பண்டிகை சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. என்ன பலகாரம் செய்யலாம் என்கிற சிந்தனை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த முறை கொல்கத்தா புகழ் ரசகுல்லா செய்து பாருங்கள்…
தேவையானவை:
பசும் பால் – ஒரு லிட்டர்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 5 கப்
உலர்ப்பழ துண்டுகள் – ஒரு கப்
மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வே வாட்டர் தயாரிக்கும் முறை:
பாலை முந்தைய நாள் இரவே ஏடு படிய காய்ச்சி, ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் இந்த பாலை எடுத்து மேலே படிந்துள்ள ஏடை எடுத்து விடவும். அடுப்பில் வைத்து மறுபடியும் காய்ச்சவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து மிதமான சூட்டில் எலுமிச்சை சாறை விடவும். பால் திரிய ஆரம்பிக்கவும். நன்றாகத் திரியும் வரை அடுப்பில் வைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி, வடிகட்டவும் (மேலே திரண்டுள்ள பனீரை உடனே ரசகுல்லா செய்ய பயன்படுத்தி விடாதீர்கள்). அடியில் உள்ள தண்ணீரை ஒரு வாரம் வைத்து புளிக்க விடவும். பிறகு இந்த வே வாட்டரை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வருஷம் வரை அவ்வப்போது ரசகுல்லா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
பனீர் தயாரிக்க:
முன்பு செய்தது போல்.. பசும்பாலை முந்தைய நாள் இரவே காய்ச்சி, ஃப்ரிட்ஜில் வைத்து, ஏடை எடுத்து விட்டு, அடுப்பில் காய்ச்சவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், எலுமிச்சை சாறுக்கு பதில் சேகரித்து வைத்துள்ள வே வாட்டரை, பால் பிரியும் வரை ஒரு ஒரு கரண்டியாக ஊற்றவும். பால் திரிந்ததும், வே வாட்டர் ஊற்றுவதை நிறுத்திவிடவும். நன்றாக பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஒரு மஸ்லின் துணியில் பிரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும். துணியின் மேல் சேர்ந்துள்ள பனீரை நன்றாகப் பிழிந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மைதா மாவைக் கலந்து நன்றாக தேய்த்து பிசையவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டும்போது நடுவில் உலர்ப்பழ துண்டுகளை அரை டீஸ்பூன் வைத்து நன்றாக மூடி, தட்டில் மாவை சிறிது தூவி, அதன் மேல் உருண்டைகளை வைக்கவும்.
ஜீரா செய்ய:
வாய் அகன்ற பாத்திரத்தில் 5 கப் சர்க்கரை போட்டு, மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை நன்றாக கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை ஊற்றவும். கொதிக்கும்போது, பழுப்பு நிற கலரில் பிரிந்து நுரைத்து வருவதை ஒரு ஸ்பூனால் எடுத்து விடவும். இப்போது அதிக தீயில் சர்க்கரை பாகை தளதளவென்று கொதிக்க விடவும். கொதிக்கும்போது, தட்டில் உருட்டி வைத்துள்ள பனீர் உருண்டைகளை பாகின் மேல் கவிழ்க்கவும். (கைகளால் எடுக்கக்கூடாது).
பிறகு, கரண்டி முனையால், லேசாக உருண்டைகளைப் புரட்டி எடுத்து நடுவில் கொண்டு வந்து, பத்து நிமிடம் கொதிக்க விடவும். ஒரு மூடியினால் மூடவும். ஒரு நிமிடத்துக்கு பிறகு மூடியை எடுத்து லேசாக கிளறவும். மீண்டும் இதே போல் பத்து நிமிடம் செய்து வேக விடவும். பிறகு, மூடியை எடுத்து விட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இரண்டு மடங்காக உருண்டைகள் பெரிதாகிவிடும்.
அடுப்பை அணைத்து விட்டு, வேறொரு பாத்திரத்தில் ஜீராவுடன் சேர்த்து, மாற்றி விடவும். விருப்பப்பட்டால், ரோஸ் எசன்ஸ், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று பரிமாறவும்.