டெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே.
நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல் நம் நாடாளுமன்றத்தில் இல்லை. சர்வதேச குழந்தைவுரிமைகள் ஆணையம் குழந்தை என்பதை 18 வயதாக வரையறுத்து வைத்திருப்பதால் அதை மீறி இந்தியா குறைக்க முடியாது என்கிற சட்டச்சிக்கல் ஒருபுறமிருக்கட்டும்.
இந்தியா தன்னிச்சையாக சட்டமியற்றி குற்றவாளி குழந்தைகளின் வயதை 16ஆக குறைத்து விட்டால் இந்தியாவில் இனி பாலியல் குற்றங்கள் நடக்காதா? இதற்கான உத்திரவாதத்தை யார் தருவர்? மணிப்பூரில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பாலியல் வன்முறைக்கு இதுவரை ஏன் தண்டனை அளிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சிறுமிகளை தின்று போடும் பாதுகாப்பு படையினர் எத்தனைப் பேரை தண்டித்தோம் நாம்.. பாலியல் குற்றவாளிகளான குரியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் எத்தனைப் பேருக்கு தண்டனை கிடைத்திருக்கு. ஆஸாராம் பாபு போன்ற சாதாரண சாமியார் அவருக்கு எதிரான சாட்சிகளைக் கொன்று வருகிறாரே இது எப்படி நடக்கிறது. ஹரியானா உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தினம் தினம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கிறார்களே அவர்களுக்கு இதுவரை நமது இந்திய நீதிமன்றங்கள் நீதி வழங்கியிருக்கிறதா? சாதிவெறிப் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா?
ஆணாதிக்க சாதிவெறிப் பிடித்த நமது இந்தியச் சமூக கட்டமைப்புப் பெண்களை எந்நிலையிலும் எந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நிலையில் வைத்திருக்கிறது. பெண் வெறுப்பை பெண் இழிவை கொண்டாடும் உளவியலை ஆண்களுக்கு புகட்டுகிறது. குடும்பம் சமூகம் கல்வி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கனென ஒரு ஆண் குழந்தையின் உளவியலை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலுள்ள அனைத்தும் பெண்களை சக உயிரியாக பார்க்க பழக கற்பிக்க தவறியதன் பண்பாட்டுப் பேரழிவு இது. பொது சிவில் சமூகமே அறமற்ற நேர்மையற்ற நீதியற்ற நிலையில் இயங்கும் போது அதன் விளைப்பொருளான குழந்தைகள் குற்றவாளிகளாக மாறுவதில் வியப்பில்லை. அவர்கள் கண்முன் குற்றவாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக சுதந்திரமாக நடமாடும்போது நாமும் குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நாம் குற்றவாளிகளாக இருக்கும்போது குழந்தைகள் குற்றவாளிகளாகதான் இருப்பார்கள். குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனைக் கொடுத்து தப்பிவிடலாமென்று ஆள்வோரும் அதிகாரிகளும் நினைக்கிறார்கள். சமூக ஆர்வலர்களும் இதை தான் விரும்புகிறார்கள் எனும் போது எவ்வளவு அறியாமையில் அதிகார வர்க்கத்தின் பிம்பங்களாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
ஊடக பயங்கரவாதம் பெரிய சுறாக்களை தப்பவிட்டு எளிதாக கிடைக்கும் சிறு கெண்டைகளைப் பலியிடத் துடிக்கிறது. இதை தின்று செறிக்கும் மகா பொதுசனம் சிறுவர்கள் சிறைக்கம்பிக்குள் இருந்தால் ரேப்பை தடுத்துவிடலாம் எனும் நஞ்சை திரும்ப வாந்தியெடுக்கிறார்கள். சாதி, மத, அதிகாரம் அந்தஸ்து பார்க்காமல் பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் சிறைக்குள் தள்ளுங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பார்கள் குற்றவாளியாக மாட்டார்கள். அதிகாரமுடைய பணபலமுள்ள குற்றவாளிகளைச் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு குழந்தைகளைக் குற்றாவாளிகளாகிச் சிறைக்குள் தள்ளணும், என்ன லாஜிக் இது? இங்கு மாற்றபட வேண்டியது குழந்தைகளின் வயதல்ல. மாற்றம் நமது கல்விமுறையில் பெண்களைப் பற்றிய சாதி மத சமூக மதிப்பீடுகளில் மற்றும் சட்டத்தின் ஆட்சி முறையில் நிகழ வேண்டும். குறைந்தபட்சம் வர்மா கமிட்டி பரிந்துரையைக்கூட செயல்படுத்த துணிவில்லாத ஆட்சியாளர்கள் குழந்தையின் வயது குறைக்கப் போராடுகிறார்கள். என்ன முரண்பாடு? இவர்களுக்குதான் பெண்களின் சுதந்திர வாழ்வு மீது எவ்வளவு அக்கறை.
கொசுறு: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலை அழைத்து நூல் வெளியிட்ட குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையை கிளுகிளுப்பு கதையாக்கும் போர்னோ ரைட்டர் சாருநிவேதிதாவை எதிர்த்து எத்தனை பேர் குரல் கொடுத்தாங்க. சாநிதான் தமிழின் ஆகச்சிறந்த முற்போக்கு எழுத்தாளனென முன்நிறுத்தும் தமிழ் தி இந்து மற்றும் தினமணி ஊடகங்களை நோக்கி உங்களின் முணகல் கூட கேட்கவில்லையே ஏன்?