சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று.
அவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்… “வழக்கம்போல குடிதான் சார்…. என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும் போறது இல்லை.. எவ்வளவு நாளைக்குத் தான் கடன்காரங்களை பாத்து ஒழியறது. பாத்தேன், இவன் நமக்கு சோறு ஊத்தமாட்டான், வேற வழியைப் பார்க்கலாம்னு யோசிச்சப்ப தான். ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செஞ்சேன். ஆம்பளைங்க யாருமே கத்து தர முன்வரல… என்னைய மாதிரியே ஆட்டோ ஓட்டுற ஒரு அக்கா ஹெல்ப் பண்ணாங்க…. இதோ 2 வருசமா ஓட்டுறேன்.கடன கட்டியாச்சு… தோ… இதுகூட என் சொந்த ஆட்டோதான். என் புள்ளைய மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்க வைக்குறேன். மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு” என்றார்.
குடியால் கணவனை இழந்து, தன்னம்பிக்கையால் எழுந்தி நிற்கிறார் உமா மகேஸ்வரி.
– டைட்டன்