செல்வ களஞ்சியமே – 100
ரஞ்சனி நாராயணன்

குழந்தையின் கோபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? சின்னக் குழந்தைதானே, அதன் கோபம் நம்மை என்ன செய்துவிடும் என்று சிலருக்குத் தோன்றலாம்.
ஒரு உதாரணம் பார்க்கலாம்:
என் தோழிக்கு ஒரு பிள்ளை. ஒரு பெண். சிலநாட்களாகவே அவளது பிள்ளை அவனுடைய அறையிலிருந்து அதிகம் வெளியே வருவதில்லை. அப்பா அம்மாவுடன் அதிகம் பேசுவதில்லை. எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவதில்லை. என்ன ஆகியிருக்கும் என்று சிறிது கவலையுடன் தோழி தனது கணவரைக் கேட்டாள். அந்தக் கேள்விக்கு அவளது கணவரிடமிருந்து வந்த பதிலை விட, அவளது மகள் அளித்த பதில் அவளை ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டது. ‘நீங்கள் போடும் சத்தத்திலிருந்து தப்பிக்கவே அவன் அப்படிச் செய்கிறான். நீயும், அப்பாவும் அவனை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களாம். ஏதாவது ஒரு காரணத்திற்காக அவனைப் பார்த்து சத்தம் போடுகிறீர்களாம். அவனைப் பார்த்தாலே உங்களுக்குக் கோபம் வருகிறதாம். அதனாலேயே அவன் தன் அறையை விட்டு வெளியே வருவதில்லையாம்’
குழந்தையின் மேல் பெற்றோர்களுக்குக் கோபம் வந்தால் குழந்தையும் பெற்றோர்களின் மேல் கோபம் கொள்ளுகிறது. அதனால் அவர்களுக்கிடையே ஒரு வெற்றிடம் உண்டாகிவிடுகிறது. பெற்றோர்களும், குழந்தையும் மனத்தால் வெகு தூரம் போய்விடுகிறார்கள். இந்தப் பாடத்தை மேற்கண்ட நிகழ்ச்சி மூலம் என் தோழி கற்றுக்கொண்டாள். அவளும், அவளது கணவரும் தங்கள் நடவடிக்கை பற்றி ஆழ்ந்து யோசனை செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் அன்றுவரை தங்களை கோபக்கார பெற்றோர்கள் என்று நினைத்ததே இல்லை. தங்களைப் பற்றி இதுவரை அறியாத ஒன்றை அவர்கள் அன்று அறிந்துகொண்டனர். உடனே தங்கள் பிள்ளையைக் கூப்பிட்டனர். மகளும் உடனிருக்க இந்த விஷயம் ஆராயப்பட்டது. தாங்கள் சத்தம் போடுவது இத்தனை பெரிய இடைவெளியை தங்களுக்கும் தங்கள் பிள்ளைக்கும் இடையே உண்டாக்கும் என்று தாங்கள் நினைக்கவில்லை என்றும் மனபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். தங்களை மாற்றிக்கொள்வதாகவும் இருவரும் உறுதி கூறினர்.
பிள்ளைகள் நம்மிடமிருந்து விலகிப் போவது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கும் விஷயம். உடனடியாக சரி செய்ய வேண்டிய விஷயம் இது. இதை இப்படியே விட்டுவிட்டால் பெரியவர்களாகும்போது பெற்றோர்களுடன் பேசுவதற்கே தயங்கும் அளவிற்குப் போய்விடும். இங்கு இரண்டு மூன்று விஷயங்களை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்:
• குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பது சரி. உங்கள் கண்டிப்பு அவர்களை உங்களிடமிருந்து விலகி இருக்கச் செய்யக்கூடாது.
• பயம் இருக்க வேண்டும் – தவறு செய்தால் அம்மா அப்பாவிற்குப் பிடிக்காது என்று. ஆனால் அந்த பயம் உங்களை அந்நியப்படுத்தி விடக்கூடாது.
• குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை பார்த்து சத்தம் போடுவது எல்லா பெற்றோரும் செய்வதுதான். ஆனால் அந்த சத்தம் அவர்களை மனதளவில் உங்களிடமிருந்து விலகி அமைதியாக்கி விடக்கூடாது
பெற்றோர்களின் கோபம் எப்போதுமே ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்பா எப்போதுமே இப்படித்தான் சத்தம் போடுவார் என்றோ, அம்மா எப்போதுமே என்னை திட்டுவாள் என்றோ குழந்தைகள் மனதில் ஒரு பிம்பம் ஏற்படும்படி பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இப்படி ஏற்பட்டுவிட்டால் குழந்தைகள் நிச்சயம் உங்களை விட்டு விலகித்தான் போவார்கள். ஒருபோதும் உங்களிடம் நெருங்கி வரமாட்டார்கள். இந்த நிலை பெற்றோர், குழந்தை இருவருக்கும் நல்லதல்ல.
