உருவாக்க முடியும் என்பது அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுகிறது.
ஒரிகாமி என்பது ஜியோமெட்ரிகல் டிசைன் எனப்படும் கணித வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒருவகையில் இது அறிவியலை வளர்க்கிறது.
ஒரிகாமி குழந்தைகளுக்கு பயன்படும் கலையாக உள்ளதுபோல, முதியவர்களுக்கு டெரகாமி என்கிற கலைவடிவம் உதவுகிறது. தனித்து விடப்பட்ட முதியவர்களின் உளவியல் சிக்கல்களை போக்குவகையில் அவர்களை ஒருநிலைப்படுத்த இந்தக் காகித மடிப்புக்கலை உதவிக்கொண்டிருக்கிறது” என அடிக்கொண்டே போகிறார் தியாக சேகர்.
தமிழ்நாடு சார்ந்து ஒரிகாமி கலையை முன்னெடுக்க வேண்டும் என்பதும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்து ஒரிகாமி கலையை குழந்தைகளிடம் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னுடைய விருப்பம் என்கிறார் இவர். ‘கொக்குகளுக்காகவே வானம்’ என்கிற பெயரில் ஒரிகாமி பயிற்சி புத்தகம் ஒன்றை இவர் தொகுத்திருக்கிறார்.
ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட சடாகோ என்ற சிறுமியின் நினைவை போற்றும் வகையில் ‘அமைதிக்காக ஆயிரம் கொக்குகள்’ என்ற பெயரில் ஆனைமலை அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒரிகாமியில் ஆயிரம் கொக்குகளை உருவாக்கியிருக்கிறார் தியாகசேகர். கலைகள் மானுட அன்புக்காகவே என்பதைப் புரிந்த கலைஞராக செயல்பட்டு வருகிறார் தியாகசேகர்.
தியாகசேகரின் தொடர்பு எண்: 96770 078360
‘கொக்குகளுக்காகவே வானம்’ நூலைப் பெற: இயல்வாகை – 95001 25125
‘செய்து பாருங்கள்’ ஜனவரி-மார்ச் 2018 இதழில் வெளியான பேட்டி இது.