பூ டிசைனை போடுவதற்கு ஏற்ற எம்பிராய்டரி இந்த லெய்சி டெய்சி தையல். கொடுத்து இருக்கும் பூ டிசைனை உங்களுக்கு விருப்பமான துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து, துணியின் கீழிருந்து குத்தி, டிசைன் கோட்டின் மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுந்தப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி , டிசைன் கோட்டிலேயே சிறிது இடைவெளி விட்டு ஊசியை வெளியே இழுக்க வேண்டும்.
அப்படி இழுத்தால் இலை போன்ற ஒரு அமைப்பு உங்களுக்கு கிடைக்கும். இதனை துணியோடு பொருந்தி நிற்கச் செய்வதற்காக உருவான இதழ் அமைப்புக்கு வெளியே குத்துங்கள்.
இதே போல துணியின் அடியிலிருந்து முன் இதழுக்கு பக்கத்தில் குத்தி மேல் இழுத்தால் அடுத்த இதழ் உருவாகும். இப்படியே பூ இதழ் முழுவதும் நிரப்பினால் அழகான தையல் கிடைக்கும்.