அமுதா சுரேஷ்

ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா “தி சோ கால்ட் ஆண்களின்” வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது
பர்முடாஸ் என்ற பெயரில் படித்தவன் அரைகுறை ஆடை அணிந்து திரிந்தாலும், அதன் மாற்றாக லுங்கியை, வேட்டியைத் தொடை தெரிய ஏற்றிக்கொண்டு திரிந்தாலும் எந்தப் பெண்ணும் அதைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துப் பகடி செய்வதோ, இல்லை அவர்களின் கையைப்பிடித்து இழுப்பதும் இல்லையே, குடித்துவிட்டு ஆணுறுப்புத் தெரியச் சாலையில் விழுந்து கிடக்கும் குடிகாரர்களை எந்தப் பெண்ணும் கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்வதில்லை, ஏன் என்றால் பெண்ணுக்குத்தான் கர்ப்பப்பை உள்ளது, ஆணுக்கில்லை என்பீர்கள், யார் தவறு செய்தாலும் பெண்ணுக்கு மட்டுமே விளைவுகள் என்பீர்கள்.
உண்மைதான், இது உண்மையென்றால், இதற்காகவே பெண்கள் இதைச் செய்யவில்லை என்றால் இங்கு அனாதை ஆசிரமங்களே தேவையில்லையே!
கொஞ்சம் இதையெல்லாம் தள்ளிவிட்டு யோசித்துப் பார்த்தால் உண்மையில் பெண்கள் காதலுக்காக ஒருவனைக் கொல்லும் அளவுக்குப் போகாததற்கான காரணம் உடல் பலத்தைத் தாண்டிக் குடும்பம், சமுதாயம், சுதந்திரம் என்ற சார்ந்த எண்ண ஓட்டமுமே காரணங்கள்!
பெண்ணைக் கேலிச் செய்யும் அளவுக்கு ஆணை யாரும் கேலி செய்வதில்லை, ஆண் குடித்தால் அது ஒரு சாதாரண நிகழ்வாகவும், பெண் குடித்தால் அது கலாச்சார அழிவாகவும் பார்க்கப்படுகிறது! அடுப்படியும் படுக்கையறையும் மட்டுமே எல்லையாக வகுக்கப்பட்ட பெண் குலத்துக்கு இன்று கிடைக்கும் கல்வி அவ்வளவு எளிதில் வாய்த்திடவில்லை, காதலுக்காக ஒருவனைக் கொன்றுத் தங்களை, தங்களைச் சார்ந்த குடும்பங்களைச் சாய்த்திட ஒரு பெண் விரும்புவதில்லை, பெண்ணின் காதல் ஒருவன் தன்னை ஏமாற்றினாலும், அவன் வாழாட்டும் என்றே நினைக்கிறது, பெரும்பாலான பெண்களின் காதலில் அன்பே பிரதானம், தன் தகப்பனைப் போலத் தன் காதலன்,கணவன் தன்னிடம் அன்பைப் பொழிய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, அது கிடைக்காத போது பெண் காதலை முறித்துக் கொள்கிறாள், அல்லது தன்னையே மாய்த்துக் கொள்கிறாள் அல்லது சூழ்நிலைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள்!
பெண்ணின் காதல் என்பது, பணத்துக்காக என்றும், காதலித்தவனை விட்டுவிட்டு அமெரிக்கா மாப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு ஏமாற்றுவது என்றுமே திரைப்படங்கள் முழங்கி வருகிறது, அதிலும் கதாநாயகிகள் எல்லாம் படித்தவர்களாக, அழகானவர்களாக இருக்க வேண்டும், கதாநாயகன் என்பவன் படிக்காதவனாக, பொறுக்கியாக, கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, சமூக விரோதியாக, அவலட்சணமானவனாக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், “எங்களை எல்லாம் பார்த்தாப் புடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்” என்று அவன் வசனம் பேசலாம், சற்றே கருப்பாய், குள்ளமாய், குண்டாய், தெற்றுப் பல்லாய் இருக்கும் பெண் என்றால் அவள் திரைப்படத்தைப் பொறுத்தவரை ஒரு “காமெடிப் பீசு”, சூப்பர் ஸ்டார் என்றாலும், சில்வர் ஸ்டார் என்றாலும் எந்த ஆணும் திரையில் பெரும்பாலும் பெண்ணைத் தனக்கு அடிமை என்றும், அடங்கி நடப்பவளே பெண் என்றும், வந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தன்னை விரும்புபவனைத் தான் விரும்புவதே நல்லது என்றும், பெண்ணுக்குக் கோபம் ஆகாதென்றும் பொன்மொழிகளை அடுக்கி வீசியிருக்கின்றனர்!
