ஐஸ்க்ரீம் செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
ஐஸ்கிரீம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்பே, ஃப்ரீஸரை ‘டீஃப்ராஸ்ட்’ செய்ய வேண்டும். ஹை கூலிங்-கில் வைக்க வேண்டும். அதன்பிறகுதான் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். ஐஸ்கிரீம் செட் ஆவதற்கு முன் அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்கக் கூடாது. ஐஸ்கிரீமின் மிருதுத்தன்மையே, கலவையை மீண்டும் மீண்டும் நன்கு ‘பீட்’ செய்வதில்தான் உள்ளது. முட்டை அடிக்கும் கருவி அல்லது மரக்கரண்டியைப் பயன்படுத்தலாம்.
ஃப்ரீஸருக்குள் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைப்பதற்கு, மூடிபோட்ட அலுமினியப் பாத்திரத்தை (பெரிய டிபன் பாக்ஸ் அளவில்) உபயோகியுங்கள். அதை ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து, இறுக்கமாக மூடிய பின் தான் ஃப்ரீஸரில் வைக்கவேண்டும்.
ஐஸ்கிரீம் செய்வதென்றால் முதல் நாள் இரவே செய்துவிடுங்கள். மறுநாள் காலையில் நன்றாக செட்டாகி இருக்கும். ஏனென்றால், ஐஸ்கிரீமை உள்ளே வைத்துவிட்டால், 6 மணி நேரத்துக்காவது ஃப்ரிட்ஜைத் திறக்காமல் இருந்தால்தான், கடையில் வாங்கும் ஐஸ்கிரீம் போல ‘க்ரீமி’யாக இருக்கும்.
கிரீம் செய்வதற்கு: ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சவும். அப்பொழுது மேலே படியும் ஏடை எடுத்து சேர்த்துக்கொண்டே வரவும். கடைசியில் இதை மிக்ஸியில் வெண்ணெய் எடுக்கும் பட்டனை (விப்பர்) உபயோகித்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் கிரீம். வீட்டில் செய்ய முடியாதவர்கள், கிரீமை கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
பிஸ்தா ஐஸ்கிரீம்
தேவையானவை:
பால் – 3 கப்
சர்க்கரை – முக்கால் கப்
கார்ன்ஃப்ளார் – 5 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்,
யெல்லோ + க்ரீன் கலர் – ஒரு சிட்டிகை
க்ரீம் – ஒரு கப் (செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது)
பிஸ்தா பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரையையும் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும். எசன்ஸும் கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து (பீட் செய்து), க்ரீமை சேர்க்கவும். பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும். உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும். ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும்.