சிறப்பு கட்டுரைகள், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்!

எழுத்தாளர் சுகிர்தராணி

திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஆசிரியர்களை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது அதுவும் நகைச்சுவைக்காக என்னும் மனநிலை எவ்வாறு வாய்க்கிறது என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை

Sukitha rani 2
சுகிர்தராணி

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் தமிழாசிரியர்களும் ஆசிரியைகளும் இயல்புக்கு மாறானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பேராசிரியர்கள் என்றால் சிடுமூஞ்சிகளாகவும், கரும்பலகையில் கணக்குப் போடத் தெரியாமல் விழிபிதுங்கி அசடுவழிபவர்களாகவும், முழுக்கால்சட்டை அணிந்தவர்கள் எனில் ஜிப் போட மறந்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். தமிழாசிரியர்கள் என்றால் அப்பாத்திரங்களில் நடிக்கவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களே. அர்த்தமற்ற பேச்சுகள், கெக்கே பிக்கே சிரிப்பு, அசட்டுத்தனமான உடல்மொழிகள், இரட்டைப் பொருள்பேச்சு, கையில் ஒரு குடை, மூக்குநுனியில் அமர்ந்திருக்கும் மூக்குக்கண்ணாடியென ஒருவகைமையாகவே காட்டப்படுவார்கள். ஆசிரியைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். சில திரைப்படங்களைத்தவிர பெரும்பாலானவற்றில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்,ஸீத்ரு சேலை, லோஹிப் சேலைகட்டுதல், மார்பின்மீது சேலையை ஒற்றையாகச் சரியவிடுதல், பணிபுரியும் ஊரிலுள்ள இளைஞர்கள்மீது காதல்வலை வீசுதல், அங்குள்ள முதியோர்கள் ஏங்கிப் பெருமூச்சு விடும்வண்ணம் பின்புறம் அசையும்படி நடந்துசெல்லுதல், உதட்டுச்சாயம் பூசிய உதடுகளைப் பற்களால் கடித்துச் சுழிப்பதை அண்மைகாட்சியாக வைத்தல்… இப்படியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பொதுபுத்தியில் ஆசிரியர்கள் இவ்வாறுதான் பதிய வைக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் தரக்குறைவாகவும் மதிப்புக்குறைவாகவும் பார்க்கப்படுதல் இதனால்தான்.

ஆனால் யதார்த்தத்தில் ஆசிரியர்கள் மேற்கூறியவாறு இருப்பதில்லை. இதுதான் உண்மை. ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம். நான் படிக்கின்றபோது என்னுடைய ஆசிரியர்கள் யாரும் அவ்வாறு இலர். இப்போதும் இலர். திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஆசிரியர்களை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது அதுவும் நகைச்சுவைக்காக என்னும் மனநிலை எவ்வாறு வாய்க்கிறது என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை.  கற்பித்தல், பயிற்சி வகுப்புகள், விடைத்தாள் திருத்துதல், தேர்வுப்பணி, தேர்தல் பணி ஆகியவற்றிற்காகச் செல்லும்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பார்க்கிறேன். மேற்கூறிய செய்கைகளை உடையவர்களாகவோ, கவர்ச்சியாக உடையணிந்தவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை.

ஒவ்வொரு ஆசிரியருக்குள்ளும் ஓர் எளிய அறம் உண்டு. அதன் அடிப்படையில்தான் பள்ளிக்கூடங்களில்,  செயல்கள், செய்கைகள், அணிகலன், உடையணிந்து கொள்ளும்பாங்கு ஆகியவற்றை அமைத்துக் கொள்கிறார்கள். நேற்றைய நாளிதழ் ஒன்றில் வந்திருக்கும் செய்தியைப் படித்தேன். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தவும் மாணவர்களின் கவனத்தைக் கவர்கின்ற வகையில் ஆடை அணியவும் தடைவிதிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது. முன்னது மிகச்சரியான ஒன்றுதான். பள்ளிநேரத்தில் பலர் செல்போன்களைப் பயன்படுத்துவது உண்மைதான் நான் உட்பட. முக்கியமான தகவலைத் தவறவிடும்படியாகிவிடுமோ என்பது காரணமாக இருக்கலாம்.. இருப்பினும் அது தவறுதான். அதை ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் இரண்டாவதைத்தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதென்ன மாணவர்களைக் கவரும் கவர்ச்சியான ஆடை? ஆசிரியர் ஆண் என்றால் வேட்டி, முழுக்காற்சட்டை மற்றும் மேல்சட்டை, ஆசிரியர் பெண் என்றால் சேலையும் ரவிக்கையும். இதிலென்ன கவர்ச்சி தோன்றிவிட முடியும்? இதிலென்ன ஆசிரியரோ ஆசிரியையோ மாணவ மாணவிகளின் கவனத்தைக் கவர்ந்துவிட முடியும்? ஏற்கெனவே ஆண்களுக்கு (உடற்கல்வி ஆசிரியர்கள் ட்-ஷர்ட் அணியலாம்)  ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணியவும் உடல்வடிவைக் காட்டும்படியான இறுக்கமான மேல்சட்டை மற்றும் இறுக்கமான காற்சட்டை அணியவும் வாய்மொழித்தடை உள்ளது. பெண்களுக்கு சேலைதவிர சல்வார் கமீஸ் அணிய அனுமதியில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாவட்டத்தில் அரசுப்பள்ளிக்குச் சல்வார் அணிந்துசென்ற ஓர் ஆசிரியைக்கு மெமோ கொடுக்கப்பட்டு தற்காலிகப் பணிநீக்கம்வரை சென்றது. கவர்ச்சியான ஆடை அணியத்தடை என்னும் சொற்றொடரே ஆசிரியர்களை அவமானப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர்களைப் பார்த்தால், மாணாக்கர்க்குத் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்கள் அணியும் ஆடைதான்  என்னும் ஒற்றையைக் கல்வித்துறை கண்டடைந்தது எங்ஙனம்? கருத்துக் கணிப்பு ஏதாவது நடத்தப்பட்டதா? அதற்கான தரவுகள் என்ன? ஆசிரியர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா?

