“இங்கே தரையில் படுத்திருப்பது குழந்தையல்ல. எனது இதயம்தான், தரையில் கிடக்கிறது. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. எனவே, வேறு யாரிடமும் சேர்ந்து இருக்க மறுக்கிறான். எனது பணியில் பாதி நாள் முடிந்துவிட்டது. ஒரு லோன் விடுவிக்கும் பணியில் நான் இருப்பதால் என்னால் லீவும் போட முடியவில்லை. காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திலும் என்னால் பணிபுரிய முடிகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதை சட்டசபையில் தூங்கும் தூங்கும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தவே” என்று புனேயைச் சேர்ந்த வங்கி ஊழியர் சுவாதி சிதால்கர் ஃபேஸ்புக்கில் படத்துடன் போட்ட பதிவு வைரலாகியுள்ளது.
முகப்பில் உள்ள இந்தப் படம் 5 நாட்களுக்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா டுடேவிடம் அவர் இந்த பதிவு குறித்து தெரிவித்த கருத்து:
“என் மகனுக்கு மூன்று வயது. காய்ச்சல் அவனை கணவர்தான் பார்த்துக் கொண்டார். ஆனால், அம்மா வேண்டும் என்று அவன் அழுது கொண்டேயிருந்தான். இதை போனில் எனது கணவர் கூறினார். என்னால் விடுமுறை எடுக்க முடியாததால், அலுவலகத்துக்கு மகனை கொண்டுவிடுமாறு கூறினேன். அவனை அருகில் கிடத்தியபடியே, நான் எனது அலுவலகப் பணியை முடித்தேன்.
நான் மட்டுமல்ல, உலகில் பல பகுதிகளிலும் உள்ள பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் பார்த்துக்கொள்கிறார்கள். எனவேதான் இதை வைத்து ஏன் அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தும் பொருட்டு, அந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்.
பொதுமக்களை, குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அமைச்சர்களுக்கு உள்ளது. எனது குழந்தையை நான் பார்த்துக் கொண்டதை போல, மக்களை அமைச்சர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.