கான்கிரீட் கலைப்பொருட்கள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இதில் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்று இலைகள் போன்ற கான்கிரீட் கலைப் பொருட்களை உருவாக்குவது. இதற்குத் தேவை உங்களுக்குப் பிடித்த ஒரு இலை, மணல், சிமெண்ட் கலந்த கலைவை மட்டும்தான்.
சிறிய இலைகள், அகலமான இலைகள், ஐந்து விரல்களைப் போன்ற இலைகள் , வட்டம், நீள் சதுரம் என பல வடிவ இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம். மணல், சிமெண்டை நீர் சேர்த்து கலக்கவும்.
ஒரு சமதளமான மரப்பலகை அல்லது அட்டையில் இலையை திருப்பி வைத்து அதன் மேல் கான்கிரீட் கலவையை தடிமனாகப் போடவும். மெலிதாகப் போட்டால் கையாளும் போது உடைந்துவிடும். இதை இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்கவும்.
இரண்டாவது நாள் உலர்ந்து கடினமாகியிருக்கும் இதை லேசாக அசைத்து அடியில் இருக்கும் இலையோடு கையில் எடுங்கள். இலையை கான்கிரீட்டில் இருந்து பிரித்தெடுங்கள். இப்போது இலையில் இருந்த கோடுகள் கான்கிரீட்டில் அப்படியே படிந்திருக்கும்.
பார்க்க இலைப்போன்ற கான்கிரீட் இலையை தோட்டத்தில் வைத்தோ, வரவேற்பறையில் வைத்தோ அலங்கரிக்கலாம்.