சினிமா, பெண், பெண்ணியம்

அனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்?

நிலா லோகநாதன்

அன்புள்ள கொற்றவை, இந்தப் பாடலுக்கு நீங்கள் பெண்கள் சார்பாகவும்,மக்கள் சார்பாகவும் ஆற்றியுள்ள எதிர்வினை மிகவும் நல்லதும் வரவேற்க்கப்பட வேண்டியதுமாகும். நானும் அவ்விடயத்தில் உங்களுடன் நிற்கிறேன்.

இருப்பினும், சிம்பு,அனிருத் வீட்டுப்பெண்களுக்கே மிகுதி வசைகள் போய்ச்சேருகின்றன. ஒரு குழந்தை நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்கிற கிளிஷே போல அவர்களுடைய அம்மாக்களை, அக்காக்களை, சகோதரிகளைத் திட்டுவது இன்னமும் நாம் பெண்களை மையப்படுத்தி, நம்மை நாம் மட்டறுக்கும் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.

பீப் சோங்கில் உச்சரிக்கப்படும் வார்த்தை, பெண்ணுறுப்புத் தொடர்பானது. அதையே ஆண்களைக் கேவலமாகத் திட்டவும் பயன்படுத்தும் கீழ்த்தரமான அரசியலை நான் உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை.

அதே போலத்தான், ஒருவர் செய்யும் பிழைக்கு அவரின் பெண்சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பழி ஏற்க்கவேண்டுமென எதிர்பார்ப்பதும், மிகவும் கேவலமானது.

டி.ராஜேந்தரோ, ராவிச்சந்திரனோ இதில் இல்லை. ரஜினியைக் கூட நீங்கள் கேள்வி கேட்டிருக்கலாம்.

இவர்கள் பாலியம் மாறாத பள்ளிக் குழந்தைகள் இல்லையே அம்மாவைக் கூட்டிக்கொண்டு வா என்று திடுவதற்கு. மிகவும் வளர்ந்த, வணிக சினிமாவை விளங்கிக் கொண்ட இரண்டு இளைஞர்கள். இவர்களை நேரடியாகத் திட்டலாம். ஏற்கனவே இந்த வணிக சினிமாவில் நிலைத்த டீ.ராஜேந்தரின் ஒரு அறிவூட்டல் கூடவா சினிமா, மக்கள் பற்றி இவர்களிடம் சேர்ந்திருக்காது?ஆகவே அவர்கள் வீட்டிலிருக்கும் ஆண்களின் பங்கையும் தயவு செய்து சேர்த்துத் திட்டுங்கள்.

அடுத்தது, நீங்கள், “இத்தகைய சமுக முன்னோடிகளின்” பெண்குலத்தைப் பழிப்பதன் நோக்கமும் இன்னொரு புறத்தில் புரியாமலில்லை. ஊரில் இருக்கிற பெண்களெல்லோருமே “ஐட்டங்கள்” என்று பார்க்கும் இவர்களுக்கு, இவர்கள் வீட்டிலும் பார்ப்பதற்கு ஐட்டங்கள் இருக்கிறார்கள் என்று நினைவூட்டுகிறீர்கள்.

இது உண்மையில் சீண்டலின் , விளைவின் உச்சக்கட்டம். பொறுத்துப்பார்த்துப் பார்த்து, பொறுமை இழந்த பின்னர் நீங்கள் கையாண்டிருக்கும் யுக்தி தானென்று புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது தான்,தாய்மை,புனிதம், சகோதரிகள் மீதான பாசம் இதெல்லாம் ஓடோடி வரும். இந்த உயிரினங்களூக்கு அவை, சாதாரண உயிரினங்களையும் விட அதிகம் இருக்கும். ஏனென்றால், பெண்களை கேலிப்பொருளாகப் பார்க்கும் இவர்களைப் போன்ற ஆண்களுக்கு இருப்பது இரண்டே இரண்டு ஐடியாக்கள் தான்.

1.தன் வீட்டுச் சொத்து.
2. அடுத்தவர் வீட்டுச் சொத்து.

தன் வீட்டுச் சொத்துக்கள் எல்லாமே தெய்வாதீனத் தூய்மைகள்.
அடுத்தவர் வீட்டுச் சொத்துக்கள் எல்லாமே பீப் சோங் எழுதுவதற்கான வடிகால்கள்.

நீங்கள் நினைப்பதைப் போல, இவர்கள் வீட்டுப் பெண்கள் இதற்குப் பதில் அளிக்கவோ, கூனிக் குறுகவோ மாட்டார்கள். மாறாக ஒரு “ஆணைப்” பெற்று, ஆணாகவே வளர்த்ததாகப் பெருமை கொள்ளப் போகிறார்கள். அந்தப் பெருமை இல்லாத வீட்டில், இந்த பீப் சோங்க் வருவதற்கான நியாயமே இல்லை. தடயமே இருக்காது.

