நோய்நாடி நோய்முதல் நாடி- 50
ரஞ்சனி நாராயணன்

நமது மருத்துவக் கட்டுரை தொடரில் நீண்ட இடைவெளி. தவிர்க்க முடியாத காரணங்களினால் ஏற்பட்ட இந்த இடைவெளிக்கு முதலில் நம் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி இப்படி ஆகாது; தொடர்ந்து வரும் என்றும் உறுதி கூறுகிறேன்.
‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?’
டெலிபோன் மணி போல சிரித்தால் பரவாயில்லை; காதுக்குள் எப்போதும் டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாட முடியாது! காதினுள் ஏற்படும் சில குறைபாடுகளினால் சிலருக்கு காதினுள் மணி அடிப்பது போலவும் இரைச்சல் சத்தமும் கேட்கும். ஒரு காதில் மட்டுமோ அல்லது இரண்டு காதுகளிலுமோ அல்லது தலையிலோ இந்த சத்தம் கேட்பது போல இருக்கும்.
இதை ஆங்கிலத்தில் Tinnitus என்கிறார்கள். tinnire என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது இந்த Tinnitus. Tinnire என்றால் ‘மணியடிப்பது’ என்று பொருள். இது மிகவும் தொந்திரவான ஒரு நிலைமை என்றாலும் தீவிரமானது இல்லை. இதுவே ஒரு நோய் இல்லை. காதினுள் மறைந்திருக்கும் ஒரு நோயின் அறிகுறி இது. காதினுள் ஏற்பட்டிருக்கும் காயம், அல்லது வயதானதால் ஏற்படும் கேட்கும் சக்தி குறைவு போன்றவற்றின் அறிகுறியாக இந்த டினிடஸ் ஏற்படும். வயதாக ஆக இந்த நிலை மோசமாகக் கூடும் என்றாலும், சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எந்த நோயின் அறிகுறி என்று பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது மணியோசையை குறைக்கும்.
இந்த மணிச் சத்தம் கேட்க என்ன காரணம்?
இதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க பொதுவான உடல்நிலை பரிசோதனையும் காதுகளின் பரிசோதனையும் செய்யப்படும். மருத்துவரிடம் நீங்கள் சாப்பிட்டுவரும் எல்லா மருந்துகளைப் பற்றியும் கட்டாயம் சொல்ல வேண்டும். உங்களுக்கு இருக்கும் நோய்கள் பற்றியும் அவைகளுக்காக நீங்கள் மேற்கொண்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் பற்றி அவசியம் சொல்ல வேண்டும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் இந்த நோய் ஏற்படலாம்.
அறிகுறிகள்:
டினிடஸ் அறிகுறிகள் பலருக்கு காதிற்குள் ஓர் மணி அடிக்கும் சத்தம் கேட்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இந்த சத்தம் கேட்கும். சிலருக்கு விசில் சத்தம், சிலருக்கும் ஹம்மிங் சத்தம் சிலருக்கு ஹிஸ்ஸிங் சத்தம், சிலருக்கு ‘விஷ்….’ என்ற சத்தம், சிலருக்கு பஸ்ஸிங் சத்தம் என்று வேறுபடும்.
இந்த நோய் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 65 வயதிற்கு மேல் இருப்பவர்களிடையே பொதுவாகக் காணப்படும். திடீரென்றோ அல்லது பல மாதங்களாகவோ அதிகம் ஆகலாம். தொடர்ச்சியாக, அல்லது அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கலாம். பலவிதங்களில் இந்த நோய் பாதிக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. அதேபோல சிலர் இந்த நோயுடன் வாழப் பழகிக் கொண்டுவிடுவார்கள். ஏதோ ஒரு சத்தம் தலையின் பின்பக்கத்திலிருந்து வருகிறது என்று அதிகம் கவலைப்படுவதில்லை. சிலருக்கு இந்த நிலைமை தாங்க முடியாமல் போய் வேலையை அல்லது படிப்பை விட்டுவிடுவார்கள். பலருக்கும் இந்த நோய் இரவு வேளைகளில் அதிகம் தெரிய வரும். காலைவேளைகளில் வேலை மும்முரத்தில் தெரிவதில்லை.
பிரிட்டனில் இருக்கும் வயது வந்தவர்களில் 10 சதவிகிதம் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது 6 மில்லியன் மக்கள். இவர்களில் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சதவிகிதத்தினர். இந்த பாதிப்பில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையினருக்கு காதுகளின் பாதையில் ஏற்பட்ட பாதிப்பால் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சத்தம் கேட்கும். இந்த வகை பாதிப்பை Subjective Tinnitus என்கிறார்கள்.
