நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: சென்னைக்கு மிக அருகில்

தமிழ்மகன்

விநாயக முருகன் எழுதிய இந்த நாவல் சென்னையைச் சுற்றியிருந்த விவசாய நிலங்கள் எப்படி கல்லூரிகளாகவும் கான்க்ரீட் வனங்களாகவும் மாறிப்போயின என்பதைச் சொல்லும் ஆகச் சிறந்த படைப்பு.

தாம்பரத்துக்கு மேற்கே படப்பை, முடிச்சூர், மணிமங்கலம் போன்ற பழம்பெருமை வாய்ந்த சரித்திர ஆதாரங்கள் நிரம்பிய கிராமங்கள் ரியல் எஸ்டேட் என்னும் கோரப்பற்களால் எவ்விதம் சூறையாடப்பட்டன என்பதைச் சொல்கிறது. அதை மட்டும் சொல்லியிருந்தால் வழக்கம்போல ஒரு புலம்பல் நாவலாகியிருக்கும். அதைத் தாண்டிய பல்வேறு கிளைநதிகள் இதிலே உண்டு. அவற்றை எல்லாம் எப்படி கடலிலே வந்து சேர்க்கிறார் என்பதில்தான் படைப்பின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

நிலத்தை விற்க மறுக்கும் சித்திரை, ரியல் எஸ்டேட் அதிபரான மாணிக்கவேலு, புரோக்கர் ராசுக்குட்டி, ஒரு சேனல் அதிபர் காசிநாதன், காவ்யா ஶ்ரீ என்ற நடிகை… இவர்கள்தான் பிரதான பாத்திரங்கள்.கொள்ளை போகும் விவசாய நிலத்தில் விவசாயி, புரோக்கர், ரியல் எஸ்டேட் அதிபர்கள் வரை எல்லோரும் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள். சேனல் அதிபர், நடிகை… அதுதான் விநாயக முருகனின் புனைவுலக சாமர்த்தியம் என்பேன். நாவலை மின்னலென நகரவைப்பதும் ஒற்றைப்படைத்தன்மையில் இருந்து பெரும்தளத்துக்குக் கொண்டுசெல்வதும் அவர்கள்தான்.

vinayaga murugan

சித்திரை என்ற விவசாயி தன் நிலத்தை விற்க மறுக்கிறார். அவருடைய இரண்டு மகன்களும் மற்றவர்களைப் போல நிலத்தைவிற்றுவிட்டு, வெளிநாட்டுக் கார்கள் வாங்கவும், சர்வதேசப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் விரும்புகிறார்கள். ஏனென்றால் இவர்கள் பக்கத்து நிலத்து விவசாயிகள் எல்லோரும் அப்படி விற்றுவிட்டு சொகுசாக வாழ்கிறார்கள். சித்திரை மட்டும் இன்னமும் கீரைபாத்தி போட்டுக்கொண்டிருக்கிறார். சேற்றில் இறங்கி வேலை செய்யும்போது, மண்வெட்டியால் தவறி காலைவெட்டிக்கொண்டு அவதிப்படுகிறார். சந்தோஷமாக பணக்காரன் ஆவதை விட்டுவிட்டு அவர் ஏன் காட்டிலும் கழனியிலும் கஷ்டப்பட வேண்டும்? அவருக்கு நிலத்தில் உழுவதைவிட காரில்செல்வது பெருமையான விஷயமாக இல்லை. சும்மாவே சுகமாக இருப்பது அவருக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நிலத்தை விற்பதால் கிடைக்கும் சுகபோகத்தைவிட ஒருபோகம் விளையும் நிலமே சந்தோஷமாக இருக்கிறது. அது அவர்களின் வாரிசுகளுக்குப் புரியவில்லை. வீட்டில் சச்சரவு. ஒரு பக்கம் நில புரோக்கர்கள் நில உரிமையாளர்களின் மனத்தைக் கரைக்கிறார்கள்.
இதன் நடுவேதான் நடிகை அறிமுகம் ஆகிறார்.

ரியல் எஸ்டேட் நிலத்தின் அருமை பெருமைகளை டி.வி.யில் சொல்லும் நடிகை. சரி அதற்கு மேல் நாவலில் நடிகையின் பங்களிப்பு என்ன இருக்கப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வலைப்பின்னல் அங்கேதான் தொடங்குகிறது. அவர் ஒரு சேனல் அதிபரின் கைப்பாவை. இருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்தால்… சேனலின் வக்கிரமான நிகழ்ச்சிகள் பற்றி நாவல் விவரிக்கிறது. அப்பாவிக் குடும்பங்களை நடு ரோட்டுக்கு அழைத்து, அதை உலகமே பார்க்கவைக்கும் வன்முறைகள் டி.வியின் மூலம் அரங்கேறுகின்றன. டி.வி-க்கு தேவை குடும்ப வக்கிரங்கள். சற்றும் எதிர்பாரத இடத்தில் ஒரு சாமியாரும் நடிகையும் ஒன்றாக இருப்பதை டி.வியில் ஒளிபரப்பாகும் அதிரடி காட்சி இடம்பெறுகிறது. ஒரு போலி சாமியாரின் காமலீலைகள் டி.வி-யில் அரங்கேற்றிய நிகழ்ச்சி என்று உலகம் சொல்கிறது. மிக சுவாரஸ்யமாக அதை சர்வதேச ரியல் எஸ்டேட் பிரச்னையின் ஓர் அங்கமாக மாற்றிக் காட்டுகிறார் விநாயக முருகன்.

கதைக்குத் தேவையில்லாதது போல வளர்ந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஏதோ ஓர் இடத்தில் கதையின் அவசயமான திருப்புமுனையாக மாறும் ரசவாதம் நடக்கிறது. சென்னைக்கு மிக அருகில் ஒரு ரியல் எஸ்டேட் பிரச்னையில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் பிரயாணித்து, உலகத்தின் மிக அருகில் நம்மை நிறுத்துகிறது.

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலின் விலை: 320 ரூபாய்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.