அமுதா சுரேஷ்

சாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது! எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான்!
காதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில் நுழைகிறான், பின்பு அவன் பெரும் கொள்ளைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாறுகிறான், இந்த வட்டத்துக்குச் சற்று சளைத்ததல்ல மதவெறியிலும் இனவெறியும் மொழிவெறியிலும் நடக்கும் கலவரங்கள்! இன்று அரசியல்வாதிகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? அவர்களின் பின்புலத்தைச் சரியாய் ஆராய்ந்துப் பார்த்தால், கள்ளச்சாராயம், ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, என்று இன்னப் பிற குற்றங்களின் பின்னணியில் வந்தவர்களே, எளிதில் அரசியலில் நுழைகிறார்கள், தலைவர்களாகிறார்கள்! இப்படி வரும் தலைவர்கள் அதுபோல நிகழும் கலவரக் கொலைகளுக்கு எப்படிக் கண்டனம் தெரிவிப்பார்கள்?
நம்முடைய உணர்ச்சிவசப்படுதல் எல்லாம் அப்பாவிகளை நோக்கியே இருக்கிறது, ஒருநாளும் போட்ட ஓட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று எந்த அரசியல்வாதியையும் நோக்கிக் கேட்டு கிழிக்கும் கேள்வியாக இல்லை! கன்னடகர்களின் மிகப்பெரிய வன்மம், காவிரியை ஒரு துருப்பு சீட்டாய் வைத்துத் தமிழர்களின் வளங்களை, தொழில்களை, உயிர்களை நோக்கித் திருப்பி விடப்பட்டிருக்கிறது! அழகாய்ப் பேசித் தூண்டும் அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களை ஒடுக்கத் தவறி, அந்த அரசு செய்யும் தவறுக்கு, கன்னடர்கள் தங்கள் வளங்களையும் வேலை வாய்ப்புகளையும் இழந்து மிகப்பெரிய விலையை வருங்காலத்தில் கொடுக்க வேண்டி வரும்!
தமிழருக்குத் தீங்கு நடக்கும்போது தமிழர்களை அங்கிருந்துக் காப்பாற்றத் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வியே எழவில்லை, எல்லோரும் இந்தியர்கள் எனும் மத்திய அரசு, இதற்கு உடனடித் தீர்வு காண முனைய வேண்டியது அவசியம், அரசியல்வாதிகளைப் பற்றிச் செய்தியிட்டால் உடனே தேசத்துரோகம் என்றும், அவதூறு என்று கொதிப்பவர்கள், அமைதியாய் இருக்கும் அரசை நோக்கிக் கேள்வியெழுப்ப வேண்டும், நாங்கள்தான் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள், கட்சிப் பேதங்களை விடுத்து, ஒன்றாய்க் கூடி, தமிழர்களைக் காக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள நீர் வளங்களைத் தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும், ரசாயன ஆலைகளின் கழிவுகளில் நீர் மாசுபடுவதைத் தடுத்து, நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும், இப்படிச் செய்வதற்கு நிறைய இருக்கிறது அரசுக்கு, அதை எதையுமே செய்யாமல், சாராய விற்பனை சரிந்தால் கவலைப்பட்டும், இலவச மிக்சி கிரைண்டர் என்று மலிவான பொருட்களை மக்களிடம் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டும், அவ்வப்போது இலவசங்களில் ஒட்டு வாங்கி மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள், இதன் நடுவே குளிர் காயும் தேசிய கட்சிகள் என்று நாம் சுட்டிக்காட்ட, கேள்வி கேட்க நிறைய இருக்கிறது, எதுவுமே இல்லையென்றாலும், தமிழர்களாய் ஒன்று கூடி பெங்களூரில் வாழும் தமிழர்களை மீட்க வழிவகைக் காணலாம்!
அங்கே ஒருவனை ஒருவன் அடிக்க இங்கே இன்னொருவனை நாம் அடிக்க, அப்பாவிகள் மட்டுமே அடிவாங்குகிறார்கள், அயோக்கியர்களும், இனவெறியர்களும், சாதிவெறியர்களும், அரசியல் துரோகிகளும் அவர்கள் சிந்தும் ரத்தத்தில் குளிர் காய்கிறார்கள்!
இனி வருங்காலத்தில் இனத்துக்காகத் துடிக்கும் பாசம், இயற்கைக்காகவும் துடித்தால், மரங்கள் வெட்டப்படாமல், வளங்கள் கொள்ளையடிக்கப்படாமல், ஏரிகள் மனைகளாக மாறாமல், மணல் கொள்ளையடிக்கப்படாமல், மழைநீர்ச் சேகரிப்பை நாமே உவந்து செய்து, எனக் குறைந்தபட்சம் இதே உணர்வைப் புரட்சியை வடியவிடாமல் வைத்துக்கொண்டால், வருங்காலத் தலைமுறைக்கு இந்தப் பூமியிலிருந்தே நீர் கிடைக்கும்!