Uncategorized

ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை?

ஆஸியெனும் அதிசயத்தீவு – 4 

கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்
கீதா மதிவாணன்

ஆஸ்திரேலிய அரசு முத்திரையைப் பார்த்தால் ஒரு பக்கம் கங்காருவும் இன்னொரு பக்கம் ஈமு பறவையும் இருக்கும். எத்தனையோ விலங்குகள் பறவைகள் இருக்கும்போது அரசு முத்திரையில் இடம்பிடிக்கிற அளவுக்கு இந்த இரண்டிடமும் அப்படி என்ன விசேட சிறப்பு இருக்கிறது? இருக்கிறதே. கங்காருவாலும் ஈமுவாலும் முன்னோக்கி மட்டுமே போக முடியும். பின்புறமாக நடக்கவோ நகரவோ முடியாது. அதனால்தான் முன்னேற்றத்துக்கான அடையாளமாக அரசின் முத்திரையில் இடம்பிடித்திருக்கின்றன இரண்டும்.

Australia_cricket_logo

உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது பெரிய பறவை ஈமு. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவின் தீக்கோழி என்பது உங்களுக்குத் தெரியும்தானே? ஈமுவின் உயரம் தோராயமாக ஒன்றரை மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் வரைக்கும் இருக்கும். எடை கிட்டத்தட்ட 35 கிலோ இருக்கும். பறக்க இயலாவிட்டாலும் அதிக வேகத்தோடு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் கூடஓடக்கூடியது.

புல், இலைகள், பூச்சிகள் போன்றவற்றைத் தின்னும் அதே சமயம் உணவில்லாமலும் பல வாரங்களுக்கு ஈமுவால் தாக்குப்பிடிக்க முடியும். உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பை உடலில் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. தண்ணீருக்காகவும் தவிக்காது. ஆனால் கிடைக்கும்போது தொடர்ந்து பத்து நிமிஷம் குடிக்கும். ஈமுவின் கண்கள் மிகச்சிறியவை. சிமிட்ட ஒன்றும் தூசுகளினின்று பாதுகாக்க ஒன்றுமாய் இரண்டு சோடி இமைகள் உண்டு.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் இந்தப்பறவை தன் உணவோடு சின்ன சின்ன கற்கள், கண்ணாடித்துண்டுகள், இரும்புத்துண்டு என்று கண்ணில் படுவதையெல்லாம் முழுங்கிவிடும். அவை அதன் இரைப்பையில் தங்கி உணவைச் செரிக்கவைக்க உதவுமாம். ஈமுவின் கால் மிகவும் வலிமையானது. இரும்புக்கம்பி வேலியையே காலால் கிழித்துவிடுமென்றால் எவ்வளவு வலிமையிருக்கும் அந்தக்கால்களுக்கு! ஈமு தூங்கும்போது கால்களை மடக்கி அதன்மேல் அமர்ந்து, தன்னுடைய நீண்ட கழுத்தை இறக்கைக்குள் நுழைத்து தூங்கும். அப்போது தூரத்தினின்று பார்ப்பதற்கு சிறு மணற்குன்று போல தெரியும். தூங்கும்போது எதிரிகள் கவனத்தில் படாமலிருக்க இப்படி ஒரு உபாயம்.

ஆண்பறவைகளை விடவும் பெண்பறவைகள் சற்று பெரியவையாக இருக்கும். ஆண்பறவைகள் பன்றியைப் போல் உறுமல் ஒலி எழுப்பும். பெண்பறவைகள் பெரிதாய் முழங்கும். ஈமு பறவைகள் மே, ஜூன் மாதங்களில் முட்டையிடும். இதனுடைய கூடு ஒன்றரை மீட்டர் அகலம் வரை இருக்கும். கூட்டைக் கட்டுவது ஆண்பறவைதான். பெண்பறவை பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும்.

பொதுவாக ஒரு ஈட்டுக்கு இருபது முட்டைகள் வரை இடும். முட்டைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டையிடுவது மட்டும்தான் பெண்பறவையின் வேலை. கூடு கட்டும் வேலையோடு அடைகாக்கும் வேலையும் ஆண்பறவைக்கு உரித்தானது. அடைகாக்கும்போது ஆண்பறவை உணவு எதுவும் உட்கொள்ளாது. விடிகாலைப் பனித்துளிகளை அருந்தி தொண்டையை நனைத்துக்கொள்ளும். ஒருநாளைக்கு பத்துமுறை எழுந்து நின்று முட்டைகளைத் திருப்பிவிட்டு சரியான வெப்பத்தைப் பேணும்.

எட்டுவாரங்கள் கழித்து குஞ்சுகள் பொரிந்துவந்தபின்னும் அப்பா பறவையின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவற்றை வளர்த்தெடுப்பதும் முழுக்க முழுக்க அப்பாவின் வேலைதான். குஞ்சுகள் பொரிந்தவுடன் 25 செ.மீ. உயரத்தில் உடல் முழுக்க கறுப்பு வெள்ளை வரிகளுடன் இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் மெல்ல மெல்ல கருப்பு, பழுப்பு, கரும்பழுப்பு என்று நிறமாறி முழுவளர்ச்சியடையும்.

