கடந்த 32 ஆண்டுகளாக பல வகையான கைவினைப் பொருட்களை கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணன், பெண்கள் இதழ்கள் மூலமும் தொலைக்காட்சி மூலமும் மக்களுக்கு அறிமுகமானவர். தன்னுடைய முப்பதாண்டு கால அனுபவங்களை கைவினை கலையில் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே கற்றுத்தர இருக்கிறார்.
தேவையானவை:
கண்ணாடி தம்ளர் – ஒன்று
டிசைன் வரைந்த பேப்பர்
டிஸ்ஸு துணி- கால் மீட்டர்
சில்பகார் – ஒன்று
பசை – ஒரு ட்யூப்
க்ளிட்டர் லைனர்கள் – வெளிர் நீலம், பச்சை, நீலம் நிறங்களில்
அக்ரலிக் நிறங்கள் – நீலம், கோல்டு
ஊதிபத்தி – ஒன்றி
வத்திபெட்டி – ஒன்று
கத்திரிகோல் – ஒன்று
முகபவுடர் -சிறிதளவு
அழுத்தம் தர – பென்சில், ஊசி
எப்படி செய்வது?
சாதாரண கண்ணாடி தம்ளரை வண்ணமயமான கலைப் பொருளாக மாற்றப்போகிறோம். தோசை விரித்தாடும் வண்ண மயிலை கட் ஒர்க் , க்ளே ஒர்க் மூலம் உருவாக்கப்போகிறோம்.
புத்தகத்துடன் இணைப்பாகக் கொடுத்திருக்கும் மயில் தோகை டிசைனை டிஸ்ஸு பேப்பரின் அடியில் வைத்து நான்கு பக்கமும் துணி நகராத படி க்ளிப் போட்டுக்கொள்ளுங்கள்.
இப்போது கீழே இருக்கும் டிசைன் தெளிவாகத் தெரியும். க்ளிட்டர் லைனர் எடுத்து அவுட் லைன்களை மட்டும் பிசிறு இல்லாமல் வரையுங்கள்.
தோகை விரிப்புகளைக் காட்ட கமா ஸ்ட்ரோக் போல நீள் வட்டங்களை சுற்றிலும் லைனரால் வரையுங்கள்.
மேலே இருக்கும் பூ போன்ற வளைவு டிசைன்களையும் க்ளிட்டர் லைனரால் வரையுங்கள்.
லைனரால் வரைந்து முடித்து, குறைந்தது இரண்டு மணி நேரம் உலர விடுங்கள். டிசைன் முழுவதும் உலர்ந்ததும் டிஸ்ஸு துணியை டிசைன் இருக்கும் பகுதி வரைக்கும் வெட்டிக் கொள்ளுங்கள்.
டிசைன் செய்து வெட்டிய துணியில் இப்போது கட் ஒர்க் செய்யப்போகிறோம். ஒரு ஊதிபத்தியை பற்ற வைத்து, தோகையின் உள் பக்கம் மட்டும் எரிக்க வேண்டும். இதுதான் கட் ஒர்க் வேலைப்பாடு.
ஊதுபத்தியை தோகை நடுப்பக்கம் வைத்து அப்படியே மெதுவாக அந்த இடைவெளியை மட்டும் பொசுக்கிக் கொண்டே வரவேண்டும். கறுப்பு படிவதைத் தடுக்க, ஊதி பத்தியை லேசா ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். டிசைனில் தோகை இருக்கும் இடங்களில் முழுமைக்கு இப்படி செய்ய வேண்டும்..
கிளாஸ் தம்பளரில் பசை தடவி கட் ஒர்க் செய்த டிஸ்ஸு துணியை இதோ இப்படி ஒட்டுங்கள்.
மயில் தோகை இப்போது தயார். மயிலின் தலை, கழுத்து பகுதியை சில்பகாரில் செய்து ஒட்ட வேண்டும். சில்பகாரில் இரண்டு பகுதிகள் வரும். அந்த இரண்டையும் ஒன்றாக பிசைந்தால் செராமிக் க்ளே தயார். இப்படி தயாரித்ததில் சிறு துண்டை எடுத்து உருண்டையாக உருட்டி அதை ஒரு பென்சில் அல்லது பிரஷ்ஷைக் கொண்டு சப்பாத்தி போல திரட்டுங்கள்.
திரட்டியதை தம்பளரில் உடல் பகுதி வரும் இடத்தில் பசை போட்டு ஒட்டுங்கள். இதில் ஒரு ஊசி கொண்டு அழுத்தி கோடுகளின் தடங்களை இப்படி உருவாக்குங்கள்.
மீண்டும் ஒரு உருண்டையை எடுத்து நீள் பொட்டு போன்ற ஷேப்பில் உருட்டுங்கள். முனையுள்ள பகுதியை விரல்களால் உருட்டி மயிலின் அலகாக மாற்றுங்கள். மேலே உருவாகியிருக்கும் தலை பகுதியில் ஒரு பென்சிலால் கண் போன்ற தோற்றம் தர அழுத்தம் கொடுங்கள். கழுத்துப் பகுதியிலும் அரை வட்டம் போன்ற அழுத்தங்களைக் கொடுங்கள். மயிலின் தலை, கழுத்து தயார். இதை உடல் பகுதியில் ஒட்டுங்கள். அரை மணி நேரம் உலர விடுங்கள்.
மயிலின் தலை மற்றும் உடல் பகுதிக்கு கோல்டு மற்றும் நீல நிறத்தை பூசுங்கள். இதோ தயாராகிவிட்டது வண்ணங்களால் ஆன மயில் கேண்டில் ஹோல்டர். இந்த தம்ளரின் உள்ளே மெழுகுவர்த்தியை வைத்து ஒளிருட்டலாம்!
வீடியோவில் காண…