சிறப்பு கட்டுரைகள்

கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!

ஆஸியெனும் அதிசயத்தீவு – 3 (வல்லபி)

கீதா மதிவாணன்

கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? இதோ அந்தக் கதை!

geetha mathivanan

மிகவும் இளகிய மனம் படைத்த கங்காரு ஒன்றும் அதன் குட்டியும் ஒரு காட்டில் வசித்துவந்தார்களாம். கங்காருவின் குட்டி சரியான வாலுக்குட்டியாம். அது ஒரு இடத்தில் இல்லாமல் எங்காவது ஓடிக்கொண்டே இருக்க, அம்மா வேட்டைக்காரர்களிடமிருந்தும் மற்ற எதிரிகளிடமிருந்தும் அதைக் காப்பாற்ற அதன் பின்னால் ஓடிக்கொண்டே இருக்குமாம். எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் குட்டி அம்மா பேச்சை கேட்பதே கிடையாது.

ஒருநாள் அம்மாவும் பிள்ளையும் ஆற்றோரத்தில் வந்துகொண்டிருக்கும்போது புதருக்குள் யாரோ முனகுவது போன்ற சத்தம் கேட்டது. புதர்களை விலக்கிப் பார்த்தபோது அங்கொரு வயது முதிர்ந்த வாம்பேட் படுத்துக்கிடந்தது. (வாம்பேட் என்பதும் ஆஸ்திரேலியாவின் ஒரு தனித்துவ விலங்கு. இதைப்பற்றி பிறகு வரும் பகுதியில் பார்க்கலாம்) கங்காரு அதனருகில் போய் ‘ஏன் இப்படி முனகிக்கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டது. வாம்பேட் , “எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்கு இப்போது யாருமே துணையில்லை. எனக்கு கண்ணும் தெரியவில்லை. புல் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பசியால் வாடிக்கொண்டிருக்கிறேன்”என்று சொன்னது. அதைக் கேட்ட தாய்க்கங்காருவுக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது.

“சரி, நீ என் வாலைப் பிடித்துக்கொள்.. நான் புல் இருக்கும் இடத்துக்கு உன்னைக் கூட்டிப்போகிறேன்” என்று சொன்னது. குட்டியிடம் “நீ எங்கும் ஓடிப்போகாமல் என் கூடவே வா. நாம் இந்த வாம்பேட் தாத்தாவைக் கொண்டுபோய் புல்லிருக்குமிடத்தில் விட்டுவிட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு வாம்பேட்டை அழைத்துக்கொண்டு போனது.

நிறைய பசும்புற்கள் வளர்ந்துள்ள புல்வெளியில் வாம்பேட்டை விட்டுவிட்டு குட்டியைப் பார்த்தால் காணவில்லை. வழக்கம்போல அது எங்கோ விளையாடப் போய்விட்டது. அம்மா குட்டியைத் தேட முற்படுகையில் ஒரு வேட்டைக்காரன் வாம்பேட்டை பூமராங்கால் குறிவைப்பதைப் பார்த்துவிட்டது.

ஐயையோ.. வாம்பேட்டைக் காப்பாற்ற வேண்டுமே என்று பதறியது. “வாம்பேட்.. ஓடு ஓடு. வேட்டைக்காரன் உன் பின்னாலிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு வேட்டைக்காரனின் முன்னால், தான் ஓடி அவன் கவனத்தை திசைதிருப்பியது. அவனும் வாம்பேட்டை விட்டுவிட்டு கங்காருவைத் துரத்த ஆரம்பித்தான். அது ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டது. அதற்கு இப்போது தன் குட்டியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. வேட்டைக்காரன் குகையின் இருளில் கங்காருவைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியதும் கங்காரு ஓடிப்போய் குட்டியைத் தேடிக்கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வேறிடம் சென்று தப்பித்தது.

