குட்டி ரேவதி

இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள்!
கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது?
ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும் சமூகநிலையும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் எப்பொழுது மாறும்?
இன்னும் அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா? இவர்களின் வசதியான பின்னணி நீதிக்கும் தண்டனை நடவடிக்கைகளுக்கும் தயக்கம் தருவது ஏன்?
கொடியகுற்றம் செய்யும் தலைமுறையின் உச்சபட்ச வரம்பு 16 ஆக இருப்பது, ஆண் சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கும் பண்பிற்கும் இழுக்கு இல்லையா? எனில், ஆண்கள் எப்படி குடும்பத்தின், சமூகத்தின் தலைவர்களாக இனியும் தம்மை முன்வைத்துக்கொள்ளமுடியும்? அவர்கள் தங்களைத் தாங்களே பதவியிறக்கம் செய்துகொள்வது தானே இது?
இந்தியாவில், ‘நிர்பயா’வின் மீது நிகழ்ந்துள்ள கொடூரத்திற்கு இணையான வல்லுறவும் கொலையும் நிகழ்ந்துள்ள தலித் வன்முறைகளின் போது ஏன் இந்தச்சமூகம், சட்டமசோதாவைத் திருத்தவில்லை?
கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் பெண்ணியவாதிகளின் ஆதரவு இருந்தாலும் நான் இதைக் கடுமையாக எதிர்க்கிறேன். மிகவும் பிழையான நடவடிக்கை இது என்று உணர்கிறேன்.
இந்தியாவின் சமூகப்பின்னணி, சாதிமயமானது என்பதை ஆதரிக்கும் முகமாகவே ‘நிர்பயா’வின் மீதான வன்முறை மட்டும் ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது.
இதைப்புரிந்துகொள்ளாதவரை இதை ஆண்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகவே பாவிக்கும். ஒருபொழுதும் குற்றம் குறைக்கும் நடவடிக்கையாக, நீதி நடவடிக்கையாக இது மாறாது.
தொடரும் இந்த மனநிலை, பெண்களையும் ஆண்களையும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே முன்வைக்கும். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை. தண்டனை என்பது எப்பொழுது நீதியாக மாறும், எப்பொழுது எல்லோரும் வயது வந்தவர்கள் எல்லோரும் வயதில் முதிர்ந்தவர்களாவார்கள்.
இவ்வளவு குழப்பமான, தயக்கமான, பாரபட்சமான தண்டனையை நீதி என்று ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பேசாமல், ஆண்கள் போய் செவ்வாய் கிரகத்திலும், பெண்கள் வீனசிலும் வாழலாம்.
குட்டிரேவதி, எழுத்தாளர். களப்பணியாளராகவும் திரைப்பாடலாசிரியராகவும் பணியாற்றுகிறார்.