இரண்டாவது வகையில் நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவருக்கும் காதுகளில் வரும் இந்த சத்தம் கேட்கும். அதாவது மருத்துவர் தனது ஸ்டெதஸ்கோப்பை நோயாளியின் காதுக்கு அருகில் வைத்தால் அவருக்குக் கேட்கும். இதனை Objective Tinnitus என்கிறார்கள்.
இந்த நோயைப் பற்றி மக்களிடையே உலவி வரும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்:
இதற்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை.
உண்மை. இதற்கென ஒரே ஒரு சிகிச்சை என்பது இல்லை. இதுவரை இதற்கான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. உங்களுக்கு இந்த நோய் இருப்பது போல தோன்றினால் உடனடியாக ஒரு பொதுமருத்துவரைப் பார்க்கவும். காதுகளில் அதிகப்படியான மெழுகு சேர்ந்திருந்தாலோ, அல்லது காதுகளில் ஏதாவது தொற்று இருந்தாலோ இப்படி சத்தம் கேட்கலாம். இது ஒரு தற்காலிகமான நோயாகவும் இருக்கக்கூடும். அவர் உங்களை காது, மூக்கு தொண்டை நிபுணரிடம் அனுப்பி வைப்பார். ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையைப் பொறுத்து சிகிச்சைமுறைகள் வேறுபடும்.
டினிடஸ் வந்தால் காது கேட்காமல் போய்விடும். காதுகேளாமைக்கு இது ஒரு அறிகுறியாக இருந்தாலும் எல்லோருக்கும் காதுகேளாமை வருவதில்லை. அதேபோல காதுகேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டினிடஸ் வரும் என்பதும் இல்லை. உங்கள் மருத்துவர் இது விஷயமாக உங்களுக்கு உதவுவார்.
டினிடஸ் அதுவாகவே ஏதும் சிகிச்சை எடுக்காமலேயே சரியாகிவிடும்.
அதிக சத்தத்தில் நீண்ட நேரம் இருந்ததால் ஒரு சிலருக்கு தாற்காலிக டினிடஸ் வரலாம். ஒருசில நாட்களில் தானாகவே சரியாகலாம். ஆனால் காதுகளில் சத்தம் வருவது ஒரு வாரத்திற்கு மேல் அல்லது மாதக்கணக்கில் தொடர்ந்தால் தானாகவே சரியாகும் வாய்ப்பு மிகவும் குறைச்சல். ஆனால் இது மாதிரியான நேரங்களில் அதனுடன் வாழப் பழகிக் கொள்ளுதல் நல்லது.
நாட்கள் செல்லச்செல்ல டினிடஸ் மோசமாகும்
சிலருக்கு டினிடஸ் அதிகமாகி விட்டாலும் பலர் குறைவதாகச் சொல்லுகிறார்கள். உடல்நிலையில் அல்லது மனநிலையில் மாற்றங்கள், அல்லது சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல், அல்லது அந்த சத்தத்திற்குத் தங்களைப் பழக்கிக் கொள்ளுதல் போன்றவற்றால் சிலர் சீக்கிரம் இந்த நிலையிலிருந்து வெளிவந்து விடுகிறார்கள்.
நமது காதுகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. அதிக சத்தத்தில் நீண்ட நேரம் இருப்பது நமது காதுகளை நிரந்தரமாக பாழாக்கி விடும். இந்த வகைக் குறைபாடு நாளடைவில் நிதானமாக ஏற்படுவதால் நம்மால் உடனடியாக இதை உணர முடியாது. நிரந்தர காது கேளாமை என்பதை குணப்படுத்தவும் இயலாது. ஆனால் நிச்சயம் இந்தக் காதுகேளாமையை நம்மால் தவிர்க்க முடியும்.
காதுகளில் பாதுகாப்பு காது அடைப்பான்கள் அணிந்து கொள்ளலாம். இசை நிகழ்ச்சிகளுக்கு போகும்போது நேரடியாக ஒலிபெருக்கியின் பக்கத்தில் உட்காராதீர்கள். காதுவலி வந்தாலோ, காது கேட்பதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, திடீரென காது கேட்காமல் போனாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
இனிமையானவற்றைக் கேட்டு மகிழ காதுகளைப் பாதுகாப்போம்.
பயனுள்ள பதிவு 60 வயதானவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது பாராட்டுக்கள் ரஞ்சனி
இதைப்பற்றி கேள்விப்படவேயில்லை என்றுத் தோன்றுகிறது.. வயதானவர்களுக்கு இன்னுமொரு குறிப்பு. மருத்துவரை அணுகுவது என்பது இப்போது எல்லோருக்கும்ருக்கும் தண்ணீர்பட்ட பாடு. முன்காலமா. நல்ல விழிப்புணர்வு கட்டுரை. நான்கு பெண்களில் ரஞ்ஜனி தொடருகிறாள். படிக்கலாம் வாருங்கள். அன்புடன்