வாம்பேட் உண்மையில் வாம்பேட் இல்லை என்பதும் அது பையாமி என்னும் கடவுள் என்பதும் கங்காருவுக்குத் தெரியாது. இந்த உலகத்திலேயே யார் மிகவும் அன்பானவர் என்று பார்ப்பதற்காகவே பையாமி வாம்பேட் உருவெடுத்து வந்திருந்தார். வயதான வாம்பேட்டுக்கு எந்த விலங்கும் உதவாத நிலையில் கங்காருதான் உதவியது. தன் உயிரைப் பணயம் வைத்து வேட்டைக்காரனிடமிருந்து காப்பாற்றியது. அதனால் அதற்கு பரிசு தர நினைத்தார் கடவுள்.

அம்மாவை விட்டு ஓடி ஓடிப்போய்விடும் கங்காருக்குட்டியைப் பத்திரமாகப் பாதுகாக்க அம்மா கங்காருவின் வயிற்றில் ஒரு பையைத் தருவித்தார். கங்காருதான் மிகவும் இளகிய மனம் படைத்ததாயிற்றே. அது மற்ற விலங்குகளுக்கும் தன்னைப்போலவே வயிற்றுப்பை தரவேண்டுமென்று கடவுளை வேண்டியது. கடவுளும் அவ்வாறே தந்தார். அதனால்தான் மார்சுபியல் விலங்குகள் அனைத்துக்கும் வயிற்றில் பை உள்ளது.

எவ்வளவு சுவாரசியமான கதை! சரி, இப்போது கீழே இருக்கும் படத்தைப் பாருங்க.. இதன் பெயர் என்ன சொல்லுங்க பார்ப்போம். எங்களுக்குத் தெரியாதா? இவ்வளவு நேரம் கங்காருவைப் பற்றி சொல்லிவிட்டு இப்போது கங்காரு படத்தைப் போட்டு இது என்ன என்று கேட்கிறாயே என்கிறீர்களா? இது கங்காரு மாதிரி. ஆனால் கங்காரு இல்லை. குழப்பமாக இருக்கிறதா? சொல்கிறேன். கேளுங்க.

Vallabi-benneta

கங்காருகளில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட வகைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவற்றுள் முக்கியமான மூன்று வகை கங்காரு, வல்லரு, மற்றும் வல்லபி. எல்லாமே பார்ப்பதற்கு அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால்தான் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். முக்கியமாக அளவு வித்தியாசம். எழுந்து நிற்கும்போது ஓராள் உயரத்துக்கு இருந்தால் அது கங்காரு… சின்னதாய் நம்முடைய முழங்கால் அளவுக்கு இருந்தால் அது வல்லபி. இரண்டுக்கும் இடைப்பட்ட உயரம் இருந்தால் அது வல்லரு (வல்லபி + கங்காரு = வல்லரு). இப்போ வித்தியாசம் புரிகிறதா?

வல்லபிக்களைப் பார்த்தால் கங்காரு குட்டியா அல்லது குட்டி கங்காருவா என்ற குழப்பம்தான் வரும். அளவில் சிறிய இவை உலகின் பல நாடுகளிலும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால் நாய் பூனைகளைப் போன்று வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் விலங்கு அல்ல இவை. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் இயல்புடையவையும் இல்லை.

வல்லபிக்கள் புதியவர்களைப் பார்த்தால் மிகவும் அசௌகரியமாக உணர்வதோடு மன அழுத்தத்துக்கும் ஆளாகுமாம். நாயைப் போல மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சவோ காரில் அழைத்துப் போகவோ லாயக்கில்லாத விலங்குகள் என்றாலும் பலரும் வல்லபிக்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை விரும்புகின்றனர்.

