ஞா.கலையரசி
முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட, இம்மோசடியில் ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான்.
கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா டி.ஜி.பி, ஓம் பிரகாஷ், அவருக்கு வந்த கைபேசி அழைப்பை, வங்கியிலிருந்து வந்ததாக நம்பி, ஏ.டி.எம். கார்டு மற்றும் அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார். அதே போல் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளரும், பதினான்காயிரம் ரூபாயைப் பறிகொடுத்தார்.
‘ஏ.டி.எம் கார்டு மற்றும் ‘பின்’ எண்களை நாங்கள் ஒரு போதும் கேட்க மாட்டோம்; யாரிடமும் கொடுக்காதீர்கள்,’’ என்று அனைத்து வங்கிகளும் கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலத் திரும்பத் திரும்ப எச்சரித்தாலும் மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகவே இருக்கின்றது.
இது எப்படி நடக்கிறது? பணத்தைப் பறிகொடுத்தோர் சொல்வது என்ன?
நம் கைபேசி எண்ணுக்குப் புது எண்ணிலிருந்து அழைப்பு வரும். பேசும் நபர், வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொல்வார் . ஏ.டி.எம் கார்டு தேதி முடிந்துவிட்டது என்றும், அதனைப் புதுப்பித்துப் புது கார்டு வழங்கக் கார்டின் 16 இலக்க எண்களையும், அதற்கான ‘பின்’ எண்ணையும் கேட்பார்.
நாம் எல்லாவற்றையும் சொல்லிமுடித்த சிறிது நேரத்தில், நம் கணக்கிலிருந்து பணம் எடுப்பதாக நம் கைபேசிக்கு OTP எண் (ONE TIME PASSWORD) வரும். திரும்பவும் அதே நபர் நம்மைத் தொடர்பு கொண்டு அந்த OTP பாஸ்வேர்டை கேட்பார். நாங்கள் தான் அந்த பாஸ்வேர்டை அனுப்பியிருக்கிறோம்; அதைச் சொன்னால் தான் கார்டைப் புதுப்பிக்க முடியும் என்பார். நாம் சொன்ன அடுத்த நிமிடம், நம் கணக்கிலிருக்கும் பணம் முழுவதையும் எளிதாக எடுத்துவிடுவார். .
இம்மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருப்பது எப்படி?
- யாரிடமும், எச்சமயத்திலும் உங்கள் ஏ.டி.எம் கார்டு எண்களையோ அதன் ‘பின்’ எண்ணையோ சொல்லாதீர்கள்.
- வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்று எவ்வளவு தான் நம்பும்படியாகச் சொன்னாலும் ஏமாறாதீர்கள். எந்த வங்கியும் தொலைபேசியில் உங்கள் ஏடிஎம் கார்டு & பின் எண்களைக் கேட்காது.
- உங்கள் கைபேசியில் பணம் எடுப்பதாகச் செய்தி வரும் நிமிடத்திலாவது விழித்துக் கொள்ள வேண்டும். அச்சமயத்தில் வரும் OTP என்று சொல்லப்படும் ONE TIME PASSWORD ஐ சொல்லவே கூடாது. இது மிக மிக முக்கியம்.
- திரும்பத் திரும்ப போன் செய்து தொந்திரவு செய்தால், நானே வங்கிக்கு நேரில் வந்து கார்டை மாற்றிக்கொள்கிறேன் என்று கூறி இணைப்பைத் துண்டிக்கவும். அதற்கு மேலும் தொடர்ந்தால், காவல் துறை சைபர் கிரைமுக்கு உன் எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்; மறு நிமிடம் போன் ‘கட்’ ஆகிவிடும்.
- சிலர் ஏ.டி.எம் பின்னட்டையில், அதன் ‘பின்’ (PIN) எண்ணை எழுதி வைத்திருப்பார்கள். அது மிகவும் ஆபத்து. ஒரு வேளை உங்கள் கார்டு தொலைந்தால், கார்டு யாரிடம் கிடைக்கிறதோ அவர் எளிதாக அந்த எண்ணைப் போட்டு, பணம் மொத்தத்தையும் உருவி விடுவார். அது போல் ஏடிஎம் கார்டையும், பின் நம்பர் எழுதிய தாளையும் ஒரு போதும் சேர்த்து வைக்கக் கூடாது.
- பின் நம்பரை நினைவு வைத்துக்கொள்ள முடியாதவர்கள், வீட்டில் ஏதாவது ஒரு டைரியிலோ, சுவரிலோ யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
- யாரிடமும், எதற்காகவும், எந்த நேரத்திலும் ஏடிஎம் கார்டு மற்றும் பின் எண்களைச் சொல்லாதவரைக்கும் பிரச்சினை ஏதுமில்லை.