எவையும் இல்லாமல் இப்படியான அறிவிப்பு வெளியிடுவது ஆச்சரியமானதல்ல. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னால், ஆசிரியர்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்தது. தேர்வுப்பணிக்குச் செல்லும்போது ஆசிரியைகள் யாரும் பூ வைத்துக்கொண்டு செல்லக்கூடாது என்று. ஏனென்றால் பூவாசனை மாணவர்களின் உணர்வைத்தூண்டி தேர்வு எழுதத் தடையாக இருக்குமாம். இதைவிட ஆசிரியர் மாணவர் உறவைக் கொச்சைப்படுத்திவிட முடியாது. வாய்மொழி உத்தரவு என்பதால் போராட முகாந்திரம் இல்லாமல் போய்விட்டது. இப்படியான உத்தரவுகளுக்குப் பின்னிருப்பது அப்பட்டமான ஆணாதிக்கச் சிந்தனையும் பெண்ணடிமைத்தனமும்தான். மேம்பட்ட அல்லது முற்போக்குச்  சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு நிச்சயம் இல்லாமல் இல்லை. மாணவர்களை ஆளுமைகளாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இப்படியான பிற்போக்குத்தனமான ஆணாதிக்கச் சிந்தனையிலமைந்த, பொதுபுத்தி சார்ந்த உடைக்கட்டுப்பாட்டு முடிவு சரியானதுதானா?

Sukitha rani
வகுப்பறையில் சுகிர்தராணி

படிக்கின்ற வயதில் மாணவரின் கவனம் சிதறுவதற்கும், இனக்கவர்ச்சி, போலிக் காதலுணர்வு தோன்றுவதற்கும் பல்வேறு சமூக, சூழ்நிலைப் புறக்காரணிகள் உள்ளன. பள்ளிகளில் நீதிபோதனை, மதிப்புக்கல்வி, நன்னெறிக்கல்வி போன்றவற்றிற்கு பாடவேளைகள் இல்லாமை, இருந்தாலும் அப்பாடவேளைகளை வேறு பாடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களிடம் புழக்கத்தில் இருக்கும் செல்போன்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசக் குப்பைகள், திரைப்படங்கள், பெற்றோர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தலில் தவறுதல், மது மற்றும் போதை தரும் பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற பல காரணங்கள் உள்ளன. எனில் மாணவர்கள் நெறி பிறழ்வதற்கு ஆசிரியர்கள் அணியும் ஆடைதான் காரணம் என்பதும், ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் ஆடை அணிய அணிய தடைவிதிக்கும் கல்வித்துறையின் முடிவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பேசும் இச்சமூகம் பெண் ஏன் இரவில் தனியாகப் போக வேண்டும், அவள் கவர்ச்சியாக ஏன் ஆடை அணிய வேண்டும், உடலை மறைக்கும்படியான ஆடை அணிவதுதானே என உளுத்துப்போன சிந்தனைக் கேள்விகளை எழுப்புவதற்கும், மாணவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், ஆசிரியர்கள்தான் அவர்களைக் கவரும்படி ஆடை அணியக்கூடாது என உடைக்கட்டுப்பாடு கொண்டுவருவதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது? பிரச்சனையின் மூலத்தை ஆராய்ந்து, தீர்வு காணாமல் இப்படியான மேம்போக்கான முடிவுகளால் மாணவர்களிடமும் சமூகத்திலும் மாற்றம் கொண்டுவர இயலுமா?

