1978 ஆம் ஆண்டு ஜனவர் மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் உள்ள மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும் திறனாய்வாளருமாகிய மதிப்பிற்குரிய நண்பர் திரு.சிட்டி(சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் ‘‘நீங்கள் தூத்துக்குடி பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுதவேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர்வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு. நீர், காற்று, வெளிச்சம் போன்று இந்திய நாட்டின் ஏழைமக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்’’ என்று கூறினார்.
நான் ஒரு நாவலை எழுதி முடிக்கும் முன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் வந்து விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்றுகூட சொல்லமாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்துவிட்டது. எனவே, ‘அலைவாய்க் கரையில்’ என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன்.
தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும் சூரிய வெப்பமும் தொடர்ந்து ஆண்டில் பத்து மாதங்களுக்குக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கனவே பழக்கமான தூத்துக்குடி பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன்.
இதற்குமுன் நான் உப்பளங்களைக் கண்டிருக்கிறேன். வறட்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண்மையை உப்புப் பாத்திகளில் கரிப்பு மணிகள் கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக்கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன்.
உப்புக் காலம் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த புரட்டாசிக் கடைசியின் அந்த நாட்களிலேயே, உப்பளத்தின் அந்த பொசுக்கும் வெம்மையில் என்னால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க இயலவில்லை. கண்களுக்கெட்டிய தொலைவுகளுக்குப் பசுமையற்ற-உயிர்ப்பின் வண்ணங்களற்ற வெண்மை பூத்துக் கிடந்தது. வெண்மையாக பனி பூத்துக் கிடந்திருக்கும் மலைக்காட்சிகள் எனது நினைவுக்கு வந்தாலும் எரிக்கும் கதிரவனின் வெம்மை அந்த நினைப்பை அகற்றிவிட்டது. அங்கே காலையிலிருந்து மாலை வரையிலும் கந்தலும் பீளையுமாக, உப்புப் பெட்டி சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமியரையும் பெண்களையும் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களையும் கண்டேன். அப்போது எங்கோ ஃபிஜித் தீவினில் கரும்புத் தொட்டத் தொழிலாளர் நிலையை நினைந்துருகித் தன் கண்ணீரையும் பாக்களாக இசைத்த பாரதியின் வரிகள் என்னுள் மின்னின. அந்நியன் நாட்டை ஆளும் நாட்களல்ல இது. நாள்தோறும் எங்கெல்லாமோ பல மூலைகளிலும் மக்கள் உரிமைகளும் நியாயமான சலுகைகளும் நியாயமல்லாத சலுகைகளும் கோரிக் கிளர்ச்சிகள் செய்வதும் போராட்டங்கள், ஆர்ப்பாடங்கள் நிகழ்த்துவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாடிக் கட்டிடங்களில் குளிர்ச்சியான இதம் செய்யும் அறைகளில் அமர்ந்து கோப்புக் காகிதங்களில் கையெழுத்துச் செய்யும் அலுவலகக்காரர்கள், மருத்துவ வசதிகளும் ஏனைய பிற சலுகைகளுமே மாதத்தில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெறுகின்றனர்.
உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது.
சுதந்திர இந்தியாவில் மக்கட் குலத்துக்கு இன்றியமையாததோர் பொருளை உற்பத்தி செய்வதற்கு உழைக்கும் மக்கள், ‘உயிர் வாழ இன்றியமையாத நல்ல குடிநீருக்கும் திண்டாடும் நிலையில் தவிப்பதைக் கண்டபோது எனக்கும் குற்ற உணர்வு முள்ளாய்க் குத்தியது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் சுட்டேரிக்கும் வெய்யிலில் பணியெடுக்கும் இம் மக்களுக்கு, வாரந்திர ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளும் கூடக் கூலியுடன் கிடையாது. கிடைக்கும் கூலியோ உணவுப் பண்டங்களும் எரிபொருளும் உச்சியிலேறி விற்கும் இந்த நாட்களில், இம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எல்லாவற்றையும்விட மிகக் கொடுமையானதும் ஆனால் உண்மையானதுமானதென்னவென்றால், உப்புளத் தொழிலாளி, இருபத்தைந்து ஆண்டுகள் பணியெடுத்திருந்தாலும், தனது வேலைக்கான நிச்சயமற்ற நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறான் என்பதேயாகும்.
ஒரு சாதாரண குடிமகனுக்கு , ஒரு சுதந்திர நாட்டில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எந்த வசதியையும் உப்புளத் தொழிலாளி பெற்றிருக்கவில்லை. வீட்டு வசதி, தொழிற் களத்தில் எரிக்கும் உப்புச் சூட்டிலும் கூடத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஓய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி ஓய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி எதுவுமே உப்பளத் தொழிலாளிக்கு இல்லை என்பது இந்த நாட்டில் நாகரிகமடைந்தவராகக் கருதும் ஒவ்வொருவரும் நினைத்து வெட்கப்பட வேண்டிய உண்மையாக நிலவுகிறது. உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண்களோ அவர்களுடைய உடலைப்பு இயல்புக்கேற்ற வேறு பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.
