காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 51

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

காது வலி:

காது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம்.

பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்சிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப் படித்தேன். காது, மூக்கு, தொண்டை பற்றிய கட்டுரையை எழுதியவர் டாக்டர் கே.கே. ராமலிங்கம்.

இதோ அவரது அனுபவக் குறிப்பிலிருந்து சில துளிகள்:

காதில் வலி என்று வரும் எல்லோருக்கும் காதில் பிரச்னை இருக்க வேண்டியதில்லை என்கிறார் டாக்டர் கே.கே. ராமலிங்கம். மூக்கிலோ தொண்டையிலோ பாதிப்பு இருக்கலாம். ஈறு, தாடை, டான்ஸில், அடினாய்டு ஆகிய பகுதிகளில் வீக்கம், காயம் இருந்தால் கூட அது காது வலியாக உணரப்படக் கூடும். பல்லில் ஏற்படும் கோளாறுகள் கூட சிலருக்கு காதுவலி போல தெரியும். இப்படி இருக்கக் காரணம் மூளையின் தப்பான முடிவுகள் தான். எங்கிருந்தோ வரும் வலிகளைக்கூட காது வலி என்று நினைத்து ஏமாறுகிறது நம் மூளை. இதற்குக் காரணம் காதிலிருந்து மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கும் சில நரம்புகள் உடலின் மற்ற பாகங்களோடும் தொடர்பு கொண்டிருப்பதுதான். பல், தாடை, மூக்கு ஆகிய இடங்களில் தொந்திரவுகள் இருந்து வலி ஏற்பட்டால் அது காதிலிருந்து வரும் வலி என்று நமது மூளை காதில் அந்த வலியை உணரச் செய்கிறதாம்.

இதைப் பிரச்னை தவிர, காதில் கொப்புளங்கள் இருந்தால், காதில் சீழ் வருவதால், காதில் பலமாக அடிபட்டால் காதில் வலி வரலாம். காதுக்குள் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டது என்று சிலர் காதிற்குள் குச்சி, பின் போன்றவற்றை போட்டு கன்னாபின்னாவென்று குடைந்து விடுவார்கள். இதனாலும் காது வலி வரலாம்.

காதில் புகுந்துவிட்ட எறும்பு போன்ற பூச்சிகளை எப்படி வெளியே எடுப்பது?

மினரல் வாட்டர் அல்லது சிறிது ஆலிவ் எண்ணைய் காதிற்குள் விட்டால் பூச்சி அதில் மிதந்து வெளியே வந்துவிடும். அல்லது வெளிச்சம் அல்லது சூரிய ஒளிக்கு காதைத் திருப்பினால் பூச்சி வெளியே வந்துவிடும். அப்படியும் வெளியே வரவில்லை எனில் மருத்துவரிடம் காண்பிப்பது நலம்.

காதில் ஈ!

கிராமப்புறங்களில் வசிக்கும் பலருக்கு காதில் இரைச்சல் கேட்கும். கிராமப்புறங்களில் ‘காதில் ஈ எடுக்கிறேன்’ என்று சிலர் ஏமாற்றுவேலை செய்வார்கள். ஏன் இந்த இரைச்சல் கேட்கிறது? கிராமப்புறங்களில் வசிக்கும் பலர் காலில் செருப்பு அணிந்து கொள்வதில்லை. வெறும் காலோடு நடப்பதால் நாக்குப்பூச்சிகள் காலில் உள்ள பித்த வெடிப்புகள் வழியாக உடலினுள் சென்று விடுகின்றன. நமது குடல்களில் தங்கிவிடும் இந்தப் பூச்சிகள் அங்கேயே பல்கிப் பெருகி, அங்கேயே நமது இரத்தத்தின் ஒரு பகுதியையே உண்டு வாழ்கின்றன. இதனால் கிராமப்புற மக்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டு காதிற்கும், மூளைக்கும் போகவேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்கிறது. இதை அங்குள்ளவர்கள் காதிற்குள் ஈ புகுந்து சத்தம் போடுவதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஏமாற்றும் ஆசாமிகளும் பத்து இருபது என்று வாங்கிக் கொண்டு ஈ எடுப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் ஈ எடுத்த பின்னும் இந்த இரைச்சல் தொடருகிறது. இது காதில் உள்ள பிரச்னை என்று இவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம்.

காதில் சீழ்

சாப்பிடும் உணவில் சத்துக் குறைவாக இருப்பதும், சுகாதாரமற்ற சூழலில் வசிப்பதும், ஜலதோஷம் பிடித்தால் அதை குணப்படுத்த முயற்சிக்காமல் அலட்சியப்படுத்துவதும் தான் காதில் சீழ் வடிதலுக்குக் காரணம் என்கிறார் டாக்டர் கே.கே. ராமலிங்கம். இந்தக் காரணங்களால் இதனை ஏழைகளின் நோய் என்றும் சொல்வார்களாம். இந்த மக்களுக்கு ஆரோக்கியமாக தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாததாலேயே இந்த நோய் வருகிறது. காதில் அடிபடுவது, டைபாய்டு காய்ச்சல், அழுக்கு எடுக்கிறேன் என்று காதை கன்னாபின்னாவென்று குடைந்து செவிப்பறையை சேதப்படுத்திக் கொள்வது முதலியவை கூட காதில் சீழ் வடிவதை ஏற்படுத்தும்.

காதில் சீழ் வடிவதால் கேட்கும்திறன் 30% வரை குறைகிறது. காதில் சீழ் வடிவதில் ஆபத்து, ஆபத்தில்லாத நிலை என்று இரண்டு நிலை இருக்கிறது.

சிலருக்கு செவிப்பறையின் மையத்தில் துளை இருக்கும். தலையணை நனையும் அளவிற்கு சீழ் வடியும். ஆனால் இதில் துளிக்கூட நாற்றம் இருக்காது. இந்த நிலையை ஆபத்தில்லாதது என்று சொல்லலாம். ஆபத்தான நிலையில் இருப்பவர்களின் காதுகளில் அதிகம் சீழ் வெளியே வராது. காதிற்குள்ளேயே இருக்கும். ஆனால் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். செவிப்பறையின் நடுவில் துளை விழாமல் விளிம்புகளில் எலும்பை ஒட்டி ஓட்டை ஏற்பட்டு எலும்பை அரிப்பதுதான் இந்த துர்நாற்றம் ஏற்படக் காரணம். இவர்களுக்கு நடுக்காதுக்குள் சதை (Cholesteatoma) வளரும். இதுவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், திடீர் மயக்கம் வரும். வாந்தி வரும். முகம் கோணிப்போகும். காது எலும்பு பாதிப்பு முளைக்கும் பரவி உயிருக்கே ஆபத்து நேரும் வாய்ப்புகளும் உண்டு.

அடுத்தவாரம் தொடர்ந்து பார்ப்போம்.

“காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. ஒருமுறை காதில் நுழைந்த வண்டு ஒன்றை எடுக்க நள்ளிரவில் ஒரு தனியார் கிளினிக்கில் எனக்கு செய்த கொடுமைகள் நினைவுக்கு வருகின்றன. இப்போது கூட என் இடது காது லேசாக மக்கர் செய்கிறது!!

  2. காதுக்குள் பூச்சி போய்விட்டால் தண்ணீரை விட்டு விட்டு சடார் என்று தலையை சாய்த்தால் பூச்சி வந்து விடும். அப்படி செய்த அனுபவம் உண்டு.
    நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.