தி. பரமேஸ்வரி

புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது.
அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத் துன்புறுத்துதல், வக்கிரப் புணர்வுகள் தாண்டி மேலும்பல புதுமையான வன்முறைகளைத் தேடிச் செல்கிறது ஆண்மனம். அதுவே பாலியல் இன்பமாகவும் அமைகிறது. போர்னோ வலைதளங்களிலும்கூட பெண்ணின் அனுமதியற்று எடுக்கப்படும் காட்சிகள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. பெண்ணின் அருவருப்பு, அதிர்ச்சி, பயம் போன்றவை ஆணுக்கான பாலியல் தூண்டலாகின்றன. தெருவில் நடந்து செல்லும்போது எதிர்வரும் ஆண், சட்டென்று தன் குறியை வெளிக்காட்டும்போது அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் அருவருப்பும் அவனுக்கான பாலியல் மகிழ்வை வழங்குகிறது. இப்படிச் செய்ய இயலாத சமூகம்குறித்த பிரக்ஞையுள்ள ஆண்களுக்கு அந்த நல்வாய்ப்பைச் சமூக வலைதளங்கள் வழங்கியுள்ளன.
பெண்களின் உழைப்பைத் தொடர்ந்து சுரண்டும் குடும்பக் கட்டுமானத்தின் பேரலகான ஆணாதிக்கச் சமூகம், பல்வேறு இறுக்கமான நியதிகளின்மூலம் பெண்களின் இயக்கத்துக்குத் தடைபோடத் தொடர்ந்து முயற்சித்தே வருகிறது. தடைகளையும் மீறி இயங்கும் ஒரு பெண், ஆணைப் பதற்றத்துக் குள்ளாக்குகிறாள். ஆண் மனத்தில் உறைந்திருக்கும் காமமும் மீறுபவளை அடக்க நினைக்கும் வன்முறையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. இணைய யுகத்தில் தனக்கு எதிரில் இல்லாத எதிரியுடனும் போராட வேண்டிய சிக்கலுக்குப் பெண் உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.
ஆண்களின் கருத்தியல்களால் இயங்கும் பொதுச் சமூகத்தில், பெரும்பான்மை ஆண்கள் இயங்கும் சமூக வலைதளங்கள், அவர்களினன் காமத்திற்கான பெரு வெளி; அங்கே உலவும் பெண்களெல்லோருமே பாலியல் பண்டங்கள்.
அண்மைய உதாரணங்களாக கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் மீதான மதம்சார் வன்முறை, கவிஞர் தமிழ்நதி குறித்து ஆணாதிக்க வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவு போன்றவற்றைச் சொல்லலாம். பெண் கவிஞரொருவர் எழுதிய பதிவுக்கு மற்றொரு ஆண் எழுத்தாளரும் அவருடைய தோழியும் எழுதிய பதில்கள் ஆபாசத்தின் உச்சம். பெண் கவிஞருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பத்திரிகையாளரையும் மிக மோசமான வசவுகளால் தாக்கியதுடன் சமூகத்தளத்திலேயே இயங்காத அவருடைய தாய், மனைவி, பெண் குழந்தை ஆகியோரையும் பாலியல் வன்முறைசார் சொற்களால் இழிவுபடுத்தினர். இன்றைக்கு அவர்களே சமூக நீதி பேசுபவர்களாகவும் இருக்கிறார்களென்பது நகைமுரண்.
பெண் எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து மரபான ஒழுக்க விதிகளின்பேரால் அருவருப்பான வசவுகள் கொண்டு அவரைத் தாக்கிப் பதிவிட்டதுடன் தங்களை மரபைக் காக்கும் காவலர்களாகக் கருதி, பிற பெண்களுக்கு உடைபற்றிய அறிவுரைகளையும் வாரி வழங்கியிருந்தனர்.
நண்பர்கள் விரும்பும் பக்கங்களை நமக்கும் காட்டித் தரும் முகநூல் பக்கங்களில் இரவின் இருளில் பதுங்கிவரும் ஆபாசப் பாலியல் பக்கங்களுக்கு விருப்பக்குறியிடும் எழுத்தாளர்களைக் கண்டு நான் அதிர்ந்ததுண்டு.
ஸ்மார்ட் போன்கள் மலிந்துபோயிருக்கும் நவீன காலத்தில், கடுமையான சட்டங்களுக்குப் பிறகும்கூட, பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்குக் குமுதம் ரிப்போர்ட்டரின் லெக்கிங்ஸ் பற்றிய கட்டுரையில் பகிர்ந்திருந்த பெண்களின் (அவர்களுடைய அனுமதியின்றி எடுக்கப்பட்ட) புகைப்படங்களே சாட்சி.
