கார்த்திக்
சோழமண்டலக் கடற்கரைப் பகுதியான பழவேற்காடு, பல நூற்றாண்டுகளாக கடல் வாணிபத்துக்குப் பெயர் பெற்ற இடம் என்பதை சொன்னால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பமாட்டார்கள். சோழர்கள், பல்லவர்கள், விஜய நகரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என இந்த இடத்தை உள்ளிட்டு ஆட்சி செய்தவர்களுக்கு பழவேற்காடு, முக்கியமான துறைமுகம். சோழர்கள் காலத்தில் ‘புலியூர் கோட்டம்’ என்று அழைக்கப்பட்டது. தற்போது நிலைத்திருக்கும் ‘பழவேற்காடு’ என்கிற பெயரை சூட்டியவர் விஜய நகர அரசர் (கி.பி 1522ம் ஆண்டு) கிருஷ்ணதேவராயர். 18ம் நூற்றாண்டு வரை கடல் வாணிபம் தழைத்தோங்கியிருந்த பழவேற்காடு, அதற்கான சுவடுகளை மறைத்த வைத்துக்கொண்டு வங்கக் கடலிலிருந்து பிரிந்து நிற்கும் கழிமுகப் பகுதியாக மட்டுமே இன்று அறியப்படுகிறது. மீன்பிடித்தொழிலை ஆதாரமாகக் கொண்டது இன்றைய பழவேற்காடு மக்களின் வாழ்நிலை.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இங்கே வாழ்கிறார்கள். இந்த மூன்று மதங்களின் பரவல் எப்படி இங்கே வேரூன்றியது? பழவேற்காடிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள சோழர்கள் காலத்தில் (கி.பி 10 & கி.பி 12ம் நூற்றாண்டு) கட்டப்பட்ட திருப்பாலைவனம் கோயில் மூலம் இந்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அதற்குப் பிறகு, விஜயநகரர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆதிநாராயன கோயிலும் இந்துக்கள் இங்கே வாழ்ந்ததற்காக சான்றுகளைத் தெரிவிக்கின்றன.
அரேபியர்களின் வருகை பல்லவர்கள் (கி.பி. 9ம் நூற்றாண்டு) காலத்திலேயே நடந்திருக்கிறது. அராபிய இஸ்லாமிய வணிகர்கள் வாணிபம் செய்ய வந்து சிறிய அளவில் குடியேறியிருக்கிறார்கள். 13ம் நூற்றாண்டில் விஜயநகரர்கள் ஆட்சி செய்த காலத்தில் மெக்கா நகரின் புதிய காலிஃப்புக்கு கப்பம் கட்ட மறுத்த அரேபியர்கள், அங்கிருந்து வெளியேறி அதில் ஒரு சிலர் பழவேற்காடியில் குடியேறியிருக்கிறார்கள். அப்படித்தான் பழவேற்காடியில் இஸ்லாம் வேறூன்றியிருக்கிறது.
வங்கக் கடல் வழியே கப்பல் பயணம் செய்த போர்த்துக்கீசிய வணிகர்கள் (கி.பி 1502) தண்ணீர் தேடி பழவேற்காடு வந்ததாகவும் இங்கியிருந்த வளமான வணிக சூழல் அவர்களைக் கவர விஜயநகரர்களின் அனுமதியோடு வாணிபம் செய்ய குடியேறியதாகவும் இங்குள்ள இஸ்லாமிய மூதாதையர்களின் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. போர்த்துக்கீசியர்கள் இந்தப் பகுதியில் கட்டிய மாதா கோயில் (அவர் லேடி ஆஃப் க்ளோரி சர்ச்) இங்கே கிறிஸ்துவத்தின் வருகைக்கு சான்றாக இருக்கிறது. இந்த ஊரின் வாணிப சிறப்பைக் கண்ட டச்சுக்காரர்கள் மெதுவாக இங்கே வாணிபம் செய்ய குடியேறினார்கள். விஜயநகரின் இரண்டாவது வெங்கட அரசரின் மனைவி இறைவியின் அனுமதி பெற்று டச்சுக்காரர்கள் பழவேற்காடில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணா ஆறு பாயும் இடங்களில் விளைவிக்கப்பட்ட பருத்தியை ஏற்றுமதி செய்வதும் பர்மாவிலிருந்து தங்கம், ரூபி போன்ற ஆபரண அணிகலன்களுக்காகப் பயன்படும் பொருட்களை இறக்குமதி செய்வதும் டச்சுக்காரர்களின் வாணிபமாக இருந்திருக்கிறது.

டச்சுக்காரர்கள் கட்டிய உயரதிகாரிகளுக்கான மாளிகை ‘போர்ட் கெல்ரியா’, பழவேற்காடு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கி.பி. 1615ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை ஹைதர் அலியின் படைகள் ஆங்கிலோ, மைசூர் யுத்தத்தின்போது சிதைத்தன. எஞ்சியிருந்த மாளிகையை ஆங்கிலேயர்கள் கி.பி.1806ம் ஆண்டு, டச்சுக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலில் சிதைத்திருக்கிறார்கள். தற்போது மாளிகை இருந்ததற்கான சுவடாக அடித்தளம் மட்டுமே உள்ளது. டச்சுக்காரர்கள் கட்டிய புனித அந்தோணியார் கோயிலும் கிறிஸ்துவர்கள் இங்கே வேரூன்றியிருப்பதற்கான ஆதாரமாக இருக்கிறது.
