அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றை பலர் விரும்புகிறார்கள். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என லேபிளில் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தத் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, க்ளிசரின் போன்றவை இயற்கை மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவையே. சோடியம்-பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. கேஸ்டிக் சோடா என்ற பெயரில் அழுக்குகளை சுத்திரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கும்போது கைகளில், கண்களில் படாதபடி கவசங்கள் அணிந்தே செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பலர் வீட்டிலேயேயும் தயாரிக்கிறார்கள். ஆனால், இது தொழிற்சாலைகளில் தயாரிக்க ஏற்றது. அதோடு, கிளிசரின் எவ்வித பக்க விளைவும் அற்றது; பாதுகாப்பானது.
கடைகளில் விற்கும் சோப்புகளிலும் இதே மூலப்பொருட்கள்தான் சேர்க்கிறார்கள் எனில், அதையே வாங்கிக்கொள்ளலாமே? தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சோப்புகளில் சோப்பின் கடினத் தன்மைக்காகவும் நறுமணத்துக்காகவும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். நாம் தயாரிக்கும் சோப்புகளில் அவற்றை தவிர்க்கலாம். இயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தலாம்.
ரோஸ் சோப்:
ரோஸ் வாசனை உண்டாக்கிவிடலாம், ஆனால் எப்படி ரோஸ் நிறத்தை உருவாக்குவது… என யோசித்தபோது கிடைத்ததே குங்குமத்தை சேர்க்கும் யோசனை. அட்டகாசமான வெளிர் சிவப்பு நிறத்தை கொடுத்தது குங்குமம்! இனி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்…
தேவையானவை:
கிளிசரின் சோப் பேஸ் – 100 கிராம்
ரோஸ் எசன்ஷியல் ஆயில் – 6 சொட்டுகள் (ரோஜா பூவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாசனை எண்ணெய் இது)
ரோஜா இதழ்கள் – ஒரு பூவினுடையது
சோப் மோல்டு – சிலிக்கான் மோல்டு
(கிளிசரின் , ரோஸ் எசன்ஷியல் ஆயில், சோப் மோல்டு போன்றவற்றை கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளிலும் அமேசான் டாட் காம் போன்ற ஆன் லைன் வர்த்தக இணையதளங்களிலும் வாங்கலாம்.)
தூய்மையான குங்குமம் – சிட்டிகை அளவு
எப்படி செய்வது?
கிளிசரின் சோப் பேஸில் தேவையான அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக கத்தியால் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கனமான கைப்பிடி உள்ள சில்வர் பாத்திரத்தில் நறுக்கிய சோப்பை போடுங்கள்.
அடுப்பின் மீது அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதன் மேல் நறுக்கிய சோப்பு துண்டுகள் போட்ட பாத்திரத்தை வைத்தால்(டபுள் பாயிலிங் என்பார்கள்) சோப் உருக ஆரம்பிக்கும். நீர் போல உருகியது, அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, ரோஸ் எசன்ஷியல் ஆயில், சிட்டிகை குங்குமம் சேர்த்து கலந்துகொள்ளவும். இதை உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும். க்ளிசரின் சோப் உடனடியாக குளிர ஆரம்பித்துவிடும் எனவே அடுத்து செய்முறைகளுக்கு பொருட்களை அருகிலேயே வைத்துக்கொள்ளவும். சோப் மோல்டில் ஊற்றிய சோப் குளிர தொடங்கும் முன் ரோஜா இதழ்களை மேல் புறமாக தூவுங்கள். இரண்டு மணி நேரம் சோப்பை அறை வெப்பநிலையில் வைத்து குளிரவிடுங்கள். இதோ சோப்பு தயாராகிவிட்டது.
அக்குவா ப்ளூ கிளிசரின்செய்வது எப்படி?
இதே அளவில் கிளிசரின் சோப் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சங்குப்பூக்களை கைப்பிடியளவு பறித்து மிக்ஸியில் சில சொட்டுகள் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளுங்கள். விழுதாக அரைக்கத் தேவையில்லை. இந்தக் கலவையை தனியாக எடுத்து, அதில் சில சொட்டுகள் சூடான நீரை சேருங்கள். நீல நிற திரவம் உருவாகியிருக்கும். இதை வடிக்கட்டி வையுங்கள்.
கிளிசரினை மேலே சொன்ன முறையில் உருக்கி அடுப்பிலிருந்து இறக்குங்கள். இதில், நறுமணத்துக்கு உங்கள் விருப்பமான இயற்கை பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகள் சேருங்கள். அடுத்து சங்குப் பூவிலிருந்து எடுத்த நீல நிற திரவத்தை (100கி சொப்புக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நீல நிற திரவம் போதுமானது) சேர்த்து கலந்துகொள்ளவும். உடனடியாக மோல்டில் ஊற்றவும். அறை வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் உலரவிட்டு எடுத்தால், அக்குவா ப்ளூ சோப் தயார்!
நலுங்கு மாவு சோபு தயாரிப்பது எப்படி?
பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பூலாங் கிழங்கு ஆகியவற்றை பொடி செய்து தயாரிப்பதே நலுங்கு மாவு. பூப் பெய்துதல், வலைகாப்பு போன்ற சடங்குகளில் பூசுவார்கள். பெரிய காரணமெல்லாம் இல்லை, முகம் பொலிவாக இருக்கத்தான். இந்த மாவை வைத்து சோப் தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது நீங்களாகவே தயாரிக்கலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் நலுங்கு மாவில் அது மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து வையுங்கள்.
கிளிசரின் பேஸ் சோப் 100 கிராம் எடுத்துக்கொண்டு, மேலே சொன்ன டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளுங்கள். உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, திக்கான பசும்பால்(அல்லது எருமை பால் அல்லது ஆட்டுப்பாலும் சேர்க்கலாம்)இரண்டு டேபிள் சேர்த்து கலக்கவும். தேவையெனில் எசன்ஷியல் ஆயில் சேர்க்கலாம். (நலுங்கு மாவே வாசனையாகத்தான் இருக்கும். நாம் தயாரித்ததில் வாசனைக்காக எதையும் சேர்க்கவில்லை.) அடுத்து, எண்ணெயில் கலந்து வைத்த நலுங்கு மாவு கரைசலை சேருங்கள். நன்றாக கலந்து உடனடியாக சோப் மோல்டில் ஊற்றவும். இதன் மேலே அழகுக்காக மேல் புறம், சிறிதளவு நலுங்கு மாவை தூவிவிடுங்கள்.
மற்ற சோப்புகளை விட, இந்த சோப் செட்டாக நேரம் எடுக்கும். குறைந்தது நான்கு மணி நேரம் அரை வெப்பநிலையில் வைத்திருந்து, பிறகு மோல்டிலிருந்து பிரித்தெடுங்கள்.
வழக்கமாக பயன்படுத்தும் முறையிலேயே இந்த சோப்புகளையும் பயன்படுத்தலாம்!
இயற்கை வண்ணங்கள் பெற நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் பயனுள்ளது. நன்றி! நீங்கள் எழுதியிருக்கும் சோப் பேஸ் அல்லது கிளிசரின் காஸ்டிக் சோடா (எ) சோடியம் ஹைட்ராக்சைட் மூலப் பொருளாக வைத்து தயார் செய்யப்படுவதே….
நன்றி. ஆமாம்..நீங்கள் குறிப்பிட்ட மூலப்பொருட்களும் இயற்கையாக கிடைப்பவையே…