விதவிதமாக சமைத்து மட்டுமல்ல… சமைத்ததை விதவிதமாக அலங்கரிப்பதுவும் கலைதான்! ‘ஃபுட் ஸ்டைலிங்’ என்ற பெயரில் சமையலை பரிமாறும் கலை இப்போது பிரபலமாகிவருகிறது. சுவைபட தயாரிக்கும் உணவுகளை சுவைக்கத் தூண்டும்வகையில் கலைத்தன்மையோடு பரிமாறும் கலைதான் ஃபுட் ஸ்டைலிங். விருந்துகள், ரெஸ்டாரண்ட்டுகள், பத்திரிகை புகைப்படங்களுக்கு இப்படி அலங்கரிக்கப்பட்ட உணவுகளை பயன்படுத்துகிறார்கள். கேட்டரிங் கல்லூரிகளில் இப்போது ஃபுட் ஸ்டைலிங் பற்றிப் படிப்பது வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார் தமிழ்ப்பெண் நதியா ஆறுமுகம். ஆசியாவின் மணக்கும் சமையலை, தன் கற்பனைத் திறனில் மெருகேற்றி மேற்குலகுக்கு படைத்துக்கொண்டிருக்கும் இவரை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.
மலேஷியாவில் பிறந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் நதியா ஆறுமுகம். பின் மலேஷியாவிலிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தது நதியாவின் குடும்பம். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படித்த இவர், சமையல் கலை எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார். ‘ஃபிரெஷ்’ என்கிற இங்கிலாந்தின் ஃபுட் மேகஸினில் இரண்டாண்டு பணியாற்றியிருக்கிறார். தற்போது பிரபல பிஸினஸ் மேகஸினான ஃபோர்ப்ஸில் பிரத்யேக உணவு கட்டுரைகளை எழுதுகிறார்.
உலகின் பல்வேறு பத்திரிகைகளிலும் இவர் எழுதிக் கொண்டிருக்கிறார். பழக்கத்தின் மூலம் சமையல் கலையையும் சமையல் அலங்காரத்தையும் கற்ற இவர், Chop, Sizzle and Stir: Easy Recipes for Fabulous Stir-fries என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். ஆசியாவின் சிறப்பான வறுவல் வகை உணவுகளை இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நதியா.
சமையல் கலையும் வல்லுநரான இவர் அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் வழங்கும் காலை நிகழ்ச்சியைக் காண தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மார்த்தா ரேடியோவிலும் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். வலைதள எழுத்தாளராக இருக்கிறார்.
ஆசியாவின் சிறந்த ருசிமிக்க உணவுகளை மேற்கு உலகுக்கு அறிமுகப்படுத்தும் இவர், தன்னை கிழக்கு, மேற்கின் அற்புத கலவை என்கிறார். தற்போது கணவர் பீட்டருடன் நியூயார்க்கில் வசிக்கிறார்.
புகைப்படங்கள் : மைக்கேல் ஹர்ட்