EMU_

ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான ஈமு, அமெரிக்காவின் உயிரியல் பூங்காவுக்கென அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிப்பது மறுக்கமுடியாத உண்மை. உலகச்சந்தையில் ஒரு முதலீடாகவே ஈமு கணிக்கப்படுகிறது. ஈமு முட்டையோடுகள் அலங்காரப்பொருட்கள் செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுகின்றன. ஈமுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஈமு எண்ணெய் நுண்ணுயிர்க்கொல்லியாகவும், தீக்காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பல சரும நிவாரண மற்றும் சரும அழகு சாதனங்களில் ஈமு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஈமுவின் தோல் காலணிகள், கைப்பைகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

எட்டுகோடி வருடங்களுக்கு முன்பிருந்தே ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் பறவையினமான இவை பூர்வகுடி மக்களால் உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டுவந்தன. அவற்றின் கொழுப்பு வலிநிவாரணியாக பயன்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒருவகை காவிமண்ணுடன் ஈமு எண்ணெய் கலந்து உடல்களில் ஓவியம் தீட்டி அலங்கரித்துக்கொண்டு பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவது பழங்கால பூர்வகுடி மக்களின் வழக்கமாகும். பூர்வகுடி மக்களின் புராணக்கதைகளோடு பெரும் தொடர்புடைய ஈமுவுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, மலைகள், ஆறுகள், வாய்க்கால்கள், ஊர்கள் போன்று கிட்டத்தட்ட அறுநூறு இடங்களுக்கு ஈமுவின் பெயரை வைத்து சிறப்பித்துள்ளது.

ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை? பூர்வகுடி மக்கள் சொல்லும் கனவுக்காலக் கதையைக் கேட்போமா?

தினேவான் என்னும் ஈமுதான் அப்போது பறவைகளின் அரசனாக இருந்தது. வானை அளக்கும் மிகப்பெரிய சிறகுகளைக் கொண்டு மிக வேகமாகப் பறந்துகொண்டிருந்த அதைப் பார்த்து கூம்பள்குபான் என்னும் வான்கோழிக்கு பலத்த பொறாமை. அது ஒருநாள் தன் சிறகுகளை மடக்கிவைத்தபடி தினேவானிடம் வந்து தான் சிறகுகளை விபத்தில் இழந்துவிட்டதாகவும் தன்னை மற்றப் பறவைகள் கேலி செய்வதாகவும் சொல்லி அழுதது. எவ்வளவோ சமாதானம் செய்தும் கூம்பள்குபானைத் தேற்றமுடியவில்லை. அதன் வருத்தம் போக்க நினைத்த தினேவான் தானும் தன் சிறகுகளை வெட்டிக்கொண்டது. அதைப் பார்த்த கூம்பள்குபான் வெற்றிச்சிரிப்புடன் தன் சிறகுகளை விரித்துக்காட்டி தன் திட்டம் பலித்துவிட்டதை எண்ணி சந்தோஷமாக நடனமாடிக்கொண்டு சென்றது. அன்றிலிருந்துதான் ஈமுவால் பறக்கமுடியாமல் போனது. கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

கொஞ்சநாள் கழித்து தினேவான் தன்னுடைய பன்னிரண்டு குஞ்சுகளுடன் இரைதேடி வந்துகொண்டிருந்தது. தூரத்தில் கூம்பள்குபானும் தன்னுடைய பன்னிரண்டு குஞ்சுகளுடன் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தது. பழிக்கு பழி வாங்க நினைத்த தினேவான் தன் நண்பன் ஒருவனிடம் பத்து குஞ்சுகளைக் கொடுத்து மறைத்துவைக்கச் சொல்லிவிட்டு இரண்டு குஞ்சுகளை மட்டும் அழைத்துக்கொண்டு கூம்பள்குபானிடம் போனது. கூம்பள்குபானைப் பார்த்து பரிதாபப்படுவதுபோல் சொன்னது. “ஐயோ பாவம், இத்தனைப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு உன்னால் எப்படி எல்லாவற்றுக்கும் உணவூட்ட முடியும்? என்னைப் பார். எனக்கு இரண்டே இரண்டு பிள்ளைகள்தான். நிறைய உணவூட்ட முடிகிறது. நீ பன்னிரண்டு பிள்ளைகளுக்கு ஊட்டும் உணவை நான் இரண்டு பிள்ளைகளுக்கு ஊட்டுகிறேன். அதனால்தான் என் பிள்ளைகளும் என்னைப்போலவே நன்கு பலசாலியாக வளர முடிகிறது..” என்று சொல்லிவிட்டுப் போனது.

பொறாமை எண்ணம் கொண்ட கூம்பள்குபான், தினேவான் சொன்னது உண்மையென நம்பி தன்னுடைய குஞ்சுகளுள் இரண்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றைக் கொன்றுபோட்டது. பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. ஆனாலும் என்ன பயன்? அன்றிலிருந்து இன்றுவரை அதனால் ஒரு ஈட்டுக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் இடமுடியவில்லையே.!

(தொடரும்)

“ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை?” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. ஈமு பறவை பற்றி வெகு நன்றாக விளக்கியுள்ளீர்கள் ஒரு புதுவிஷயம் தெரிந்துகொள்ள முடிந்தது கற்பனை கதையும் வெகு அருமையாக உள்ளது பாராட்டுக்கள் கீதா மதிவாணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.