ஆணாதிக்கம் எனும் கலைச்சொல், ஆண்களிடமிருந்து மட்டுமே வரும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. பிஃயூடல் செட்டப்பில் அமிழ்ந்தியிருக்கும் எல்லோருக்குமே அது கைவரும். அந்தச் சமுகத்தின் பெண்களுமே அதனைப் பயன்படுத்துவர்.

எந்த மாதிரியான பெண்களுக்காக நாம் குரல்கொடுக்க வேண்டும், எவர்களை எதிர்க்க வேண்டும் என்பதை நாம் முதலில் வரையறுக்க வேண்டும். நாம் காலா காலமாகப் போராடிப் பெற்றிருக்கும் சில சொற்பங்களையும் ஆதிக்க மனநிலைக்கே தாரை வார்த்துக் கொடுக்க முடியாது.

சில நேரங்களில் பெண்கள் எனும் பெயரின் கீழ் எல்லாவகையான வர்க்க அங்கத்தவர்களும் ஒளிந்து கொண்டு பாதுகாப்புத் தேட முயலும் போது தான், பெண்கள் எனும் பதத்தின் விரிந்த நிலை நமக்குப் புரியும்.

லதா, லக்ஸ்மி போன்றவர்கள் சாதாரண பெண்களுக்கான நாங்கள் போராடி வைத்திருக்கும் வெளியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதும் ஆதிக்கத்தின் ஒரு வடிவத்தை ஏற்பதைப் போன்றது தான்.

சிம்பு, அனிருத்…இவர்களைப் போன்றவர்களிடமிருந்து விலகிச் சென்ற பெண்கள் சமுக மாற்றத்துக்கான காரணிகள். இந்த அழுக்குகளை வெளிவரச் செய்தவர்கள். அந்த வகையில் முக்கியமானவர்கள்.

இப்படித்தான், கொஞ்சக் காலத்துக்கு முதல்…பேஃஸ்புக்கில் பீப்பாடல்கள் படித்துக் கொண்டு ஒரு கூட்டம் திரிந்தது. அதனை ஆதரித்து, தூக்கி விட்டு அதன் மறுமலர்ச்சியை உறுதிப்படுத்தியதே பீப்பாடலில் புனிதப்பட்டுப் போய்க் கிடந்த அவர்கள் வீட்டுப் பெண்கள் தான்.

ஒருவரை நோக்கிக் கல்லை வீசும் போது, அடுத்தவர் மீதும் விழலாம் என்று எச்சரிக்கைப் படுத்துவது மிகவும் மலினமன செயல் தான்.அது மற்றவரைப் பதற்றங்கொள்ள வைத்து இயல்பாக வாழ விடாது செய்யும். நாங்கள் என்ன ஆயுதத்தை, அம்மலினத்தின் பொருட்டு எடுக்க வேண்டுமென்பதை, கற்களின் அளவும், காரணங்களுமே தீர்மானிக்கின்றன.

சில நேரங்களில் எச்சரிக்கை உணர்வைத் தரவேண்டியது பற்றியும், சில வேளைகளில் எச்சரிக்கையாகக் காட்டிக் காட்டியே வாழவிடாது செய்தல் போன்ற, பெண்கள் மீது மதங்கள் செய்யும் அரசியலின் ஆழத்தை மாதிரி நாமும் நடக்க வேண்டியிருக்கிறது.

இது வெறும் சிலம்பரசன், அனிருத்துக்கானவை மட்டுமல்ல. வைரமுத்து, சினேகன் முதலிய கடைந்தெடுத்த சினிமா எழுத்தாளர்களுக்கும், கண்ணதாசன்,வாலி போன்ற இரட்டை அர்தத்தையே ரசிக்க வைப்பதாக எழுதிச் சவால் விட்டுக்காட்டிய பொறுக்கித்தனங்களின் முன்னோடிகளுக்கும் இன்னமும் பொதுப்புத்தியில் குடைந்து கொண்டிருக்கும் வார்த்தைகளை தாராளமாக்கி ஒரு பொருட்டேயில்லாமல்ச் செய்கின்ற செய்த சுஜாதா, ஜெயமோகன், சாரு வகையறாவுக்குந்தான். அதன் ரசிகக் குஞ்சுகளின் அதி பதற்ற நிலைக்குந்தான்…

ஆகவே கொற்றவைக்கு கட்டைவிரலை உயர்த்துகிறேன்.

எழுத்தாளர் கொற்றவையின் கட்டுரைக்கு விமர்சனமான நிலா லோகநாதன் எழுதியது.  நிலா லோகநாதன் இலங்கையில் வசிக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.