நோய்நாடி நோய்முதல்நாடி
ரஞ்சனி நாராயணன்

சமீபத்தில் நாங்கள் வெளியூர் செல்லும்போது என் கணவர் இன்சுலின் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். எங்கள் மருத்துவருக்குத் தொலைபேசி ‘இன்சுலினுக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா? வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா? என்று கேட்டேன். எங்கள் மருத்துவர் சொன்னார்: இன்சுலினுக்கு மாற்று எதுவும் கிடையாது. வேறு எந்த மருந்தாலும் ஈடு செய்யவும் முடியாது’. இன்சுலின் மகத்துவம் அவர் சொன்ன வார்த்தைகளில் புரிந்தாலும் அடுத்தநாள் ஒரு கட்டுரை படித்தேன் இந்த இன்சுலின் பற்றி. டெக்கன் ஹெரால்ட் தினசரியில் ஒரு மருத்துவர் எழுதியிருந்தார். ஜூலை 30 ஆம் தேதி ‘இன்சுலின் அப்ரிசியஷன் தினம்’ என்பதால் இன்சுலினைப் பற்றிய கட்டுரை அன்று வெளியாகியிருந்தது. அதில் மருத்துவர் டாக்டர் பிரமீளா கல்ரா என்பவர் பல விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். குறிப்பாக இளம் குழந்தைகளை பாதிக்கும் டைப் ஒன்று சர்க்கரைக் குறைபாடு அதன் மேலாண்மை ஆகியவற்றைப் பற்றி வந்த அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக இங்கே:
இந்த உலக இன்சுலின் மதித்துணர்வு தினம் என்பது 94வருடங்களுக்கு முன் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் ஒரு புரட்சி செய்ததைக் குறிக்கும் நாள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்காலம் வரை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உணவுக் கட்டுப்பாடு ஒன்றே சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கையை அதிகரிக்கும் என்ற நிலை. உணவுக் கட்டுப்பாடு என்றால்– கலோரி குறைந்த உணவு என்று கிட்டத்தட்ட பட்டினி தான். இன்சுலின் கண்டுபிடிப்பிற்கு முன் பான்க்ரெய்ன் (pancrein) என்று ஒரு மருந்து – நாயின் கணைய சாறு – 1990 களின் ஆரம்பத்தில் ரோமானிய உடலியலாளர் நிகோலஸ் சி பாலேச்கு (Nicolas C Paulescu) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1921 ஆண்டு பிரெடெரிக் பாண்டிங் மற்றும் சார்ல்ஸ் பெஸ்ட் இருவரும் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் நாய்களை வைத்துக் கொண்டு மனித பயன்பாட்டுக்குத் தேவையான இன்சுலினைக் கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சியை துவங்கினார்கள்.
1922 ஆம் ஆண்டு டொராண்டோவில் ஒரு 14 வயதுச் சிறுவன் – லியோனார்ட் தாம்சன் – இன்சுலின் போட்டுக் கொள்ளும் முதல் நோயாளியாக தேர்வு செய்யப்பட்டான். கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருந்த லியோனார்ட் இன்சுலின் ஊசி போட்டவுடன் இழந்த சக்தியை வெகு விரைவில் திரும்ப பெற்றதுடன் அவனது பசியும் அதிகமாயிற்று. மேலும் 13 வருடங்கள் வாழ்ந்த இந்தச் சிறுவன் நிமோனியாவால் இறந்து போனான்.
பல பல மேம்பட்ட ஆராய்ச்சிகள் இன்சுலினை மனிதர்களுக்கு மிக சுலபமாகக் கிடைக்கும்படி செய்தன. டைப் ஒன்று வகை சர்க்கரை நோய் எனபது இளம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கணையத்தில் இருக்கும் பீடா செல்கள் எனப்படும் இன்சுலின் தயார் செய்யும் செல்கள் அழிக்கப்படுகின்றன.
இன்சுலின் என்பது நமது உணவில் இருந்து கிடைக்கும் க்ளுகோசை செல்களுக்கு கிடைக்கும்படி செய்து அவை நமது தினசரி வேலைகளுக்கு சக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஒரு ஹார்மோன். கணையம் சிறுவயதிலேயே இன்சுலின் உற்பத்தியை நிறுத்திவிடும் போது வேறெந்த வழியிலும் அதை சரி செய்ய இயலாது. அதனால் டைப் ஒன்று வகை சர்க்கரை குறைபாட்டினால் பாதிப்படும் சிறுவர்கள் சிறுவயது முதலே இன்சுலின் பயன்படுத்த ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் இன்சுலினை நம்பியே இருக்க நேரிடுகிறது. இந்த வகை குறைபாடு மனதையும், உடலையும் மிகவும் பாதிக்கும். அவ்வப்போது இரத்தத்தில் சர்க்கரை அளவை சோதித்துக் கொண்டு, இன்சுலின் போட்டுக்கொண்டு, உடற்பயிற்சியை தவறாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில், இன்சுலின் என்பது இந்த வகைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கிடைத்த வரம், அதை ஒரு சுமையாக நினைக்கக்கூடாது என்று பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
இந்தியாவில் லட்சம் குழந்தைகளில் பதினோரு குழந்தைகள் இந்த டைப் ஒன்று சர்க்கரை குறைப்பாடுடன் பிறக்கிறார்கள். ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த நோய் இருப்பது சிறுவயதில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்தக் குறைபாடு பற்றிய போதுமான அளவு விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததும், சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கும், குழந்தைகளுக்கு வராது என்ற ஒரு தவறான கருத்து நிலவுவதும் தான். ஆரம்பநிலையிலேயே இந்தக் குறையைக் கண்டுபிடிப்பதும், தொடர்ந்து சர்க்கரை அளவை பரிசோதித்து வருவதும், உடனடி சிகிச்சையும் அவசியம். ஏனெனில் உலகில் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குழந்தைகளில் ஒரு லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை தினமும் பரிசோதித்துக் கொள்வதும் ஒரு சவாலான விஷயமே. இப்போது பயோனிக் பான்க்ரியாஸ் என்ற கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை உடலில் பொருத்திக் கொள்வதன் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சற்று ஆசுவாசபடுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்த கருவி சர்க்கரை அளவைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல இன்சுலினையும் செலுத்திவிடும்.
இந்தக் குறைபாட்டை தகுந்த முறையில் கண்காணித்து, இன்சுலினும் எடுத்துக் கொள்வதை குழந்தைகளுக்கு சரியான முறையில் சொல்லித் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கை இடைஞ்சல்கள் எதுவுமின்றி நல்லபடியாக இருக்கும்.
நோய்நாடி நோய்முதல்நாடி இனி தொடர்ந்து வரும்.