செல்வ களஞ்சியமே- 97
ரஞ்சனி நாராயணன்
மற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம் சொல்லித்தர வேண்டுமா? ஆம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

இரக்கம் பற்றி இரண்டு பதிவுகளுக்கு முன் பார்த்தோம். செய்தித்தாளில் படித்த ஒரு விஷயம் எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது. ஹார்ட்வேர்ட் மனோதத்துவ இயலாளர் ஒருவர் ‘Making Caring Common’ என்று ஒரு வகுப்பு எடுக்கிறாராம் என்பதே அந்தச் செய்தி. மற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம் சொல்லித்தர வேண்டுமா? ஆம் என்கிறது சமீபத்திய ஆய்வு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். நிறைய மதிப்பெண்கள் பெற்று வகுப்பறையில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை பற்றிக் கவலைப் படுவதில்லையாம். அடுத்தவரின் நிலையிலிருந்து பார்ப்பது அல்லது தாங்கள் சேர்ந்த சமூகத்திற்கு தொண்டு செய்வது என்பதைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது இல்லையாம். அதாவது நம் குழந்தைகள் சாதனையாளர்களே தவிர, இரக்கமுள்ள மனிதர்களாக வளருவதில்லை.
வீட்டு மனிதர்களிடம் இரக்கம் காட்டும் குழந்தைகளைப் பற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை. தாத்தாவிற்கோ, பாட்டிக்கோ உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா? அப்படியே பேசினாலும், அவர்களது மதிப்பெண்களைப் பற்றிப் பேசும் அளவிற்குப் பேசுவதில்லை. இன்னொன்று: இப்போது பெற்றோர்கள் அவரவர்கள் துறையில் சாதிக்க அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு இந்த இரக்கத்தைப் பற்றி சொல்லித் தர நேரம் இருப்பதில்லை. குழந்தைகளுக்கு அவர்கள் சிறந்த ரோல்மாடல்களாக இருக்க முடிவதுமில்லை. நமது தேவைகளையும், நிர்பந்தங்களையும் நிறைவேற்ற முயலுவதில் நாம் பெரிய விஷயங்களை விட்டுவிடுகிறோம்.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நம் குழந்தைகள் எதில் வல்லவர்கள் என்பதை கவனிக்கவோ, அந்தத் திறமையை மதிக்கவோ தவறிவிடுகிறோம். அடுத்த வீட்டுக் குழந்தை கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுத்திருக்கும்போது இவன் ஏன் எடுக்க முடிவதில்லை அல்லது எடுப்பதில்லை என்ற கவலை பெரிய கவலையாகிவிடுகிறது. அடுத்த வீட்டுப் பையன் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் அதைக் கொண்டாட நம் மனம் மறுக்கிறது. ‘நீ ஏன் வாங்கவில்லை?’ என்று நம் குழந்தைகளைக் கடிந்து கொள்ளுகிறோம்; இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவர்களுடைய திறமையைப் பாராட்ட வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர மறுக்கிறோம். அடுத்தவரைப் பாராட்டுதல் என்பதையே நம் குழந்தைகள் கற்பதில்லை. எத்தனை துயரமான விஷயம் இது!
குழந்தைகள் நல்ல மனிதர்களாக உருவாக பெற்றோர்கள் நிச்சயம் உதவ வேண்டும் என்கிறார் ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக மனவியலாளர். ‘பள்ளிகளில் சில மாணவர்கள் சாதுவாக இருக்கும் மற்ற மாணவர்களை துன்புறுத்தி அதில் சந்தோஷம் காண்பார்கள். ‘அவர்கள் எப்படியோ போகட்டும்; உன் வேலையைப் பார்’ என்று பெற்றோர்கள் சொல்லித்தரக் கூடாது. அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் மனப்பான்மையை சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். எல்லாக் குழந்தைகளும் இப்படி இருந்தால் ‘bullying’ என்பது பள்ளிகளில் இருக்காது’ என்கிறார் அவர். ‘நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே உன்னுடைய முதல் குறிக்கோள்’ என்று சொல்வதை விட்டுவிட்டு, இரக்கமுள்ள மனிதனாக நீ இருப்பதே உன்னுடைய முதல் குறிக்கோள்’ என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமென்கிறார் அவர். இப்போதெல்லாம் குழந்தைகள் ஒரே குழந்தையாக வளருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கே. எதையும் யாருடனும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டாம். தாங்களே அனுபவிக்கலாம். குழந்தைகள் சுயநலம் மிக்கவர்களாகவே வளருகிறார்கள். மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவதன் மூலம் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிய அறிவும் வாய்ப்பு கிடைக்கிறது அவர்களுக்கு.
