தையல் கலையில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் நேரமின்மை காரணமாக வீட்டிலிருக்கும் தையல் இயந்திரம் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் அன்றாட வேலைகளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே வீட்டுக்குத் தேவையான துணிகளை நாமே தைத்துக் கொள்ள முடியும். வேலைக்குச் செல்பவர்கள் ஓய்வுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அலுவல் வேலைகளிலிருந்து மாற்றுக்கு இதை முயற்சிக்கலாம். எல்லாம் சரி தையல் தெரியாது என்பவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. தையல் ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. கற்பது எளிது. இப்போது ரூ. 4000லிருந்து மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் வாங்கி வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம்.
சரி, இதோ இந்த குஷன் கவர் தைப்பது எப்படி என்பதிலிருந்து நம் வகுப்புகளைத் தொடங்குவோம். சரியான அளவுகள், சரியான கட்டிங், சீரான தையல் இவற்றையெல்லாம் முதல் முறையே சரியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். பழகப் பழகத்தான் எந்தக் கலையும் கை வரும். இரண்டு தடவை சொதப்பலாம். மூன்றாம் முறை சரியாக வரும். நான்காம் முறை நேர்த்தியாக வரும். முயற்சியில் தான் எல்லாமே!
இனி வகுப்புகளுக்குப் போவோம்…
சற்றே திக்கான பயன்படாத துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது நைந்து போகாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் தையல் போட வசதியாக இருக்கும். உங்கள் வீட்டின் குஷன் துணியின் அளவை குறித்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீள, அகலம் 12*12 இன்ச் அளவில் இருப்பதாகக் கொள்வோம்.
இந்த அளவில் உறை தைக்க 16 இன்ச் நீளத்தில் 14 இன்ச் அகலத்தில் ஒரு துண்டை வெட்டிக் கொள்ளவும். 10 இன்ச் நீளத்தில் 14 இன்ச் அகலத்தில் மற்றொரு துண்டை வெட்டவும்.
முதல் துண்டில் அகல வாக்கில் ஒரு இன்ச் அளவிற்கு மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது துண்டிலும் இதே போல அகல வாக்கில் ஒரு இன்ச்சிற்கு மடித்து தைத்துக் கொள்ளவும்.
தைத்த முடித்ததும் இதோ இப்படி வைத்து நான்கு புறமும் தைப்பதற்கு ஏற்ப ஒழுங்கு படுத்தி பாருங்கள்.
ஒழுங்குபடுத்தியது தைக்கும்போது அளவு சரியாக வர துணிகளை மடித்த வாக்கிலே வைத்து அயர்ன் செய்துகொள்ளுங்கள்.
முதலில் தனித்தனியாக தைத்தவற்றைத் தவிர, இரண்டு தனித்தனி துண்டுகளின் நான்கு பக்கங்களையும் உள்பக்கமாக வைத்து ஒரு இன்ச் இடைவெளிக்குள் தையல் போடுங்கள். நான்கு பக்கமும் தையல் போட்டு முடித்ததும் தலையணை நுழைக்க வழி உண்டாகியிருக்கும். இதன் வழியே உறையை வெளிப்பக்கமாக திருப்புங்கள். இதோ நீங்களே தைத்த குஷன் உறை தயார். இதற்கு ஜிப் அல்லது பட்டன் வைக்கத் தேவையில்லை. அடுத்தடுத்து நாம் விதவிதமாக குஷன் உறைகள் தயாரிக்கலாம், இதை முயற்சித்துவிட்டு வாருங்கள்.
“தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி?” இல் 2 கருத்துகள் உள்ளன