1. ஸ்டஃப்டு குடமிளகாய்
தேவையானவை:
குடமிளகாய் – கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா – ஒரு கப், சோளமாவு – 3 டேபிள்ஸ்பூன்.
எப்படி செய்வது?
குடமிளகாயின் காம்பை நீக்கி விட்டு, உள்ளே லேசாக கத்தியால் கீறி விதைகளை எடுத்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் உப்புமாவை உள்ளே வைத்து, சோளமாவை கெட்டியாகக் கரைத்து, குடமிளகாயின் மேல்புறத்தில் வைத்து மூடவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை வரிசையாக அடுக்கி மூடி, உப்பு கலந்த தண்ணீர் தெளித்து 20 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.
2. சிவப்பு குடமிளகாய் தொக்கு
தேவையானவை:
சிவப்பு குடமிளகாய் – கால் கிலோ, தக்காளி – 2, பூண்டு – 4 பல், இஞ்சி – சிறிய துண்டு, மிளகாய்த்தூள் – காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
குடமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கெட்டியாக கிளறி எடுக்கவும்.
இதை சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி எல்லாவற்றோடும் சேர்த்து சாப்பிடலாம்.
3. குடமிளகாய் பொடி தூவிய பொரியல்
தேவையானவை:
குடமிளகாய் – கால் கிலோ, பயத்தம்பருப்பு – கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் (மூன்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும்), கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பயத்தம் பருப்பை வேக வைக்கவும் (குழைய வேக விட வேண்டாம்).கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேகவைத்த பயத்தம்பருப்பு, உப்பு, வறுத்து அரைத்த பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
4. குடமிளகாய் சட்னி
தேவையானவை:
குடமிளகாய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 4 முதல் 6 (நீளவாக்கில் நறுக்கவும்), கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலைமாவு – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடலைமாவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பச்சை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு நறுக்கிய குடமிளகாயை போட்டு வதக்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு கிளறி, மூடி சிறிது நேரம் கொதிக்க விடவும். மறுபடியும் நன்றாக கிளறி, சீரகத்தூள், துருவிய தேங்காய், வறுத்த கடலைமாவை போட்டு, மேலும் சிறிது நேரம் கிளறவும். வேறு பாத்திரத்தில் மாற்றி, எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
5. குடமிளகாய் பருப்பு உசிலி
தேவையானவை:
குடமிளகாய் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 5 (மூன்றையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த மிளகாய் விழுதை போட்டுக் கிளறவும். 15 நிமிடம் கிளறியதும், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து மேலும் நன்றாக கிளறி இறக்கவும்.