இதனால் தங்கள் நண்பர்கள் பற்றிய அக்கறை, அவர்கள் மேல் கரிசனம் எல்லாம் வரும். அவர்களின் இன்ப துன்பங்களை பங்கு போட்டுக் கொள்வதும் தன்னிடையே வரும். அவர்களது வெற்றிகளை தங்கள் வெற்றிகளாகச் சொல்லி சந்தோஷப்படும் இனிய சுபாவம் வரும். அவர்களது துன்பங்களுக்கு தோள் கொடுப்பவர்களாக மாறுவார்கள்.
பெற்றோர்கள் முதலில் உதாரணமாக இருந்து காட்ட வேண்டும். குழந்தையைப் பார்த்து ‘நல்லவளாக இருக்க வேண்டும்’ என்கிறோம். ‘நல்லவள்’ என்பதற்கு என்ன பொருள்? அன்பு, இரக்கம் இரண்டும் உடையவளாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். நான் ஏற்கனவே பிறந்தநாள் பற்றிய பதிவில் சொன்னது போல குழந்தைகளுக்கு எப்போதுமே ஆடம்பரம் பகட்டு இவைகளை நிஜம் என்று காட்டாதீர்கள். நம்மைவிட வசதியில் குறைந்தவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள். அவர்களும் நம்மைப்போல் இங்கு வாழத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் மிகப்பெரிய பதவியில் இருக்கலாம். உங்கள் கீழ் வேலை செய்பவர்களை குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டாதீர்கள். உங்கள் கார் ஓட்டுனரின் பிள்ளை அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உங்கள் குழந்தைகள் எதிரில் பாராட்டுங்கள். நல்ல மதிப்பெண்கள் எடுப்பது உங்கள் குழந்தையின் தனி உரிமை இல்லை. மற்ற குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தை மதிப்பிழக்காது. மற்ற குழந்தைகளிடம் இருக்கும் நல்லவற்றைப் பார்க்க, அவற்றை மதிக்க உங்கள் குழந்தைக்கு நீங்கள் உதாரணமாக இருங்கள்.
வெற்றியும் தோல்வியும் எல்லோரும் சந்திக்க வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒருமுறை வெற்றி பெற்றவுடன் ‘ஆஹா!’ என்று உலகத்தையே வெற்றி கொண்டாற்போல நினைக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் அந்த வெற்றி அடுத்தவருக்குப் போய்விடும். அதேபோல தோல்வி என்பது தொடர்கதை அல்ல. இன்றைய தோல்வி நாளைய வெற்றியின் ஆரம்பம்.
எங்கள் உறவினரின் பிள்ளை (6ஆம் வகுப்பு) பள்ளியிலிருந்து வந்தவுடன் சொன்னான் ’இன்னிக்கு டீச்சர் இந்தியா வரைபடம் எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். சுமேரு மறந்துவிட்டான். பாவம் அவன். டீச்சர் அவனை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்’. உடனே அவனது தந்தை சொன்னார்: ‘இனிமே நீ இரண்டு மூன்று வரைபடங்கள் உபரியாக கொண்டு போ. யாராவது மறந்துவிட்டால் கொடு’ என்று. அதுமட்டுமல்ல. இன்னொரு முறை அவரது பிள்ளை, ‘சுமேருவிற்கு அந்த கணக்கு எப்படிப் போடுவது என்றே புரியவில்லை’ என்றவுடன், ‘உனக்குப் புரிந்ததா? அப்படியானால் அவனுக்கு நீ சொல்லிக்கொடு’ என்றார். இதையே நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.
பள்ளியில் சில குழந்தைகள் வேகமாக தங்கள் வேலைகளை முடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பிற குழந்தைகளுக்கு உதவும்படி சொல்லுங்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவச் சொல்லுங்கள். இந்தச் செயல்கள் உங்கள் குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர் ரஞ்சனி நாராயணன், வலைப்பதிவாளர். தொடர்ச்சியாக பல இணைய, வெகுஜென இதழ்களில் எழுதிவருகிறார். விவேகானந்தர், மலாலா குறித்து நூல்கள் எழுதியிருக்கிறார்.
பிறற்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தைப் போதிப்பதுடன் நாமும் அவர்களுக்கு உதவும் விதமும் செய்து காண்பிக்க வேண்டும். யாருக்கும் எதுவும் கொடுக்காதே என்று போதிக்காது இருந்தாற் கூட போதும். நல்ல பயனுள்ள கட்டுரைத் தொடர். பாராட்டுகள் ரஞ்ஜனி. அன்புடன்