பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்
குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள்.
இதற்கு தேவையானவை
சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல், கருப்பு நிற ஃபேப்ரிக் பெயிண்ட், பிரஷ்
செய்முறை:
கெட்டியான அட்டையில் பென்சிலால் இதோ இப்படி நரி முகம், ஒரு வட்டம், ஒரு நீண்ட முக்கோணம் ஆகியவற்றை வரைந்து வெட்டிக்கொள்ளுங்கள்.
வெட்டிய அட்டையை அடிப்படையாக வைத்து துணியில் நரிமுகத்துக்கு இரண்டு துண்டுகளையும் வாய் மற்றும் மூக்கு பகுதிக்கு தலா ஒரு துண்டையும் வெட்டுங்கள். படத்தில் காட்டியுள்ளபடி எதிர் எதிர் நிற துணிகளைப் பயன்படுத்துங்கள்.
நரியின் முன் பகுதியில் இதோ இப்படி வாய் மற்று மூக்கை வைத்து ஓட்டுத்தையல் போட்டு தைத்துக் கொள்ளுங்கள். தையல் இயந்திரம் இருந்தால் அதிலே இப்படி தையல் போடலாம்.
நரியின் முன் பகத்தை திருப்பி, இன்னொரு பாகத்தையும் பின்பக்கமாகத்திருப்பி, பஞ்சு அடைப்பதற்கு மட்டும் இடைவெளி விட்டு தையல் போடுங்கள். பிறகு இந்த இடைவெளி வாயிலாக பின்பக்கத்தை முன்புறமாக திருப்புங்கள். இதில் முழுவதுமாக பஞ்சடைத்த பிறகு, அந்த இடைவெளியை தையல் போட்டு மூடுங்கள். படத்தில் காட்டியுள்ளதுபோல கருப்பு நிற ஃபேப்ரிக் பெயிண்டால் கண் மற்றும் வாய் பகுதியை வரையுங்கள்.
பஞ்சடைத்த பொசுபொசு நரி முகம் தயார்!