ஆடு மாடுகளைப் போல சுதந்திரமாக சுற்றித்திரியும் வண்ணம் பட்டி அடைக்கப் போதுமான இடவசதியும் வேலி பாதுகாப்பும் இவற்றுக்குத் தேவை. வல்லபிக்கள் வேலிகளைத் தாண்டிப்போய்விட்டால் என்னாவது என்று சிலருக்கு பயம் வருவதுண்டு. ஆனால் வல்லபிக்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கங்காருகள் வேலிகளைத் தாண்டுவதில்லை. வேலியினூடாகவோ அல்லது வேலிக்கடியிலோ நுழைந்து வெளியேறத்தான் முயற்சி செய்யும். ஆறு மீட்டர் உயர இரும்புக்கம்பி வேலியை தரையோடு நன்கு அழுந்தப் புதைத்துவிடுதல் நலம் பயக்கும்.

சில உலக நாடுகளிலும் வல்லபிகள் அறிமுகப்படுத்தப்பட்டு எதிர்பாராத அளவில் பெருகியுள்ளன. இங்கிலாந்தைச் சார்ந்த மாண்தீவில் 1970-இல் உயிரியல் காட்சி சாலையிலிருந்து தப்பியோடிய ஒரு சோடி வல்லபியால் இன்று அந்த இனத்தின் எண்ணிக்கை நூற்றைத் தாண்டிவிட்டது. இது போல் ஹவாய் தீவு, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிருகக்காட்சி சாலைக்கென்று அனுப்பப்பட்ட வல்லபிக்களுள் சில எப்படியோ தப்பி வெளியேறி மலைப்பிரதேசங்களிலும் காடுகளிலும் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனவாம்.

இந்த வல்லபிகளுக்கும் ரக்பி விளையாட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன? இருக்கிறதே. வேறொன்றுமில்லை. ஆஸ்திரேலியாவின் தேசிய ரக்பி அணியின் செல்லப்பெயர் வல்லபிஸ். 1908 இல் நடைபெற்ற உலகளாவிய ரக்பி போட்டிகளின் போது ஒவ்வொரு நாட்டு அணிக்கும் ஒரு பட்டப்பெயர் பத்திரிகைகளால் இடப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டுத் திறத்தை சிலாகித்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை அவர்களை ‘முயல்கள்’ என்று பெயரிட்டுப் பாராட்டியதாம்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அந்தப் பெயரை மறுத்து ‘வல்லபிகள்’ என்று சூட்டிக்கொண்டார்களாம். அதற்கு இரண்டு காரணங்கள் முதலாவது தாயகத்தின் சொந்த விலங்குகளான வல்லபிகள் மீதான பிரியம். மற்றொன்று.. ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னாளில் பெருமளவு பெருகி பயிரழிக்கும் பிராணியாக மாறிவிட்ட முயல்கள் மீதான வெறுப்பு.

ஆஸ்திரேலியாவின் தேசிய கால்பந்து குழுவின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? சாக்கரூஸ் (soccer + kangaroos = socceroos) ஆஸ்திரேலியாவில் கால்பந்தை சாக்கர் (soccer) என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். கால்பந்து (football) என்று சொன்னால் அது ரக்பியை மட்டுமே குறிக்கும். ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொள்ளும் சாக்கர் அணிக்கு வேறு பெயர். என்னவென்று ஊகிக்க முடிகிறதா? ஒலிரூஸ் என்பதுதான் அது. (Olyroos = Olymbic + kangaroos)

ஆஸியின் அதிசயங்கள் இன்னும் தொடரும்.

Advertisements

“கங்காருவுக்கு வயிற்றுப்பை வந்த கதை!” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. ஆசியின் அதிச்யங்கள் அருமை.
    கங்காருவின் வயிற்றுபை கதை அருமை.
    கங்காருவின் அன்புக்கு கிடைத்த பரிசு.
    வல்லபி பற்றி தெரிந்து கொண்டேன்.
    வாழ்த்துக்கள் கீதா.

  2. தொடர் சுவாரசியமாய்ப் போகிறது. கங்காரு பை பற்றிய கதையையும் ரசித்தேன். வல்லபி. வல்லரு பற்றிய செய்திகள் இதுவரை அறியாதவை. தொடர்ந்து வாசிக்க ஆவலாயிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s