எப்போதுமே கத்தும் அப்பா, எப்போதுமே திட்டும் அம்மா இருவருமே குழந்தைகளுக்கு மோசமான உதாரணங்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் இருவழிகளில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுவார்கள். ஒன்று பெற்றோர்களை எதிர்த்துப் பேசி தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயலுவார்கள். அல்லது தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு தங்களுக்குள்ளே சுருங்கிப் போவார்கள். இரண்டு நிலையுமே பெற்றோர்-குழந்தை உறவில் நல்லதல்ல. வளரும்போது பெற்றோரைப் பற்றிய ஒரு கசப்பு உணர்விலேயே வளருவார்கள். பெற்றோர்கள் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொண்டாலும் அவர்கள் ஏதோ நடிப்பது போல உணருவார்கள். அதுமட்டுமல்ல அவர்களும் ஒரு மோசமான பெற்றோராக உருவாகக் கூடும். தங்கள் குழந்தைகளிடம் ‘என் அம்மா அப்பா என்னை சரியாக வளர்க்கவில்லை. நான் அப்படியில்லை என்று சொல்லக்கூடும். இந்தப் போக்கை நாம் பல வீடுகளில் பார்க்கிறோம்.
மொத்தத்தில் நம் குழந்தைகள் நம்மிடம் பேசுவதற்கு, நம்மை அணுகுவதற்குக் தயக்கம் காட்டக்கூடாது. நல்ல விஷயமோ அல்லது தங்களது தவறுகளையோ நம்மிடம் வந்து சொல்லும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளுடன் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மைப் பற்றிய நல்லெண்ணம் அவர்கள் மனதில் உருவாக வேண்டியது மிகவும் முக்கியம். நம்மை அவர்கள் வில்லன் அல்லது வில்லியாகப் பார்க்கக் கூடாது.
என் பிள்ளை நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆர்ட் வகுப்பில் ஆசிரியை அம்மா, அப்பா வை படம் வரையும்படி சொல்லியிருக்கிறார். அதே பள்ளியில் நானும் வேலையாக இருந்தேன். அடுத்தநாள் பள்ளிக்குப் போனவுடன் ஆர்ட் ஆசிரியை என்னைக் கூப்பிட்டு என் பிள்ளை வரைந்திருந்த படத்தைக் காண்பித்தார். அவனது அப்பாவை ஒல்லியாக உயரமாக வரைந்திருந்தவன் அவர் பக்கத்தில் என்னை அகலமாக வரைந்திருந்தான். நான் சொன்னேன் அவன் ஆசிரியையிடம்: ‘இவனும் என்னை அகலமாக வரைந்திருக்கிறானே. சீக்கிரம் ஏதாவது டயட் செய்து இளைக்க வேண்டும் போலிருக்கிறது!’
ஆசிரியை சொன்ன பதில் தான் நமது இந்தப் பதிவிற்கு மிகவும் முக்கியமானது. ‘அப்படியில்லை, ரஞ்சனி. அவனது வாழ்வில் உங்கள் பங்கு அதிகம் அப்பாவின் பங்கைவிட என்பதைத்தான் இது குறிக்கிறது. குழந்தைகள் எப்போதுமே தங்கள் அம்மா அப்பாவை குண்டு ஒல்லி என்று மனதில் நினைக்க மாட்டார்கள். யார் பங்கு அதிகமோ அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில குழந்தைகள் அவர்களது அப்பாவைப் பெரிதாக வரைந்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் குண்டானவர்கள் இல்லை. குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்!’ என்றார் அவர்.
இந்தப் பதிவு இத்துடன் இப்போதைக்கு நிறைவு பெறுகிறது. குழந்தைகளைப் பற்றி நிறைய எழுதலாம். தொடர்ந்து நூறு வாரம் எழுதியிருக்கிறேன் என்பது என் எழுத்து உலகில் மிகப்பெரிய சாதனை. நிறைய பேர்கள் படித்து பயனடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
முதன்முதலாக எனக்குத் தொடர் எழுத வாய்ப்புக் கொடுத்ததுடன் எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்த நான்கு பெண்கள் தளத்திற்கும் மு.வி. நந்தினி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நம் குழந்தைகளை புரிந்து கொள்ளுவோம் என்று சொல்லி நிறைவு செய்கிறேன்.
(முற்றும்)
உங்களின் நூறாவது செல்லக் குழந்தைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இந்த காலத்தில் நம் குழந்தைகளை மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளை புரிந்து கொள்வதும் கஷ்டமாக உள்ளது. நாம் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டியுள்ளது