வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது. பெரும்பாலான பெண்களை பழமையான சிந்தனைகளுடன் ஒன்ற வைப்பதில் வெகுஜென பெண்கள் இதழ்களின் பங்கு அபாரமானது. கணவனை முந்தானையில் முடிந்து கொள்வது எப்படி? கணவனின் மனம் கோணாமல் நடந்துகொள்வது எப்படி என்று வெளிப்படையாகவே தலைப்பு வைத்து எழுதும் பெண்கள் பத்திரிகைகள், குடும்ப வன்முறைகள் பற்றி கள்ள மவுனம் காக்கின்றன. வெளிப்படையான காரணம் பத்திரிகை வாங்க காசு தரும்(?) கணவனுக்கு எதிராக எழுதினால், அந்தப் பத்திரிகை வீட்டுக்கு வருவதேகூட தடை செய்யப்படலாம் என்பதே. இன்று பல பெண்கள் பத்திரிகைகள் ஆண்களும் எங்கள் பத்திரிகையைப் படிக்கிறார்கள் என்று தாங்களாகவே தங்களை ஆண்வயப் படுத்திக் கொண்டு வெளிப்படுகிறார்கள். இதில் இருக்கும் நுண் அரசியல் பெண்கள் பத்திரிகைகளும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பட்டவை என்பதே.
இதன் அடிப்படையிலே ஆண்களின் ஆயுளை நீடிக்கும் விரதங்கள், பூஜை, புனஸ்காரங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. வீட்டுப் பொறுப்புகள் பெண்களுக்கானவையே என்று மீண்டும் மீண்டும் நினைப்படுத்தப் படுகின்றன. இந்து மத அடிப்படை வாதத்தை அப்படியே தக்கவைப்பதில் சில லட்சம் பிரதிகள் விற்பனையாகும் பெண்கள் பத்திரிகைகள் வெகுசுலபமாக வீட்டின் வரவேற்பறைக்கே வந்து செய்கின்றன. அடிப்படையில் மதங்கள் என்பவை பெண்களை அடிமையாகத்தான் நடத்த பரிந்துரைக்கின்றன. (இதில் எல்லா மதங்களையும்தான் சேர்த்தி, இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருக்கும் இந்து மதத்தை அதிகமாக எழுத வேண்டியிருக்கிறது. உடனே சிலர் நீங்கள் கிறித்துவத்தையோ, இஸ்லாமையோ ஆதரிக்கிறீர்கள் என்று பின்னணி கற்பிக்கக் கூடும் என்பதாலே இந்த விளக்கம்). சமஸ்கிருதத்துக்கு ஆதரவாக ஒரு தோழி பின்னூட்டம் இட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களைப் போல பிராமண பெண்களேகூட சமஸ்கிருதம் படிக்க தடை இருந்தது. இந்த உண்மையை முதலில் பிராமண பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பனீயம் மற்ற சாதியினரைப் போலத்தான் தன் சாதியைச் சேர்ந்த தாயையும் சகோதரியையும் மனைவியையும் மகளையும் ஒடுக்கியது. எனக்கு மிக நெருங்கிய பிராமண தோழிகள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பார்ப்பனீயத்தால் நசுக்கப்பட்ட சூழலை கண்ணீரோடு பகிர்ந்திருக்கிறார்கள். சங்கராச்சாரி சொன்னதை வேத வாக்காகக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் கல்லூரிக்குப் போவது, பணிக்குப் போவதும் பார்ப்பன குடும்ப ஆண்களால் கடுமையாக தடைசெய்யப்பட்டது. ‘அந்த’மாதிரி பெண்கள்தான் வேலைக்குப் போவார்கள், படிக்கப் போவார்கள் என்று காரணம் சொன்னார்கள். இந்த மன உளைச்சலை இன்று 40, 50 வயதுகளில் உள்ள பார்ப்பன பெண்கள் பலரிடமும் பார்க்க முடியும். இதன் அடிப்படை மதமும் அதன் வழி வந்த ஆணாதிக்க சிந்தனையும்தான். நாம் கண்டுணர வேண்டியது இதுபோன்றவற்றைத்தான்! நாம் மத அடிப்படை வாதத்திலிருந்து விடுபடுவது எப்படி என்ற இடத்திலிருந்து துவங்க வேண்டியிருக்கிறது. வாருங்கள் கை கோர்ப்போம்!
– மு.வி.நந்தினி
இனி மாதமிருமுறை இணைய இதழாக 4 பெண்கள் தளம் செயல்படும். இந்த இதழில்….
நாம் தொலைத்துவிட்ட உணவை மீட்டெடுக்கும் ஒரு தேடல் தொடர்….
காலை பறிகொடுத்த அருணிமாவின் எவரெஸ்ட் பயணம் பற்றி எழுதியிருக்கிறார் ஞா. கலையரசி.
Reblogged this on மு.வி.நந்தினி and commented:
பெரும்பாலான பெண்களை பழமையான சிந்தனைகளுடன் ஒன்ற வைப்பதில் வெகுஜென பெண்கள் இதழ்களின் பங்கு அபாரமானது. கணவனை முந்தானையில் முடிந்து கொள்வது எப்படி? கணவனின் மனம் கோணாமல் நடந்துகொள்வது எப்படி என்று வெளிப்படையாகவே தலைப்பு வைத்து எழுதும் பெண்கள் பத்திரிகைகள், குடும்ப வன்முறைகள் பற்றி கள்ள மவுனம் காக்கின்றன. வெளிப்படையான காரணம் பத்திரிகை வாங்க காசு தரும்(?) கணவனுக்கு எதிராக எழுதினால், அந்தப் பத்திரிகை வீட்டுக்கு வருவதேகூட தடை செய்யப்படலாம் என்பதே. இன்று பல பெண்கள் பத்திரிகைகள் ஆண்களும் எங்கள் பத்திரிகையைப் படிக்கிறார்கள் என்று தாங்களாகவே தங்களை ஆண்வயப் படுத்திக் கொண்டு வெளிப்படுகிறார்கள். இதில் இருக்கும் நுண் அரசியல் பெண்கள் பத்திரிகைகளும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பட்டவை என்பதே.
மாதமிருமுறை மலரவிருக்கும் நான்குபெண்கள் இதழுக்கு நல்வாழ்த்துக்கள்!
நன்றி ரஞ்சனி!
மாதமிருமுறை மலராக மலர்ந்து மணம் வீச நான்கு பெண்கள் தளத்தை வாழ்த்துகிறேன்!
நன்றி கலையரசி!
நல்வாழ்த்துகள்!
நன்றி ராமலக்ஷ்மி!
மாதமிருமுறை மலர்களாக மலரப்போகும் நான்கு பெண்களைப் பாராட்டி வரவேற்கிறேன். அன்புடன்
நன்றி அம்மா!