கதை, வசனம், பாடல்கள், விளம்பரங்கள் என்று எதிலும் பெண்ணை அவர்கள் முன்னிலைப்படுத்துவது வெறும் சதைப்பிண்டமாகவே! நகைச்சுவை என்ற பெயரில் ஆசிரியரை “சைட் அடிப்பது”, “ஆண்ட்டி” என்ற உறவு முறையை அசிங்கப்படுத்திப் பேசுவது, அழகற்றப் பெண்களைச் “சப்பை பிகர்” என்று பரிகாசம் செய்வது, இப்படியே இது போன்ற பிம்பங்களைக் கொண்டு இவர்கள் கட்டமைப்பது என்ன? பெண் என்பவள் அடிமைப்பட்டவள், உணர்வற்றவள், அழகிய ஒரு பொருள், ஆண் என்பவன் அடக்கி ஆளப் பிறந்தவன், அழகு அவனுக்கு முக்கியமில்லை, கல்வி அவனுக்குத் தேவையில்லை, ஒழுக்கம் அவனுக்குத் தேவையில்லை, புகைக்கலாம், சாராயம் குடிக்கலாம், பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கலாம், வன்புணர்ச்சி செய்யலாம், எல்லாம் செய்தாலும் அவனுக்கு அதற்கெல்லாம் ஒரு நியாயம் இருக்கும், அப்படியே அவனைக் கதையின் நாயகன், கதாநாயகன் என்று காட்சிப்படுத்துவார்கள்!
அளவுக்கதிகமான மாயையில் இளைஞர்கள் உழலுகின்றனர், தன் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடும் ஒரு நடிகனை, அவன் நடிப்புக்காக மட்டும் கொண்டாடாமல், ஒரு மாயப் பிம்பத்தில் சிக்கி, அவனையே கொண்டாடும் இளைஞர்கள் என்ன செய்வார்கள்?
அடிடா அவளை, வெட்றா அவளை என்று பாடல்கள் எழுதிய புண்ணாக்குகள் சொல்வதைத்தான் சில மிருகங்களும் அறிவிழந்து செய்கின்றன!
திரைப்படங்களைத் தாண்டினால், “போதை!”
“பாலாறு, காவேரித் தேய்ந்தாலும், சாராய ஆறு தேயாது” என்று சொல்லுமளவுக்குப் போதை!
குழந்தையுடன் உடலுறவு கொள்வதற்கும், குடும்ப உறுப்பினர்களைக் கொல்வதற்கும், கொலை செய்வதற்கும், எதற்கும் போதையின் பின்னே ஒளிந்துக் கொள்கிறார்கள் வக்கிரம் பிடித்த மனிதர்கள்!
“போதையில் இருப்பவன் ஒருநாளும் அடுத்த வீட்டுக் கதவை தட்டுவதில்லை, காவல்நிலையத்துக்கு வழிமாறிச் செல்வதில்லை, ஒரு மந்திரியின் காரை இடிப்பதில்லை, ஒரு வி ஐ பி யின் குழந்தையைக் கையைப் பிடித்து இழுப்பதில்லை” கை வைத்தால் உயிர் போகும் என்று தெளிவாய்தான் இருக்கிறார்கள் குடிமகன்கள்!
தவறு செய்வதற்காகவே குடித்து விட்டு ஒளிபவர்களே அதிகம்! சாலையோரக் குழந்தைகளை, ஏழ்மை பட்ட பெண்களை, தன் மனைவியை, தன் குழந்தைகளை என்று இவர்கள் வன்முறையை உமிழும் விதத்தில் போதை ஒரு காரணம் என்பதே பொய்! போதை அவர்கள் வக்கிரத்தை அதிகரித்துக் கொள்ளும் ஒரு வஸ்து, அதையும் தடுக்க முடியாமல் வளர்த்து விடும் உன்னதத் திராவிட ஆட்சிக் காலத்தில் இதிலெல்லாம் நாம் மாற்றத்தை எதிர்நோக்கவே முடியாது!
இந்த எல்லாக் காரணிகளையும் விட்டுவிட்டாலும், குடும்பம், வளர்ப்பு என்று ஒரு காரணி இருக்கிறது!
