காலை வேளைகளில் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் போது அவர்களைச் சூழும் பரபரப்பைப் பார்த்தால் என்னையும் ஒருவகையான பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம்புரியாத வேதனை ஏறிக்கொள்கிறது.
என் காலத்தில் பள்ளிக்குச் செல்வது இவ்வளவு அவசரமான, எரிச்சலான விடயமாக இல்லை.
நீண்ட தூரம் பள்ளிக்கு நடந்துசெல்லவேண்டும். தம்பியையும் தங்கையையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும். காலை மணி ஒலிக்கும் முன்பே பள்ளியைச் சேர்ந்து விளையாடத் தொடங்கியிருப்போம். பள்ளியின் பொழுதுகள் நீண்ட, மெல்ல நகரும், அவசரமற்ற பொழுதுகளாகவே இருந்தன.
மாலையும் பள்ளி முடிந்தவுடனேயே வீட்டிற்குத் திரும்பும் வழக்கம் எல்லாம் இல்லை. மரங்களுக்கு இடையேயும் மைதானத்திலும் ஓடிக்களைத்து தான் வீட்டிற்குத் திரும்புவோம். அன்று குழந்தைகளாய் நாம் தனியே உலாவ, எங்கும் சென்றுவர பாதுகாப்பு இருந்தது.
இன்று அப்படியில்லை. அவர்களை எங்குமே தனியாக அனுப்ப முடிவதில்லை. அவர்களுக்கு ஒரு நாள் பொழுது என்பதும் போதவில்லை. பெரும்பான்மையான நேரத்தை தொலைக்காட்சிப்பெட்டிகள் எடுத்துக் கொள்கின்றன. இதனால் எழும் நேரப்பற்றாக்குறையை, சிக்கலை பரபரப்பாகி, பதட்டமாகிக் கழித்துக் கொள்கிறோம். குழந்தை கவனிப்பைப் பொறுத்தவரை, ‘நேர மேலாண்மை’ மிக அவசியமான தேவை.
நேர நெருக்கடியில் குழந்தைப் பருவம் சுக்குநூறாக நொறுங்கிப் போவதைப் பார்க்கையில் தோன்றும் கவலை என்னவென்றால், வளர்ந்துவிட்டதும் இவர்கள் தங்கள் பால்யம் பற்றி நினைத்துப்பார்க்க இவர்களிடம் என்ன வண்ணங்கள், நினைவுகள், கனவுகள் இருக்கும் என்பது தான்.
இன்று தாயும் தந்தையும் தங்களின் அன்றாட அலுவல்களுக்கும் ஓட்டங்களுக்கும் இடையே தான் தங்கள் குழந்தைகளைக் கவனிக்கின்றனர்.
அம்மாவும் அப்பாவும் காரின் முன் வரிசையில் இருக்க அவர்களின் குழந்தை பின்னிருக்கையில் ஃபோனில் விளையாடிக் கொண்டு செல்லும் காட்சி ஒன்றை நேற்று பார்த்தேன். ஏனோ மிகுந்த ஆபத்தான காட்சிகளில் ஒன்றாக இது தோன்றியது.
தூக்கத்திற்கு இடையே கனவு கண்டு சிரிக்கும் முழுமையான தூக்கமெல்லாம் குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை. இனிமையான, ரம்மியமான பொழுதுகளும் வீட்டில் கிடைப்பதில்லை.
எந்தக் குழந்தையைப்பார்த்தாலும், அவர்கள் ஏதோ பரபரப்பான ‘கன்வேயர்’ பெல்ட்டில் ஏறி நகர்ந்து கொண்டே இருப்பதைப் போலத் தோன்றும். அப்படியே இயந்திரகதியாய் அசைந்து சென்று அவர்களின் எதிர்காலத்திற்குள் குதித்துவிடுவார்கள் போல.
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ரேவதி மேடம். போன வாரம் தான் நான் சென்னை சென்று யு கே ஜி படிக்கும் என் பேரனுடன் ஒரு வாரத்தைக் கழித்துவிட்டு ஹைதிராபாத் வந்தேன். நீங்கள் எழுதியுள்ளது அனைத்தும் உண்மைதான் அவர்கள் பெரிய் மனுஷித்தனம் நம்மை பிரமிக்க வைப்பதுடன் மிரளவும் வைக்கிறது என்றால் மிகையில்லை உங்களது எழுதும் நடை மிக அழகாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்