நல்ல தரமான பச்சரிசியை நற நற பக்குவத்தில், கிட்டத்தட்ட ரவையைவிட கொஞ்சம் பொடியாக அரைத்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு 600 கிராம் வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதை நன்கு வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தில் பச்சரிசி மாவை அதில் இட்டு நன்கு கிளற வேண்டும். இந்த மாவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இளகி இருக்கக் கூடாது. இதை அதிகபட்சமாக எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேல் ஊற வைத்தால் மாவில் புளிப்புத்தன்மை அதிகமாகி சுவை மாறுவதுடன் எண்ணெயும் அதிக அளவில் உறிஞ்சிவிடும்.
நன்றாக ஊறிய மாவினை மீண்டும் இளகு தன்மை அடையும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டை எந்த சைஸ் என்பது உங்கள் விருப்பம்தான். பின்னர் உளுந்து வடைக்கு தட்டுவது போல் தட்டில் தட்டி நன்றாக கொதிக்கும் எண்ணெயில் விட்டு பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.

இந்த மாவில் ஏலக்காய், சுக்கு, கசகசா சேர்த்து நெய்யில் சுட்டால் மேலும் சுவை கூடும்.
எண்ணை சட்டியில் சூடு சமமான அளவில் இருக்க வேண்டும் ஒரு புறம் நன்றாக வெந்தவுடன் மறுபக்கம் உடனடியாக புரட்டி போடாவிட்டால் கருகிவிட வாய்ப்பு அதிகம்