மரபான விதிகளாலும் இறுக்கமான மத – சாதிய அமைப்புகளாலும் உடல், மனரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த பெண், சமூகத் தளங்களில் இயங்குவதும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஆண்களால் விரும்பப்படுவதில்லை. பெண் கருத்து சொல்பவளாகவும் மரபான நடவடிக்கைகளை மறுத்து இயங்குபவளாகவும் இருப்பது அவர்களை எரிச்சலுக்குள்ளாக்குகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவளுடைய நடத்தையைக் குற்றம் சொல்லியும் உள்பெட்டிக்கு ஆபாசப் படங்களை அனுப்பியும் மனரீதியாகத் தொந்தரவு செய்கின்றனர்.
சமூக வலைதளங்கள் ஆண்களுக்கான கட்டற்ற பெருவெளியென்று கருதும் ஆண்கள் அங்கே உலவும் பெண்களைப் பொதுப் பண்டமாகப் பார்க்கின்றனர். அங்கே பெண் இயங்க வேண்டுமென்றால் தங்களுக்குத் தாங்களே பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளைச் சுமந்தே தீர வேண்டியிருக்கிறது.
ஒரு பெண் தன் புகைப்படத்தைப் பகிர்ந்தால் அதில் மோசமான கருத்துகளைப் பதிவுசெய்தல், படங்களைப் பகிர்தல் – இடுதல் என அவளை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். பெண்களை மதிக்கும் ஆண்களும்கூடப் படங்களைப் பகிர்வது ஆபத்தானது; அதைத் தவிர்த்திடுங்கள் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். நண்பர்கள் பட்டியலைவிடவும் ப்ளாக் செய்தவர்களின் பட்டியல் நீளமானது என்பது ஒரு சமூக அவமானம்.
முகநூல் உள்பெட்டியின் வக்கிரங்கள் இன்னும் கொடுமை. உள்பெட்டிக்கு அனுப்பும் செய்திகளுக்கு வண்ணப் பூச்சுகளே தேவையில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை என்பதால் சிறிதளவும் வெட்கமின்றித் தங்கள் ஆபாசப் பேச்சுகளைக் கட்டவிழ்க்கின்றனர். மிக நீளமான ஆண்குறிப் படமொன்று என் உள்பெட்டியில் வந்து விழுந்தபோது அடைந்த அருவருப்பும் தவிப்பும் இன்றும் மனதில் உறைந்திருக்கிறது. இப்போது, இப்படிப்பட்ட கழிசடைத்தனமான விஷயங்களைக் கையாள்வதற்கான துணிவையும் பக்குவத்தையும், தொடர்ந்த சம்பவங்களே எனக்கு வழங்கின. அதுமட்டுமின்றி, பிற பெண்களின் பக்கங்களில் நடைபெறும் இத்தகைய ஆபாச வன்முறைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவதை என் கடமையாகவே கருதுகிறேன். பயந்து முடங்காமல், எதிர்த்து நிற்கும் பெண்களின் சிறுசிறு குழுக்கள் இயங்கத் தொடங்கியிருப்பது சமூக மாற்றத்தின் நல் அடையாளம்.
நண்பர்கள் அல்லாதவர்களின் தனிச்செய்திகளை முகநூல் நிறுவனமே தனியாக, நம் கண்ணில்படாத வகையில் தருகிறது. இப்படியொன்றிருப்பதை சமீபத்தில் அறிந்து அதற்குள் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஒருநாள் காம அழைப்புகளாக வந்து விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனேன். இப்படி ஒவ்வொரு பெண்ணின் பெட்டியிலும் அழைப்புகளிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. தன்னுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பெண்ணுடலின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தைக் கைக்கொள்கிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வுமின்றி நாகரிகமான அணுகுமுறை என்ற போர்வையில் இதுவும் நியாயப்படுத்தப்படும். பெண்ணைச் சார்ந்து இயங்கும் ஆண்கள், தங்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது. பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?
சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள், தங்கள் தயக்கங்கள் களைந்து துணிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்காகக் கணக்கை முடக்குவதோ, இயக்கத்தைக் குறைப்பதோ, தவிர்ப்பதோ ஆணாதிக்க மதிப்பீடுகளைக் கவனப்படுத்துவதாகவும் மறைமுகமாக ஏற்றுக்கொள்வதுமாகவே இருக்கும். அப்படி அவர்களை உற்சாகப்படுத்திடாமல் பெண்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டும்.
மதிப்பீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அறிவுத்துறை, ஊடகத்துறை செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து, இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் மாற்றத்தை நோக்கிய நகர்வுகளைத் துரிதப்படுத்துவதும் தேவை. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, பெண்கள் தங்கள் வெளியை இவர்களுக்காகக் குறுக்கிக்கொள்ளாமல் மனஉறுதியுடன் இயங்குதல், சமூகவெளியில் இயங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான சமூகக் கடமையிது.
கட்டுரையாளர் கவிஞர், பள்ளி ஆசிரியர். காலச்சுவடு நவம்பர் – 2015 எழுதிய கட்டுரை இது.