எபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. காங்கோவில் உள்ள எபோலா நதிக் கரையில் இருந்து பரவியது என்பதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது சியாரா லியோன் நாடுதான். இதுவரை கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சரியான மருந்துகள் இல்லாததும் குறைவான மருத்துவர்களாலும் இந்நோய் வேகமாகப் பரவி வந்தது. உலக நாடுகளிலிருந்து பலர் உதவிக்கரம் நீட்டினர். ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தியும் இந்நோயை குணமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. இந்நிலையில் சியாரா லியோனில் எபோலா நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்நோயின் பிடியிலிருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.