பழவேற்காடு இப்போது…
இன்றைய பழவேற்காடில் மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒருவரையருவர் சார்ந்தே வாழ்க்கை நடத்துகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தொழில் மீன்பிடிப்பது. படகுகளைக் கட்டுமானம் செய்வது, பழதுபார்ப்பது போன்ற பணிகளை இஸ்லாமியர்கள் செய்கிறார்கள். வரலாற்றுச் சான்றுகளின்படி பழவேற்காடு, ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தக துறைமுகமாகத்தான் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகே இங்கே மீன்பிடித் தொழில் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் குடியேற்றம், அவர்கள் பற்றின வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. வங்கக் கடல் மீன் பிடிப்பும் கடலிலிருந்து ஒரு பெரிய மணல் திட்டால் பிரிக்கப்பட்ட 60 கி.மீட்டர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கும் கழிமுகப்பகுதியில் இறால் மீன் பிடிப்பும் இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம். சுமார் 4500 மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே வசிக்கிறார்கள். பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமல்லாது காசிமேடு பகுதியிலிருந்தும் மீனவர்கள் வந்து மீன் பிடித்துச் செல்கிறார்கள்.
பழவேற்காடு கழிமுகப்பகுதியில் (பழவேற்காடு ஏரி) மழைக்காலங்களில் மட்டுமே இறால் மீன்களின் இனப்பெருக்கம் நடக்கும். இந்தக் காலங்களில் வலசை வரும் பறவைகளை இங்கே காணலாம். பழவேற்காடு இந்திய அரசால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி. இறால் மீன்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும் மாதங்களில்தான் இறால் மீன் பிடிக்கும் தொழிலும் இங்கே நடக்கிறது. மற்ற காலங்களில் சென்னை நகரத்தில் கட்டட வேலைக்குச் சென்று விடுகிறார்கள். இறால் மீன் பிடிக்கும் மீனவர்கள், கடலில் மீன் பிடிக்க கடல் மீன் பிடி மீனவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் கடல் மீன் பிடி மீனவர்கள் இறால் மீன்களை பிடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. இப்படியரு எழுதப்படாத விதி இந்த பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு மீனவ சமூகத்தினரிடம் இருக்கிறது.
சுறா, கிழங்கா, வவ்வால், வஞ்சரம், காலா, சங்கரா, நவர, சுதும்பு, வெள்ளை வுடான், நெத்திலி, மடவ, கானகலித்தி, மாவிலாசி, மத்தி, சாலாபொடி, கவல, கெலித்தி, காரப்பொடி, காரல், இறால் போன்றவை இங்கே பிடிக்கப்படும் மீன்களில் சில. ‘‘தை மாதத்தில் பெரும்பாலும் எல்லா மீன்களும் சுவை குறைவாகவேயிருக்கும், புரட்டாசி வந்தால்தான் மீன்களுக்கு கொழுப்பு அதிகரித்து சுவை கூடுதலாக இருக்கும்’’ என்கிறார்கள் இந்தப் பகுதி மீனவர்கள்.
‘‘மீனவர்களுடைய வாழ்க்கை 24 மணிநேரமும் மீன்களோடுதான். நாங்கள் எந்த வேளை உணவையும் மீன் இல்லாமல் சாப்பிடமாட்டோம். இந்த இட்லி, தோசை, பொங்கல், பூரி மாதிரியான உணவுகளையெல்லாம் காலையில் சாப்பிட்டதே கிடையாது. பழைய சாதம், கூழ் இப்படித்தான் எங்கள் காலை உணவு இருக்கும். ஆனால் எது சாப்பிட்டாலும் கூட மீன் இருக்கும். நாங்க மீன் சாப்பிட்டால்தான் எங்கள் உடம்பின் இரத்த ஒட்டம் நல்லாயிருக்கும். அலுப்பு இல்லாமல் நாள் முழுக்க கடலில் மீன் பிடிக்க முடியும். ஆனா இப்போ இங்க முன்ன மாதிரி மீன்களின் சுவை, சத்து இல்லை. காரணம் பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதுதான். இப்படி கழிவுகள் கலப்பதால் இந்தப் பகுதியை விட்டு மீன்கள் உள்நோக்கிச் சென்று விட்டன. அதையும் மீறி இந்தப் பகுதியில் மீன் கிடைத்தாலும் அது ருசி இல்லாமல்தான் இருக்கிறது.’’ ஆதங்கப்பட்டார் இந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்.