தூத்துக்குடி வட்டகையில், உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ. 6-75. பெண்களுக்கு ரூ. 4.40. சிறுவர் சிறுமியருக்கு ரூ. 3 அல்லது ரூ. 2.50* என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிட குறைவு என்று கேள்விப்பட்டேன்.) ஆனால் இந்த நிர்ணய கூலி பெரும்பாலான தொழிலாருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர் கங்காணி, அல்லது காண்ட்ராக்டர் எனப்படும் இடை மனிதர் வாயிலாக ஊதியம் பெறுகின்றனர். பதிவுபெற்ற தொழிலாளிகள், அளநிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகவும் குறைவானவர்தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகத்தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும்கூட வியப்பில்லையாம்!
குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் எதிர்காலம் மழலை செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறுகின்றன. அடிப்படை தேவைகளுக்குப் போராடும் வறியவர்களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும்போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப்படுவதைத் தடைசெய்வது சாத்தியமல்ல. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார், எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறுகின்றனர் என்ற விவரங்கள் இந்நாட்களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தைகளைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக்கிறது. இந்நிலையில் வெளியுலகம் அறியாமல் கேட்பாருமற்று, உரைப்பாருமற்று அவலமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. இச்சிறார்க்கு தனிப்பட்ட முறையில், அந்த தொழிற்களத்தில் அவர் ஈடாக்கும் உழைப்புக்குகந்த முறையில் உணவுப்பொருள், மருத்துவ வசதி (மற்றும் கல்வி)யும் அளிக்கப்பட வழிவகை செய்யப்படல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சம் கனக்க, உப்பளத் தொழிலாளரிடையே உலவியபோது, நண்பர் ‘சிட்டி’ அவர்கள் வாக்கை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கொறிக்கும் சிறு தீனியாகளாகி விடக்கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது.
இம்முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வமும் ஆவலுமாக உதவிய நண்பர்கள் பலருக்கும் நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். தூத்துக்குடி என்றாலே, நண்பர் திரு. ஆ. சிவசுப்ரமணியனின் இல்லமே நினைவில் நிற்கிறது. வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியராக இருக்கும் இவருடைய நட்பு, இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்று மகிழ்கிறேன். எந்த நேரத்திலும் சென்று உதவி வேண்டி அவரை அசௌகரியத்துக்குள்ளாக்கும் உரிமையை அவர் மனமுவந்து எனக்கு அளித்திருக்கிறார். இவரது இல்லம் என்றால், குடும்பம் மட்டுமல்ல. இக்குடும்பத்தில் பல மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இணைந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவராகி விட்டதால், உப்பளத்து வெயிலில் நான் காய்ந்த போதும், தொழிலாளர் குடியிருப்புகளில் நான் சுற்றித் திரிந்த போது நான் தனியாகவே செல்ல நேர்ந்ததில்லை. மாணவ மணிகளான இளைஞர்கள் திரு. எட்வின் சாமுவேல், சிகாமணி ஆகியோர் நான் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட பலரைச் சந்தித்துச் செய்தி சேகரிக்க உதவியதை எந்நாளும் மறப்பதற்கில்லை.
உப்பளத் தொழிலாளரில் எனக்குச் செய்தி கூறியவர் மிகப் பலர். வேலை முடித்து வந்து பத்து மணியானாலும் தங்கள் உடல் அயர்வைப் பொருட்டாக்காமல் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து என்னை சந்தித்த தோழர்கள் திருவாளர் மாரிமுத்து, முனியாண்டி, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக்கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன்.
ராஜம் கிருஷ்ணன் முதல் பதிப்பு ஏப்ரல் 1979ல் எழுதி முன்னுரை.
* இன்றைக்கு உப்பளத் தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ. 80லிருந்து 120க்குள் அடங்கும்.
அடுத்த இதழில் இருந்து நாவல் ஆரம்பம்…
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலைத் தொடர்ச்சியாக வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இவர் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.
அக்காலத்தில் களப்பணி செய்து நாவல் எழுதுவது மிகவும் சிரமமான காரியம் அதிலும் பெண்ணாக இருந்தால் கேட்கவே வேண்டாம். ஆனால் இவர் பீகார் கொள்ளைக் கூட்டத்தலைவனை நேரில் சந்தித்து முள்ளும் மலரும் எழுதினார். நீலகிரி மலைவாழ் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து குறிஞ்சித் தேன் எழுதினார்.
தூத்துக்குடி உப்பளத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரில் ஆய்ந்து இவர் எழுதிய கரிப்பு மணிகள் மிகவும் புகழ் பெற்றது. இவர் எழுதியுள்ள முன்னுரையே இந்நாவலை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
கணவர் இறந்த பிறகு உறவுகள் வஞ்சிக்க சொந்த வீட்டை விற்று இவர் முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி வசிக்க நேர்ந்தது கொடுமையிலும் கொடுமை!
நாவலை வாசிக்கத் தூண்டும் முகவுரை. அன்புடன்
உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயம் ‘கரிப்பு மணிகள்’ ஹிட்தான்!
கருத்துக்கு நன்றி அம்மா…
நானும் ஆவலாக உள்ளேன் ராஜம் அம்மாவின் கதையை படிப்பதற்கு என்னை போன்ற புதிய எழுத்தாளர்களுக்கும் இது பயன் உள்ள தகவலாக இருக்கும் நன்றி
நானும் ஆவலாக உள்ளேன். என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
நன்றி