ஜோதிமணி
என்னைப் போன்ற பெண்களும் ,தமிழ்சமூகமும் பெரியாருக்குப் பட்டிருக்கின்ற நன்றிக்கடன் காலத்தால் தீர்க்க முடியாதது. அந்த சுயமரியாதைச் சூரியன் சுட்டெரித்த மூடநம்பிக்கைகள் அடுத்த நூற்றாண்டுக்கு தமிழகத்தை சென்ற நூற்றாண்டிலேயே அழைத்துச் சென்று விட்டது.
இப்பொழுதும் கூட பெண்களும் , சமூகமும் சிந்திக்கத் துணியாத கருத்துக்களை இந்தக் கிழவர் நூற்றாண்டுக்கு முன்பு எப்படி சிந்தித்து பிரச்சாரம் செய்தார் என்று நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவதில்லை.
அவர் ஒரு புரட்சியாளர். பெண்ணடிமை , சாதிய ஒடுக்குமுறை , மூடநம்பிக்கைகளுக்கு எதிராக முழங்கிய சங்கநாதம். பிராமணியத்துக்கு எதிரான அவரது கலகக்குரல்,கடுமையான பிரச்சாரம் தமிழ்சமூகத்தின் சுயமரியாதையை மீட்டெடுத்தது.
அவரது ஆழமான பிராமணிய எதிர்ப்பை திராவிட கட்சிகள் தனது அரசியல் சுயலாபங்களுக்காக வெறும் பிராமண வெறுப்பாக குறுக்கிவிட்டன. ஒரு சாதி இன்னொரு சாதி மீது ,ஒரு ஆண் ,பெண் மீது செலுத்தும் ஆதிக்கம் கூட பிராமணியம் தான் .
இதை வெற்றிகரமாக திராவிடக் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்கு வளர்த்தெடுத்ததன் மூலம் பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன . இது பெரியாருக்கும் ,தமிழ்சமூகத்திற்கும் அவர்கள் இழைத்த மாபெரும் துரோகம் .
அதனால் தான் இன்று பெரியாரின் மண் என்று சொல்கிற தகுதியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் . அதிகாரத்திற்காக பிரித்தாளும், வெறுப்பு அரசியல் நடத்தும் சக்திகள் இதே மண்ணில் அவரை அவமதிக்க முடிகின்றது. யாரெல்லாம் அவரால் பயனடைந்தார்களோ அவர்கள் மனதில் அவருக்கு எதிரான விஷத்தை விதைக்க முடிகிறது .
அதைக்கூட வேடிக்கை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரது வாரிசுகள் என்று உரிமை கொண்டாடுவார்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இதை அன்றே உணர்ந்துதான் பெரியார் காமராசரின் பக்கம் உறுதியோடு நின்றார். பெரியாரை திராவிடக் கட்சிகள் கைவிட்டிருக்கலாம் . ஆனால் பெரியாரின் கடைசித் தொண்டர் இருக்கும்வரை இந்த மண்ணில் சுயமரியாதையின் கொடி பறக்கும் .
ஜோதிமணி தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர்