மண்ணின் மைந்தர்கள்
கீதா மதிவாணன்
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப நான் வந்துசேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவைப் பற்றி நான் கண்ட, கேட்ட, அறிந்த, ரசித்த, வியந்த, என்னை பாதித்த பல தகவல்களையும் இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியா என்றால் இன்றைக்கிருக்கும் நவநாகரிக நாட்டைத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகளைப் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரைப் பற்றி அறிவதும் அவசியம். இம்மண்ணின் சொந்த மைந்தர்களான அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும் அதுதான்.
பூர்வகுடிகள் என்பவர்கள் யார்? கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த மாபெரும் நிலப்பரப்புக்கு வந்துசேர்ந்தவர்கள்தாம் ஆஸ்திரேலிய மண்ணின் முதல் குடியேறிகள் – ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகள். கட்டுமஸ்தான கரிய உடலும் பரந்த மூக்கும் முக அமைப்பும் இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதவைக்கிறது. கப்பல்களோ படகுகளோ கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து எப்படி ஆஸ்திரேலியாவுக்கு வந்திருப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான்.
ஆப்பிரிக்காவிலிருந்து கடலோரமாகவே பயணித்து அரேபியா, இந்தியா, ஆசியத்தீவுகள் வழியாக தற்செயலாக ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கலாம் என்றும் ஆஸ்திரேலியா ஒரு பரந்த தீவாக இருந்ததால் இங்கேயே நிலையாக குடியேறியிருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய பூர்வகுடி மொழியில் உள்ள சில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தைகளுக்கும் உள்ள தொடர்பு இதனை உறுதிப்படுத்துகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆங்காங்கே குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்கள் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளாக தங்களுக்குள் கட்டிக்காத்த பாரம்பரிய, கலாச்சார, ஆன்மீக, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பெயர் இருந்தது. அந்தப் பெயரைக் கொண்டே அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
நாடோடிகளான அவர்கள் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியையும் ஆங்காங்கே கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும் தின்று வாழ்ந்தார்கள். நிலையான வசிப்பிடங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்கு ஆதாரமான பயிர்வளர்க்கும் வித்தையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நிலத்துக்கும் நீருக்கும் ஆன்மா உண்டென்னும் நம்பிக்கை உடையவர்கள். இம்மாபெரும் நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் அமானுஷ்ய சக்தியுடன் திகழ்வதான அவர்களது நம்பிக்கை இன்றைக்கும் தொடர்கிறது. கனவுக்காலம் (Dreamtime) என்பதுதான் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் வாழ்வியலின் நம்பிக்கை மையம். பூமி, சூரியன், சந்திரன் மட்டுமல்லாது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு விலங்கு பறவைகளுக்குமான ஆதிகாலக் கதைகளைக் கொண்டிருக்கிறது அவர்களுடைய கனவுக்காலம். கிட்டத்தட்ட பைபிள் கதைகளைப் போன்றதுதான் என்றாலும் அக்கதைகள் இறந்தகாலத்தோடு முற்றுப்பெறுவதில்லை. ஒரு சங்கிலி போல் இன்றும் தொடரும் கதைகள்.. இனி வருங்காலத்தையும் குறிக்கும் கதைகள்.
தங்களுடைய கனவுக்காலக் கதைகள் மீதும் தாங்கள் வாழும் மண்ணின்மீதும் பெரு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பூர்வகுடி மக்கள். செவிவழி தொடரும் அக்கதைகளை பரம்பரை பரம்பரையாக ரகசியம் போல் பாதுகாப்பவர்கள். அவற்றை இழிவுபடுத்துவதோ தகாத முறையில் பயன்படுத்துவதோ அவர்களுக்கும் அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைக்கும் செய்யும் துரோகமாகும்.
எழுத்துவடிவம் பெற்றிராத அவர்களுடைய மொழியிலிருந்து அக்கதைகளைப் பெறுவதென்பது பின்னாளைய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு அத்தனை எளிதாய் இருந்திருக்கவில்லை. மிகுந்த பிரயத்தனங்களுக்கும் பிரயாசைகளுக்கும் பிறகுதான் சில நிபந்தனைகளோடு அவர்களுடைய கதைகளை பூர்வகுடியினத்தின் மூத்தவர்கள் சொல்லக்கேட்டு அச்சிலேற்றப்பட்டிருக்கின்றன.