கணவன், மனைவியை நடத்தும் விதத்தில் ஒரு மகனுக்கு நடத்தைப் பாடம் எடுக்கப்படுகிறது! அம்மா என்பவள் அடங்கிக் கிடப்பவள், அவளுக்கென்று விருப்பமே இல்லை, அப்பா சொன்னால் மட்டுமே எல்லாம் சரியாய் இருக்கும் என்ற நிலை இருக்குமானால், அந்தப் பிள்ளை, வெளியில் தான் சந்திக்கும் பெண்களையும் அம்மா போலவே இருக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்குவதில் ஆரம்பிக்கும் பிரச்சனைகள்! அப்பா என்றில்லாமல், ஒரு தாய், மகன் முன்னே அவள் கணவனை ஒரு துரும்பைப் போலக் கீழ்மைப்படுத்தி நடத்தினாலும் கூடப் பிள்ளைகளின் மனநிலையில் பெண் என்றவள் பேய் என்றே எண்ணம் மிகுந்து, அதனாலும் மனப்பிறழ்வு உண்டாகும் நிகழ்வுகளைக் கூடக் கேட்டதுண்டு!
பெற்றவர் சரியாய் இருந்தாலும், வாய்க்கும் நண்பர்கள், “மச்சி குடிடா” என்றும், “ஒரு தம் போடு மச்சி” என்றும் சாக்கடைகளாய் வந்து சேர்ந்தாலும் இப்படித்தான் கொலைகள் நிகழும் சமூகமாக இது மாறிப்போகும்!
“நீ ஆம்பளை சிங்கம்டா” என்று கொம்பு சீவி, இவர்கள் அசிங்கங்களாகிப் போகிறார்கள் என்பதே உண்மை! ஒரு பெண்ணின் மறுப்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதளவில் சுருங்கிப் போகும் இவர்கள் எப்படிச் சிங்கங்களாக முடியும்? காட்டில் சிங்கமே என்றாலும், ஒரு பெண் சிங்கம் அங்கீகரித்தால் மட்டுமே அது ஆணாக முடியும்! விலங்குகள் கூடப் பெண் விலங்குகளை இணைவதற்காக வேட்டையாடுவதில்லை!
திரைப்படம், பெற்றோர், நண்பர்கள், சமூகம் எல்லாம் தாண்டிக் கல்விமுறையையும் நாம் சாட வேண்டும், பாலியல் கல்வி, சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு, நேர்மையான சட்டமுறைகள் எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்பட வேண்டும், ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியருக்கு 45 குழந்தைகள், பாடங்களையே சொல்லித்தர முடியாமல் திணறும் ஆசிரியர்கள் எப்படிப் பிள்ளைகளை வழிநடத்துவார்கள்?
பெற்றவர்களை விட ஆசிரியர்களிடம் நாங்கள் தோழமைகளாக நெருங்கிப் பழகினோம், அதுபோன்ற சூழல் இன்று இல்லை என்பதே கசப்பான உண்மை! ஆசிரியர் கூட இப்போதெல்லாம் “பிகர்” என்ற கணக்கிலேயே சித்தரிக்கப்படும் சூழலில் ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக இருக்கும், மாறும் நிலை எப்போது வரும்?
பெண்கள் செய்யாத தவறுகளை ஆண்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் சில கூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன், இதையும் தாண்டிப் பலநூறு காரணங்கள் வன்முறைக்கு, பிறழும் மனநிலைக்கு இருக்கலாம், எனினும் பல நூற்றாண்டுகளாக நீங்கள் பெண்களை வளர்த்தெடுத்ததைப் போல இனி ஆண்களையும் வளர்த்தெடுக்கலாம்!
வெட்டும் ஆணும் வேடிக்கை பார்க்கும் ஆண்களும் ஏற்கனவே பாதிப் பெண்கள்தான், ஒன்று முழுதாய்ப் பெண்களைப் போலவே வளர்த்துவிடுங்கள் இல்லையென்றால் மனப்பலத்தைப் பேணி ஆண் குழந்தைகளைப் பெண்ணைப் போலக் காத்திடுங்கள்!
இறுதியாக, பிடிக்கவில்லை என்றால் “வெட்டிவிடும்” இத்தனை வீரமிகுந்த ஆண்கள் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஏன் கொஞ்சம் “தட்டி” கூடக் கேட்பதில்லை”?
உண்மையில் இந்தக் கால ஆண்களின் வீரம் என்பது பெண்களிடம் மட்டும்தான், காதலும் கூடப் பெண்ணை ஒரு பொருளாகக் கருதி அவள் உடல் அடையும் வெறும் காம நோக்கமேயன்றி வேறு ஒரு மண்ணும் இல்லை!
அமுதா சுரேஷ் , ஐ டி கம்பெனியில் சென்டர் மானேஜர், இரண்டு குழந்தைகளின் தாய். நிகழ்கால சமூக-அரசியல் பல ஊடகங்களில் கட்டுரை எழுதிவருபவர்.
அருமையான பதிவு.
அருமையான பதிவு.