முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்…
நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்! நாம் பயன்படுத்தும் பெயிண்ட், சோப்பு, ஷாம்பூ, தரை துடைக்க பயன்படுத்தும் லிக்விட், பர்ஃபியூம் என அனைத்திலும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. குறைவாக உள்ளதால் உடனடியாக பாதிப்பு நமக்குத் தெரிவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவை சேரும்போதுதான் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின்றன.
வேதிப்பொருட்கள் சேர்ந்த பொருட்களின் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. ஆனால், சில பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க முடியாமல் உள்ளது. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது? மீண்டும் செடி வளர்க்கலாம்! ஆம். இம்முறை தொட்டிகளில் வளர்க்கலாம். பராமரிப்பு அதிகம் தேவைப்படாத, அதேசமயம் வீட்டில் சேரும் நச்சுக்களை இந்தச் செடிகள் உறிஞ்சிக் கொள்ளும்; இயற்கை ஏர் ஃபியூரிஃபையர் இவை!
முதலில் மணி பிளாண்ட் குறித்து பார்ப்போம்.

மணி பிளாண்ட் அதிகம் பராமரிப்பு தேவைப்படாத செடி. இந்தச் செடிக்கு வளமான மண்ணும், குறைந்த அளவிலான ஈரமும் சுமாரான வெளிச்சமும் இருந்தாலும் போதும். வீட்டின் வரவேற்பறையில் வைக்கலாம். சூரிய ஒளி சில மணிநேரங்களாவது படும்படி பார்த்துக்கொள்வது செடியை புத்துணர்வாக வைத்திருக்கும். வரவேற்பறையில் சூரிய ஒளிக்கு வாய்பில்லாதவர்கள், வீட்டின் வாசலில் வைத்து பராமரிக்கலாம்.
மணி பிளாண்ட்டில் பொதுவாக மூன்று வகைகள் உள்ளன. வெளிர் பச்சை நிறம், கோல்டன் மணி பிளாண்ட், இரண்டு கலந்த இலைகள் கொண்ட மணி பிளாண்ட். சிறிய கொடியை கிள்ளி வைத்தாலே செடி இலைகள் விட்டு படர ஆரம்பிக்கும். பிடித்துக் கொள்ள மரம் அல்லது கட்டடம் இருந்தால் வேர் மூலம் தன்னை நிலைநிறுத்தி பெரிய இலைகளை உற்பத்தி செய்யும் இந்தச் செடி.
மணி பிளாண்ட் காற்றில் உள்ள ஸைலின், பென்சின், ஃபார்மால்டிஹைடு, ட்ரை குளோரோ எத்திலின் போன்ற நச்சுக்களை உறிஞ்சிக்கொள்ளும்.
(தொடரும்)