மீனவர்களின் மீன்பிடி நேரம் நள்ளிரவு 1 மணியிலிருந்து காலை 10 மணிவரை அல்லது இரவு 11 மணிக்குத் தொடங்கி காலை ஆறரை மணி வரை இருக்கிறது. 30 பேர் கொண்ட குழுவாக மீன்பிடிக்கக் கிளம்புகிறார்கள். வலை மற்றும் மீன்பிடிப் படகுக்கான முதலீடு குறைந்தபட்சமாக ரூ. 10 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. அதனால் கூட்டாகவே தொழிலைச் செய்கிறார்கள். லாப, நட்டங்களை பிரித்துக்கொள்கிறார்கள். ஒருமுறை கடலுக்குச் சென்றுவரும் ஒருவரின் சராசரி வருமானம் ரூ. 15 ஆயிரம். கடலிலிருந்து பிடிக்கப்படும் மீன்களைப் பிரித்து கூடைகளில் நிரப்பி உடனடியாக விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எல் அண்ட் டி நிறுவனம் அமைத்துள்ள கப்பல் கட்டுமானம், பழுதுபார்ப்பு தொழிற்சாலை மற்றும் துறைமுகத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் மீனவர்கள். இங்கு வரும் கப்பல்கள் பழவேற்காடு பகுதியைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதிகமாக போக்குவரத்து இருந்தால் மீன்வரத்து குறையும் என்பது இங்குள்ள மீனவர்களின் எண்ணம்.
ஆனால் தொழிற்சாலை பணிகளில் இருக்கும் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘‘எல்லோரும் மீன்பிடிக்கப் போனால், எல்லோருக்கும் அதில் வருமானம் இருக்காது. ஆனால் மீன்பிடித்தொழிலுக்கு மாற்று இருந்தால் எல்லோரும் வாழலாம். அதனால் தொழிற்சாலை வேண்டாம் என்று சொல்வது தேவையில்லாதது.’’ என்கிறார்கள்.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை இவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ‘‘காய்ச்சலுக்கு காரப்பொடி, சுதும்பு சாப்பிட்டால் சரியபோகும். சுறாமீன் சாப்பிட்டால் வாய்ப் புண், வயிற்றுப் புண் சரியாகும்’’ என்று மருத்துவ குறிப்பு சொல்கிறார் மீனவப் பெண் நிர்மலா.
‘‘செம்படக்க, சுறாமீன் சாப்பிட்ட உடம்பு அலுப்பு தெரியாது. குழந்தை பெற்ற பெண்கள் சுறா மீன் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். காரப்பொடி, கிழங்கா மீனும் பிரசவித்த பெண்ணுக்கு நலம் சேர்ப்பவை’’ என்கிறார் மேரி.
வழிபாடு, பண்டிகை, திருவிழாக்கள், உணவு பழக்கம் போன்றவை சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களின் கலாச்சாரமாகவே இவர்களுடையதும் இருக்கிறது. அதிகமாக மீனை தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்கிறார் என்பதைத் தவிர, தயாரிப்பு முறையும் அந்த மாவட்ட மக்களின் முறையிலேயே இருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றபடி பழவேற்காடு, தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. கடலும் கடல் சார்ந்த இடமும் மனிதர்களின் அளவில்லாத ஆர்வத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. அதற்கு பழவேற்காடு ஒரு சிறந்த உதாரணம்.
மீன் குழம்பு செய்வது எப்படி?
மீனின் செதில், குடல் நீக்கி 6 அல்லது 7 முறை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். மீனை உப்பு, மஞ்சள் சேர்த்து பிசையக் கூடாது. அப்படி செய்தால் மீனின் சுவை குறைந்துவிடும். புளி ஊறவைத்து கரைத்து திட்டமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் மிளகாய்த் தூள், அரிந்த தக்காளி, வெங்காயம், மிளகு, உரித்த பூண்டு எல்லாம் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் சேர்த்து தாளியுங்கள். அதில் கரைத்து புளி கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். கரைசல் கொதித்து மிளகாய்த் தூள் வாசனை போனதும் அதில் கழுவி வைத்திருக்கும் மீன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
மீன் தித்தீப்பு செய்வது எப்படி?
மீன்களை வழக்கம்போல் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடகம் தாளித்து அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, பிறகு மீன் செர்த்து நன்றாக சுண்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
சுறாபுட்டு
சுறா மீனை துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து வேகவைத்து எடுக்கவும். வெந்துவரும்போது சுறாவின் மேல்தோல் தானாகப் பிரிந்து வந்துவிடும். வெந்த சுறாமீனை தோல் நீக்கி, தண்ணீரைப் பிழிந்து, அதில் இருக்கும் ஒரு முள்ளை நீக்கி உதிர்த்துக்கொள்ளவும். அரிந்த வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பூண்டு, அரிந்த பச்சை மிளகாய், அரைத்த மிளகு, சீரகம் இவற்றை வேகவைத்து உதிர்த்த மீனோடு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். இதில் பிசைந்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருங்கள். புட்டு அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெயை சற்று தளரவிடவும். நன்றாக புட்டு திரண்டு வாசனை வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
கார்த்திக், பத்திரிகையாளர். படங்கள்: மு.வி. நந்தினி.