இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது; 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும், 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இச்சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின்படி 14 வயது வரையுள்ள குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்; அதுமட்டுமின்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும் முடியும்.
இதுநாள் வரை குழந்தை தொழிலாளர் என்றாலே சுமை தூக்கும் சிறுவர், கல்லுடைக்கும் சிறுவர், செங்கல் சூலைகளில் மண்சுமக்கும் கொத்தடிமை சிறுவர்கள்தான் பொது புத்தியில் ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக நாள்தோறும் இன்னலுறும் இவர்களின் வாழ்க்கை மீட்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு உண்டான அடிப்படை உணவு, கல்வி உள்ளிட்ட உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
இவர்களைப்போல நம் பொது பார்வையில் படாமல் குழந்தைத் தொழிலாளர் பிரிவு ஒன்று உள்ளது. அவர்கள் சினிமா கலைஞர்கள் என்ற போர்வையில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா இல்லையென்றால் ஊடகங்கள் இல்லை என்பதையும் சினிமாவும் ஊடகங்களும் கூட்டாளிகள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் டிவி, சினிமாத் துறையில் சிறுவர்களின் சீரழிவை துவக்கி வைக்க உதவியிருக்கும் மோடி அரசின் குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்ததை ஊடகங்கள் வேறுவகையில் திசை திருப்புகின்றன.
இதைப்பற்றி 4பெண்கள் தயாரித்தசெய்திப்படம் இதோ…
நல்ல கேள்வி.
//இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.//
முதல் பத்தியையே வன்மையாக மறுக்கிறேன். அவரோட வெளிநாட்டுப் பயணங்கள் மொத்த வருடத்தில் 15% மட்டுமே. அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் சென்று சுற்றிப் பார்க்கப்போகவில்லை. அதோடு இந்துத்துவ மீட்புச் செயல்பாடுகள் எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. மேற்கொண்டது எல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத். அதுக்கும் மோதியின் அரசாங்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தெரிந்த நீங்களே இப்படி எழுதுவது அதிர்ச்சியும், ஆயாசமும் தருகிறது. கார்ப்போரேட் இந்துத்துவ சகாக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர்களிடம் நீங்கள் உங்கள் தொழிலைக் கவனியுங்கள், அரசாங்கத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்றே சொல்லுகிறார்.
அதிகக் கண்டிப்புக் காட்டுவதாக ஒரு சாராரும், கண்டிப்புப் போதவில்லை என இன்னொரு சாராரும் பேசுகின்றனர். முந்தைய அரசைப் போல் நீரா ராடியா தலைமையில் அதிகாரிகள், மந்திரிகள் நியமனங்கள் கிடையாது. பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒரே வருடத்தில் மாற்றங்களையும் அதிசயங்களையும் கொண்டு வர இங்கே என்ன மோடி மஸ்தான் வேலையா நடக்கிறது? சினிமாவில் தான் சாத்தியம்! ஒரே பாட்டில் பற்பல மாற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம். நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து தான் சீரடைய வைக்க முடியும். பத்து வருடங்களுக்கும் மேலாகச் சீர் கெட்டிருந்த நிர்வாகத்தை முதலில் சீரமைத்து அதிகாரிகளைக் குறிப்பிட்ட நேரம் வரச் செய்து, அவர்களை வேலை செய்ய வைத்துனு எத்தனையோ இந்த அரசில் நடந்திருக்கிறது.
அடுத்து தேவாலயங்களில் தாக்குதல் என்பது அங்கே நடத்தப்பட்ட கொள்ளையின் காரணம் என்பது அப்போதே வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல தேவாலயங்களிலும் அவர்கள் அலங்காரமாக வைத்திருக்கும் வெள்ளி, தங்கப் பொருட்களைக் களவாட வேண்டியே தாக்குதல் நடத்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது அனைத்து ஊடகங்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம். இப்போதைக்கு இதோட நிறுத்திக்கிறேன். குலத்தொழிலுக்கு அப்புறமா வரேன்.
விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரு உறவும் இல்லை என்பதைப் போல தோழி!
கார்ப்போரேட் சகாக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்லும்போது அதானியின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் எட்டியிருக்கும் உச்சபட்ச மதிப்பு நினைவுக்கு வருகிறது. மோடி செய்த வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு என்று அப்பாவியாக நினைக்கிறீர்கள். அங்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்திய கார்ப்போரேட்களின் சொந்த நலன்களுக்கானவை. இதைப் பற்றி ஆங்கில வர்த்தக செய்தி ஊடக்ங்கள் விலாவாரியாக செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளி, தங்க நகைகளை மோடி ஆட்சியில்தான் கொள்ளையடிக்க வேண்டுமா?
//இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.//
இதற்கு நான் பதில் சொல்லுவதை விட இப்போது அனைவரும் பெரிதாகப் போற்றும் அம்பேத்கர் கூறியதைக் கீழே தருகிறேன். அம்பேத்கர் பார்லிமென்டிலேயே ஹிந்தி ஆட்சி மொழியாகக் குரல் கொடுத்த முதல் மனிதர்.
//அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத த்தை ஆதரித்தது மட்டுமல்ல, அவர் சொல்கிறார் : ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று சமஸ்கிருதத்தை புகழ்கிறார். (நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக். 25, ஆங்கில மூலம் : தனஞ்செய்கீர், தமிழாக்கம் : க.முகிலன், வெளியீடு : மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)
10599608_274706169398983_1585683943610595759_n
இதுமட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தி மொழியைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்? அதையும் பார்த்துவிடுவோம்.
அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார் :
..பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வகை செய்ய வேண்டும். இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என் கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம். இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக மாறுவது எளிதாகிவிடும்.
ஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும். இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே செய்யும். இது அசைக்க முடியாத விதி. நாட்டின் கலாச்சாரம் மொழியால்தான் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு பொதுக் கலாச்சாரத்தை வளர்த்து வளப்படுத்தவும் விரும்புவதால் இந்தியை தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களாலும் மறுக்க முடியாத கடமையாகும்.
மொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன். அதற்கு உரிமை இல்லாதவன். அவன் நூற்றுக்கு நூறு மகாராஷ்டிரனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு தமிழனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு அவன் குஜராத்தியாக இருக்கலாம். ஆனால் பூகோள அர்த்தத்தில் தவிர, இந்தியன் என்ற சொல்லின் உண்மையான அர்த்த த்தில் அவர் ஓர் இந்தியனாக இருக்க முடியாது. என் யோசனை ஏற்கப்படாவிட்டால் பின்னர் இந்தியா இந்தியாவாக இருக்காது. அதற்கு மாறாக ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதிலும் சிண்டுபிடித்துக் கொள்வதிலும் ஏச்சுபேச்சுகளிலும் போட்டி பூசல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடிய பலதரப்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கதம்பக் கூட்டாகத்தான் அது இருக்கும்.
‘ஓ இந்தியர்களே! நீங்கள் எப்போதும் பிளவுபட்டே இருப்பீர்கள். நீங்கள் எந்நாளும் அடிமைகளாகவே உழல்வீர்கள்’ என்று ஆண்டவன் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய சாபத்தை தந்திருப்பார் போலும்.!
இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்ததை நான் வரவேற்றேன். அதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். பிரிவினையை நான் ஆதரித்தேன். பிரிவினையின் மூலம்தான் இந்துக்கள் சுதந்திரமானவர்களாகவும் சுயேச்சையானவர்களாகவும் இருக்க முடியும் என்று நான் நம்பியதே இதற்குக் காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால் இந்துக்கள் சுதந்திரமுடையவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில்தான் இருந்திருப்பார்கள். அரசியல் ரீதியில் சுதந்திரம் பெற்ற இந்தியா இந்துக்களின் கண்ணோட்டத்தில் ஒரு சுதந்திர இந்தியாவாக இருந்திருக்காது. அப்போதைய அரசாங்கம் இரண்டு தேசங்கள் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கமாகத்தான் இருந்திருக்கும். இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவை இருந்தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க்கத்தினராக இருந்திருப்பார்கள். நாடு பிரிவினை செய்யப்பட்டபோது, ஆண்டவன் தமது சாபத்தை விலக்கிக் கொண்டு இந்தியா சுபிட்சமும் வளமும் அமைதியும் கோலோச்சும் ஒன்றுபட்ட ஒரு மாபெரும் நாடாகத் திகழத்திருவுளங் கொண்டுள்ளார் என்றே எனக்குத் தோன்றிற்று. ஆனால் அந்தச் சாபம் மீண்டும் நம் மீது விழுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் மொரிவாரி மாநிலங்கள் வேண்டுமென்று கோருபவர்கள் பிராந்திய மொழியைத் தங்களது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற குறிக்கோளைத் தங்கள் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்திருப்பதைக் காண்கிறேன்.
ஐக்கிய இந்தியா என்னும் லட்சியத்திற்கு இது சாவு மணி அடிப்பதாகவே இருக்கும். பிராந்திய மொழிகள் ஆட்சி மொழிகளாகும்போது இந்தியாவை ஓர் ஒன்றுபட்ட வலிமைமிக்க வளமான நாடாக ஆக்க வேண்டும் என்ற மகோன்னதமான லட்சியம் மறைந்து போகும். இந்தியர்களை முழுக்க முழுக்க இந்தியர்களாக ஆக்க வேண்டும். அவர்களது ஊனிலும் உதிரத்திலும் பேச்சிலும் மூச்சிலும் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி நிற்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளும் மண்ணோடு மண்ணாகிவிடும். இந்த இக்கட்டிலிருந்து, சிக்கலிலிருந்து மீள்வதற்கு ஓர் உபாயத்தை, பரிகாரத்தைக் கூறுவதற்கு மேல் என்னால் வேறு என்ன செய்ய முடியும்? என் யோசனையைப் பரிசீலிப்பது இந்தியர்களின் பொறுப்பு.
டாக்டர் அம்பேத்கர், நூல் : மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள், பக்: 212-214//
கடைசிப் பத்தியில் சொன்னது தான் இப்போது அனைத்து பிராந்தியங்கள் எனப்படும் மாநிலங்களில் நடந்து வருகிறது. இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்!
குழந்தைத் தொழிலாளர்கள் குறித்துப் பின்னர் வருகிறேன்.
Reblogged this on மு.வி.நந்தினி.
நிஜங்களின் தரிசனம்.சிறப்பான பதிவு.