சில ஆண்டுகளாக பெண்கள் பள்ளிகளில் ஆண் தலைமைஆசிரியரோ ஆணாசிரியர்களோ நியமிக்கப்படுவதில்லை. ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை ஆணாசிரியர்களிடமிருந்து மாணவிகளை காப்பாற்றவும் மாணவர்கள் ஆசிரியைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் இப்படியான முடிவாம். ஆசிரியர் சங்கங்கள்கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆண்,பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதுதான் ஒரு சமூகம். சக மனிதர்களுடன் எவ்வாறு பழகுவது, எவ்வாறு அவர்களைப் புரிந்து கொள்வது, அவற்றின் வாயிலாக சமூகத்தை உள்வாங்கிக் கொள்வது போன்றவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் அல்லது புரிந்துகொள்ளும் ஓர் இடம்தான் பள்ளிக்கூடம். அங்கு இத்தகைய வாய்ப்புகள் எவையுமின்றி ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனிப் பள்ளிக்கூடங்கள் அமைப்பதும், அவற்றிற்கு அந்தந்த பாலார்களையே ஆசிரியர்களாக நியமிப்பதும் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.கல்வியாளர்கள் இதைக் குறித்து எவற்றையும் ஏன்  பேசுவதில்லை எனத்தெரியவில்லை. இவ்வாறு தனித்தனியாகப் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லூரிக்குள் அடிஎடுத்து வைத்ததும் சகமாணவியை அல்லது சகமாணவனை எதிர்கொள்ள இயலாமல் போகிறது. ஆண் பெண் ஆரோக்கியமான நட்புக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இப்போதும் நிறைய கல்லூரிகளில் எதிர்பால் மாணாக்கரோடு பேசுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். ஆக மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம்,அரசு ஆகியோரின் கூட்டுமுயற்சியும்,செயல்திட்டமும், செயலாக்கமும் தேவை. அதைவிடுத்து கவனத்தை ஈர்க்கும்படியான ஆடையை ஆசிரியர்கள் அணியவதுதான் மாணவனின் கவனச்சிதைவுக்குக் காரணம் எனத் துணிவதும் அதற்குக் தடைவிதிப்பதும் ’உடலுள் நோய்க்கு உடல்மேல் களிம்பு பூசுவதைப்’ போலத்தான்!

கட்டுரையாளர் பற்றி…தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுத வந்த சுகிர்தராணி நவீன பெண்கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை. இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

1.கைப்பற்றி என் கனவு கேள்- 2002(பூங்குயில் பதிப்பகம்)

2.இரவு மிருகம்-2004(காலச்சுவடு பதிப்பகம்)

3.அவளை மொழிபெயர்த்தல்-2006(காலச்சுவடு பதிப்பகம்)

4.தீண்டப்படாத முத்தம்-2010(காலச்சுவடு பதிப்பகம்)

5.காமத்திப்பூ-2012(காலச்சுவடு பதிப்பகம்)

தற்போது தலித் வாழ்வியல் சார்ந்த நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகிலுள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகின்றார்.

தேவமகள் கவித்தூவி விருது, பாவலர் எழுஞாயிறு விருது, புதுமைப்பித்தன் நினைவு விருது, நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் சுந்தர ராமசாமி விருது, பெண்கள் முன்னணியின் சாதனைப் பெண் விருது போன்றவை சுகிர்தராணி பெற்றுள்ள விருதுகளில் முக்கியமானவை. அப்பாவின் ஞாபக மறதி என்னும் கவிதை ‘கண்ணாடி மீன்’ என்னும் குறும்படமாக எடுக்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது அவளை மொழிபெயர்த்தல் கவிதைத் தொகுப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளில் இவரது பல கவிதைகள் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் குறித்து பல மாணவர்கள் முனைவர் பட்டம் மற்றும் இளம்முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர்…பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும்,பெண்களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமுறைக்கும், பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள் மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர். பெண்கள் தம் அதிகாரத்தை வென்றெடுக்க உடலரசியலை ஒரு கூறாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லி வருபவர். உழைப்பைச் சுரண்டுதல், பாலியல் வன்முறை,  பாலினச் சமத்துவமின்மை எல்லாவற்றிற்கும் களமாக விளங்கும் பெண்ணுடல் விடுதலை பெறாமல் பெண்விடுதலை சாத்தியமில்லை. பெண்விடுதலை அடையாமல் தலித் விடுதலை சாத்தியமில்லை என்பதை தன் கவிதைகளின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சுகிர்தராணி, ஒரு தலித் கவிஞரும்கூட. தான் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கச்சொல்லி சமூகம் வற்புறுத்தியதாலேயே எழுத வந்தேன் என்கிறார் சுகிர்தராணி.

“பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இக்கவிதைகள். காதல்,காமம்,வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண் சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது…” என கவிதைகளைப்பற்றி  கூறுகிறார் கவிஞர் சுகுமாரன்.

“கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. கவிஞர் சுகிர்தராணி கூறுவது போல் நம் திரைப்படங்கள் ஆசிரியர்களை நகைச்சுவை என்ற பெயரில் இயல்புக்கு மாறாக கேவலமாகச் சித்தரிக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் மாணவர்களுக்குப் பெரும்பாலான ஆசிரியர்கள், நல்லதொரு வழிகாட்டியாகயும் ரோல் மாடலாகவும் திகழ்கின்றார்கள் என்பது தான் உண்மை.
    மாணவர்கள் நெறி தவறி நடப்பதற்கு மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண முயலாமல், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆசிரியர் உடையணியக்கூடாது என்ற கல்வித்துறையின் உத்தரவு முட்டாள் தனமானது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.