ஞா. கலையரசி
காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை. மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.
நேச்சர் பார் எவர் தளத்தில் ‘பறவைகளும் உப்பும்,’ (Birds & Salt) என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசித்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. இது நாள் வரை நல்லது செய்வதாக நினைத்து, என் அறியாமையால், இவற்றுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிக்கும், உப்புப் போட்ட சாதத்தைக் கொடுத்துவிட்டோமே என மனம் பதைத்தது.
கட்டுரையின் முடிவில் சிட்டுக்குருவியும் புறாவும் ஓரளவு உப்பைத் தாங்கக்கூடியவை என்று படித்த பிறகு, கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. இனி என் வாழ்நாளில், கண்டிப்பாக உப்பு சேர்த்த உணவைப் பறவைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன். இக்கட்டுரையின் மூலம், நான் தெரிந்து கொண்ட முக்கிய விபரங்கள்:-
பெரும்பாலான தரைப் பறவைகளுக்கு உப்பு மிகவும் கெடுதல் செய்யும்.
ஊர்வனவற்றிக்கு இருப்பது போலப் பறவைகளுக்குச் சிறுநீரகம் உண்டு; ஆனால் இவை உப்பை அதிகளவு வெளியேற்றும் திறன் கொண்டவை அல்ல.
உப்பை வெளியேற்றும் திறன், பறவைகளின் வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. கடல் மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழும் பறவைகளின் சிறுநீரகம், மற்ற பகுதிகளில் வாழ்பனவற்றின் சிறுநீரகத்தை விட, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் திறன் கொண்டது. அதனால் தான் கடற்பறவை, மீனையும், கடல் நீரையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றது.
சிறுநீரகத்துக்கு அடுத்தபடியாக உப்பை வெளியேற்ற பறவைகளின் மண்டை ஓட்டுக்குள் நெற்றிப்பக்கம், உப்பு சுரப்பி (Salt gland) அமைந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் இது உண்டென்றாலும், , உப்பு சேர்ந்த உணவை அடிக்கடி உண்ணும் பறவைகளுக்கு மட்டுமே, இது வேலை செய்யும்.
உப்புநீரையும், உப்பு அதிகமுள்ள உணவையும் அடிக்கடி உட்கொள்ளும் பறவைக்கு, அதிகளவில் உப்பை வெளியேற்ற இச்சுரப்பி பெரியதாக இருக்கும். இது அடர்த்தி அதிகமான உப்பை (concentrated salt) வெளியேற்ற மிகக் குறைந்த நீரையே எடுத்துக்கொள்ளும். அதே சமயம் சிறுநீரகத்துக்கு ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.
நம் தோட்டத்துப்பறவைகளுக்கு அதிகளவு உப்பை வெளியேற்றும் சக்தி கிடையாது என்பதால் உப்புப் போட்ட உணவைக் கண்டிப்பாகக் கொடுக்கவே கூடாது. உப்பு போட்ட மோர் மற்றும் குழம்பு சாதம், உப்பு போட்டுப் பொரித்த கடலை, சிப்ஸ் வகையறாக்கள் கூடவே கூடாது. சுத்தமான குடிதண்ணீர் அவசியம் வைக்க வேண்டும்.
(மேலதிக விபரங்களுக்கு – http://www.natureforever.org/birds-and-salt.html)
கட்டுரையாளர் பற்றி… ஞா. கலையரசி வங்கியில் பணியாற்றுகிறார். வலைப்பதிவாளர், சூழலியல் குறித்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
பறவைகளுக்கு உப்பு சேர்க்கக்கூடாது என்ற புதிய தகவலை அறிய செய்தீர்கள் நன்றி இது எனக்கு புதிய தகவல். ஆனால் நான் எப்போதும் புறாக்களுக்கு கம்பு மட்டுமே தட்டில் போட்டு என் வீட்டு சுவரில் வைப்பேன். வெறும் சாதம் தான் காக்கைக்கு வைப்பேன் பயனுள்ள பகிர்வு கலையரசி பாராட்டுக்கள்
பயனுள்ள பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி விஜி! கம்பு போன்ற தானியங்கள் மட்டும் போடும் போது பிரச்சினையே இல்லை.வெறும் சாதத்தை வைத்தால் காக்கா தின்னமாட்டேன் என்கிறது என்பார் என் மாமியார். எனவே நான் மோர் & உப்பு போட்டுப் பிசைந்து வைப்பேன். அதுவே பழக்கமாகிவிட்டது. இத்தகவல் தெரிந்தபிறகு திருத்திக்கொண்டேன்.