உலகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் மண்ணுக்கே உரித்தான உணவு குறித்து பேசவது அபத்தமானதாக இருக்கலாம். உலகமயமாகிவிட்ட உணவுகளின் உண்மை முகத்தை சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அறிந்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகளின் விருப்ப உணவாக இடம்பிடித்துவிட்ட மேகி நூடுல்ஸ் பற்றி செய்திதான் அது. நெஸ்ட்லே தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் அளவுக்கதிகமான காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இதன் அடிப்படையில் உத்தர பிரதேச அரசு மேகி நூடுல்ஸை தடை செய்திருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக சொல்கிறது. விளம்பரத்தில் நடித்ததற்காக மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறது.
நெஸ்ட்லே என்கிற உலகின் மிகப் பெரிய உணவு தயாரிப்பு நிறுவனம் இத்தகைய விஷயங்களை கவனிக்கும் விதத்தில் கவனித்து சுமூகமாக முடித்து வைத்துவிடும். வெளிச்சத்துக்கு வந்த மேகியைப் போல இன்னும் எத்தனை நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளில் என்னவிதமான வேதிப்பொருட்களை கலக்கிறார்கள் என்பது ரகசியமாகவே வைக்கப்படும்.
ஆடம்பரத்துக்காக இத்தகைய பாக்கெட் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, நாம் தொலைத்துவிட்ட இந்த மண்ணுக்குரிய நம் உடல் ஏற்றுக் கொள்கிற உணவுகளை மீட்டெடுப்பது இதற்கான மாற்றாகும்.
சில, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் எத்தகைய உணவை உண்டார்கள்? ஒவ்வொரு வட்டாரத்துக்கும் அங்கு விளையும் விளைப் பொருட்களுக்கு ஏற்ப உணவை சமைத்து உண்டார்கள் நம் முன்னோர். இன்று பொதுமைப் படுத்தப்பட்ட உணவுப் பழக்கத்தால் வட்டார உணவுப் பழக்கம் மறைந்தே போய்விட்டது. நுண்நூட்டச் சத்து நிறைந்த நம் வட்டார உணவுப் பழக்கம் குழந்தைகளையும் பெண்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது. இன்று நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த உண்பதற்குரிய வசதிகள் நிறைந்தவர்கள்கூட ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு பல்வேறு சமூக காரணங்கள் இருந்தபோதும், வட்டார உணவுப் பழக்கம் அழிந்ததும் ஒரு காரணம்தான்!
வட்டார உணவை பற்றி அறியும் சில சுவாரஸ்யம் மிக்க இலக்கிய ரெசிபிகள் குறித்து அறிவோம்.
கரும்புச் சாறு அவல் பாயசம் (அ) கரும்புச் சாறு அவல் கீர்
கழனிக் கரும்பின்
விழைகழை பிழிந்த அந்தீஞ் சேற்றோடு
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கு
என்கிறது குறுந்தொகை பாடல் ஒன்று.
இதில் உள்ள இனிப்பான ரெசிபி நாவில் நீர் வர வைக்கக் கூடியது. அவலுடன் (கைக் குத்தல் அரிசி அவல் அல்லது சிவப்பரிசி அவல் எடுத்துக் கொள்ளவும்) கரும்புச் சாறும் பாலும் சேர்த்து உண்ணுங்கள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இந்த மூன்றில் ஒன்றை கூட்டியோ குறைத்தோ செய்யலாம். பாலுடன் அவலைச் சேர்த்து வேகவைத்து, சற்றே குழைந்த பாயசம் போன்ற பதத்தில் இறக்கி ஆறவிடுங்கள். ஆறியவுடன் கரும்புச் சாறு சேர்த்து கீர் போல உண்ணலாம். கரும்புச் சாறு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, தண்ணீர்- எலுமிச்சை சேர்க்காத சாறாக வாங்கிக் கொள்ளுங்கள். பாயசத்தில் சர்க்கரை சேர்ப்பதுபோல கொதிக்கும் அவல் பால் கலவையில் கரும்புச் சாறு சேர்க்க வேண்டும். கரும்புச் சாறின் தன்மை மாறிவிடும்.
(இலக்கிய ரெசிபி தொடரும்)
“மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்!” இல் ஒரு கருத்து உள்ளது