கனவுக்காலத்தின் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்த ஒரு இளம்பெண்ணின் கதை இது. அவள் வேறொரு குழுவைச் சேர்ந்த ஒரு இளைஞனை விரும்புகிறாள். அவனைத் திருமணம் புரிந்துகொள்ள விரும்புகிறாள். இதை அவளது கூட்டத்தினர் விரும்பவில்லை. அதனால் அவர்களை விட்டுப்பிரிந்து சென்று தான் காதலித்தவனையே கைப்பிடிக்க முடிவு செய்து புறப்பட்டுவிடுகிறாள். காடுமலை எல்லாம் திரிந்து தன் காதலனைத் தேடிச் செல்கையில் அவளைத் தேடிக்கொண்டு அவளது கூட்டத்தினர் தூரத்தில் வந்துகொண்டிருப்பது தெரிகிறது. அவள் அவர்களிடம் பிடிபட்டுவிட விரும்பவில்லை. கண்மண் தெரியாமல் ஓடுகிறாள். கல்லும் முள்ளும் அவள் பாதங்களையும் உடலையும் கிழித்து காயமாக்குகின்றன. உயிர்போனாலும் பரவாயில்லை அவர்களிடம் சிக்கிவிடக்கூடாதென்று அவள் தொடர்ந்து ஓடுகிறாள். ஒரு சமயம் அதற்கு மேல் ஓடமுடியாமல் நிலைகுலைந்து சோர்ந்து விழுந்துவிடுகிறாள். அதைக் கண்ட அவளுடைய முன்னோரின் ஆன்மாக்கள் அவளை பத்திரமாக அள்ளிக்கொண்டு வானகம் சென்றுவிடுகின்றனர்.
அங்கே அவள் பலநாட்கள் நிம்மதியாக உறங்குகிறாள். அவள் விழித்தெழும்போது அவளுக்கான உணவும் நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். கணப்படுப்பு கூட கனன்றுகொண்டிருக்கிறது. அவள் தனியளாய் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். நாளாக நாளாக அவளுக்கு வீட்டு ஏக்கம் எழுகிறது. ஆனால் வானகத்திலிருந்து அவளால் மீண்டும் மண்ணுலகத்துக்குத் திரும்புவதென்பது சாத்தியமில்லை. என்ன செய்வது? அவள் அங்கிருந்தபடியே தன் கூட்டத்தைப் பார்க்கிறாள். அவர்கள் அவளைத் தேடித்தேடி சோர்ந்துபோயிருக்கிறார்கள். அவள் காணாமல் போனதைக் குறித்து பெரிதும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து அவளுடைய மனம் இளகிப்போனது.
நித்தமும் குளிரால் வாடும் அவர்களுக்கு தன்னுடைய கணப்படுப்பிலிருந்து வெப்பத்தைத் தர முடிவெடுக்கிறாள். தினமும் நிறைய சுள்ளிகளைப் போட்டு தன் கணப்படுப்பை பெரிதாக எரியச்செய்கிறாள். அந்த வெப்பம் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் போய்ச்சேர்வதைப் பார்த்து மகிழ்கிறாள். தினமும் பகல் பொழுதெல்லாம் கணப்படுப்பை எரியசெய்வதிலேயே கழிக்கிறாள். மாலையானதும் நெருப்பை அணைத்துவிட்டு உறங்கப்போகிறாள். மண்ணுலக மக்கள் அந்த நெருப்புக்கு சூரியன் என்று பெயரிட்டனர். இதுதான் சூரியன் உருவான கதை. நல்லாயிருக்கில்லே?
(தொடரும்)
கீதா மதிவாணன், வலைப்பதிவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாஸனின் எழுத்துக்களை மொழிபெயர்த்திருக்கிறார். இது ‘என்றாவது ஒரு நாள்’ என்ற தலைப்பில் அகநாழிகை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பற்றியும் அவர்களுடைய சூரியன் பற்றிய கதையையும் அறிந்தேன். கதை ரசிக்கும்படி இருந்தது. மேலும் பூர்வகுடிகள் பற்றிய விபரங்கள் அறிய ஆவலாய் இருக்கிறேன். பாராட்டுக்கள்! தொடர்வதற்கு நன்றி!
பதிவை ரசித்தமைக்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி.
சூரியன் உருவான கதை அருமை.