சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம், புத்தகம்

புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!

புத்தக அறிமுகம்

ஞா.கலையரசி

இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் வன்முறை
முதற்பதிப்பு டிசம்பர் 2009
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013
வம்சி/பூவுலகு வெளியீடு
விலை ரூ 140/-
சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலை எதிர்க்கும் எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution (1992)  என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது.
வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து மீட்ட போராளி என்று மட்டும், நூலாசிரியரைப் பற்றிப் பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  மொழிபெயர்ப்பாளர் யார் என்று தெரியவில்லை.
வந்தனா சிவா பற்றித் தெரியாதவர்களுக்காக, சிறு அறிமுகம்:-

வந்தனா சிவா, தனது பண்ணையில் இந்திய இன மாடுகளுடன்...
வந்தனா சிவா, தனது பண்ணையில் இந்திய இன மாடுகளுடன்…

கனடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவனத்தை, 1984ல் ஏற்பட்ட பஞ்சாப் கலவரமும், போபால் விஷ வாயுக்கசிவு விபத்தும், வேளாண்மை பக்கம் திருப்பின.
தற்போது இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களின் மீதான நம் மக்களின் உரிமையைக் காக்கவும் போராடிவரும் இவர், இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்படும் பி.டி. கத்தரிக்காயைத் தீவிரமாக எதிர்க்கிறார்.  முன்பிருந்த இரசாயன பூச்சிக்கொல்லி, உரத்தொழிற்சாலைக்குப் பதிலாக செடியே இப்போது விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது என்பது இவர் எதிர்ப்புக்குச் சொல்லும்  காரணம்.
நவதான்யா,’ என்ற அமைப்பை நடத்தும் இவர்,  நம் நாட்டு வேளாண் உணவு உற்பத்தியிலும், பதப்படுத்துவதிலும் பெண்களின் பங்கு கணிசமானது என்கிறார்.
தொழிற்சாலையில் பதப்படுத்தும் வேலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது’; ஆனால் பாரம்பரிய முறையில் வீட்டில் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்துப் பதப்படுத்துவதில்  செலவிடப்படும் பெண்களின் உழைப்பு வேலையாகவே கருதப்படுவதில்லை என்பது இவர் ஆதங்கம்.
இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:– http://vandanashiva.com/

1960 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு, அபரிமித வளத்திற்குப் பதிலாக,  மிஞ்சியதெல்லாம் நோயால் பீடிக்கப்பட்ட மண்ணும், பூச்சியால் தாக்கப்பட்ட பயிர்களும் பெருங்கடனாளியாகியுள்ள, திருப்தியற்ற விவசாயிகளுமே என்கிறார்  ஆசிரியர்.

இந்நூலிலிருந்து முக்கிய கருத்துக்கள் மட்டும், உங்கள் பார்வைக்கு:-

green revolution

 • 1950 களில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது பசுமைப்புரட்சி என்ற புதிய மதம் பிறந்தது.  அற்புத விதைகள் மூலம் அதிக உற்பத்தி என்ற தாரக மந்திரத்தை அது பரப்பியது.
 • 1970 ல் இவருக்கு அமைதி நோபெல் பரிசு வழங்கப்பட்டது.  இவர் கண்டுபிடித்த மாயவிதை,  அபரிமித உற்பத்தி மற்றும் அமைதிக்கான ஆதாரமாக நோக்கப்பட்டது  இந்தியாவில் பஞ்சாபில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.
 • இந்தியாவிற்குள் பசுமைப்புரட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் 1964 ல் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும், 1965ல் இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவன இயக்குநர் எம்.எஸ்.சுவாமிநாதனும் ஆவர்.
 • 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நஷ்டம் தாங்காமல் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 1960 களில் பட்டினியை விரட்டுகிறேன் என்ற பெயரில், நம் அரசு நடைமுறைப்படுத்திய பசுமைப் புரட்சி தான் இதற்குக் காரணம்.
 • இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.
 • மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் தங்கள் நாட்டு வேளாண்மையில் மேம்பாடு செய்வதற்கான திறனில்லை என்று ராக்பெல்லர் நிறுவன அறிஞர்கள் கருதினர்.  அதிக உற்பத்திக்கான விடை, அமெரிக்க பாணி வேளாண்மை அமைப்பில் இருப்பதாக அவர்கள் எண்ணினர்..
 • பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுத் தலைமுறை தலைமுறையாக உள்ளூரில் பயிர் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தாவர வகைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய ரகங்களை உருவாக்கினர்.  புதிய ரகங்களுக்கு அதிகளவில் செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் நீர் தேவைப்பட்டது.  வேளாண் செலவு பன்மடங்கு அதிகரித்தது.
 • உயரமான பாரம்பரிய இனங்கள் வயலில் இடப்படும் உரச்சத்துக்களைத் தாவரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன.  ஆனால் குட்டை ரகங்கள் அவற்றைத் தானிய மணிகளாக மாற்றும் திறன் படைத்திருந்தன. முதலாவதில் கால்நடைக்குத் தேவையான வைக்கோல் கிடைத்தது.  ஆனால் புதிய முறையில் வைக்கோல் பற்றாக்குறை ஏற்பட்டது.
 • செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாவிட்டால் புதிய ரகங்கள், உள்ளூர் ரகங்களை விடக் குறைவான விளைச்சலையே தரும்.  விளைச்சலால் கிடைக்கும் லாபம், இடுபொருட்களின் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் டாக்டர் பால்மர்.
 • பசுமைப்புரட்சிக்குப் பிறகு வேதி உரங்களின் உபயோகம் 30 மடங்கு அதிகரித்தது.  பஞ்சாபில் கொடுக்கப்பட்ட வேளாண் கடன்களில் 64% உரங்கள் வாங்கச் செலவிடப்பட்டன.
 • பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக ஆய்வுகள்,  வேதி உரங்கள் தழையுரத்துக்கு ஈடாகாது என்று நிரூபித்துள்ளன.  கால்நடைப்பண்ணை உரங்களும் வேதியுரங்களை விடச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 • பசுமைப்புரட்சிக்குப் பின்னர் கோதுமை, சோளம், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியன கலந்த மாற்றுப்பயிர் முறை ஒழிக்கப்பட்டு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் ஓரினப்பயிர் முறை பரவலாக்கப்பட்டது.
 • சர்வதேச வல்லுநர்களும், இந்திய ஆதரவாளர்களும், ‘தொழில்நுட்பம் நிலத்துக்கு மாற்று,’ என்றும், வேதியியல் உரங்கள் தழைச்சத்திற்கு மாற்று என்றும் தவறாக நம்பியதால், பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட நம் மண்வளம், பசுமைப்புரட்சிக்குப்பின்  கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாசமாகிவிட்டது.

புத்தகத்தின் இடையிடையே கருத்துத் தெளிவின்றிக் குழப்பம் ஏற்படுத்தும் நீண்ட வாக்கியங்கள், மொழிபெயர்ப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது.  பலவிடங்களில் கூறியது கூறல் சலிப்பை ஏற்படுத்துகிறது.

இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை நம் தலையில் திணிக்க அரசு முயலும் இந்நாளில்,  முதல் பசுமைப்புரட்சியின் விளைவால் நம் மண்ணுக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகளையும், சூழலியல் பாதிப்புக்களையும் விலாவாரியாக விளக்கி, மக்களிடையே விழிப்புணர்வூட்ட இந்நூல் உதவும் என்பதால் மொழிபெயர்ப்பில் குறைகள் இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நூலின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவரின் மனைவியின், சோகம் ததும்பும் முகம், நெஞ்சை கனக்கச் செய்கிறது.

“புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.