செல்வ களஞ்சியமே – 96
ரஞ்சனி நாராயணன்

சென்னையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம், ரயிலில். பக்கத்து இருக்கையில் ஒரு சிறுமி. பார்த்தவுடன் ரொம்பவும் சிநேகிதமாகச் சிரித்தாள். தனது தந்தையுடன் ‘statue’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் எங்களுடன் பேச ஆரம்பித்தாள். என் கணவருடன் அதே விளையாட்டைத் தொடர்ந்தாள். அவள் ‘statue’ சொன்னவுடன், என் கணவர் வேண்டுமென்றே அசைவார். கையைக் காலை ஆட்டுவார். அப்போது அந்தக் குழந்தை மிகவும் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு, ‘statue’ சொன்னால் ஆடாமல் அசையாமல் இருக்கணும். ரிலீஸ் சொன்னால்தான் அசையலாம்’ என்று விளையாட்டை விளக்கினாள். சற்று நேரம் கழித்து இவர் செய்தது அவளுக்குப் பிடித்துப் போகவே, அவளும் statue என்னும்போது அசைந்து அசைந்தும், ரிலீஸ் சொல்லும்போது ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தும் அந்த விளையாட்டை மாற்றி விளையாட ஆரம்பித்துவிட்டாள். சில குழந்தைகள் வெகு சீக்கிரம் புது சூழ்நிலைக்குப் பழகி விடுகிறார்கள்.
சென்ற வாரங்களில் மூடியாக இருக்கும் குழந்தைகளைப் பற்றிப் பார்த்தோம். சில குழந்தைகள் இயற்கையாகவே நிறைய பேசும். குறிப்பாகப் பெண் குழந்தைகள் அதிகம் பேசுவார்கள். இதை எழுதும்போது ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது:
‘எந்த மாதத்தில் பெண்கள் குறைவாகப் பேசுவார்கள்?
பிப்ரவரி மாதத்தில். அதில் தானே குறைவான நாட்கள்!’
சரி ஜோக் இருக்கட்டும். இப்போது நம் விஷயத்திற்கு வருவோம்.
எப்போதெல்லாம் குழந்தைகள் பேச விரும்புவார்கள்?
- பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன்;
- தூங்கப் போகும் முன்;
- வெளியில் போகும்போது;
- சாப்பிடும் போது, அல்லது அதற்கு முன்
உங்கள் குழந்தைகள் ஆர்வமுடன் பேச வரும்போது கேளுங்கள். ‘இப்ப வேலையாக இருக்கிறேன். உன்னோட தொணதொணப்பெல்லாம் அப்புறமா சொல்லு’ என்று சொல்லி அந்தக் குழந்தையின் ஆர்வத்தில் வெந்நீரைக் கொட்டாதீர்கள். உங்களுடைய கடுமையான சொற்கள் குழந்தையின் மனதை நிச்சயம் காயப்படுத்தும். குழந்தைதானே என்று அலட்சியப் படுத்தாதீர்கள். அடுத்தமுறை உங்களிடம் பேச வேண்டும் என்று வரவேமாட்டாள்.
நீங்களே பேச்சை ஆரம்பியுங்கள்: ‘இன்னிக்கு என்னாச்சு?’ என்று.
அவள் சொல்வதைக் கேட்க நீங்கள் ஆவலாக இருப்பது குழந்தைக்குப் புரியும்.
நீங்களும் குழந்தையுமாக ஆடும் ஆட்டங்களைத் தேர்ந்தெடுத்து விளையாடுங்கள். உன்னுடன் அரைமணி விளையாடுகிறேன் என்று ஆரம்பத்திலேயே மணிக்கணக்கு சொல்லாதீர்கள்.
குழந்தையுடன் இருக்கும் நேரங்களில் உங்கள் கவனத்தை திசை திருப்பும் சாதனங்களை தூர வைத்துவிடுங்கள்.
குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பேசுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு, அல்லது இசை இவை பற்றிய மேலதிக விவரங்களைக் கதை போல சொல்லுங்கள்.
குழந்தையைக் கேள்வி கேட்பதைவிட நீங்கள் நினைப்பதைச் சொல்லி பேச்சைத் துவங்கலாம். ‘இன்னிக்கு என்னாச்சு ஸ்கூல்ல?’ என்று கேட்பதைவிட, ‘நான் சின்னவனாக இருக்கும்போது எங்கள் ஸ்கூல்ல….’ என்று ஆரம்பியுங்கள். குழந்தை வெகு ஆவலுடன் உங்கள் இளவயது சாகசங்களைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்து, தனது அனுபவத்தையும் சொல்லும்.
நீங்கள் குழந்தை சொல்வதைக் கேட்கிறீர்கள் என்று குழந்தை உணரும்படி செய்யுங்கள். குழந்தை தனது பயங்களைப் பற்றிச் சொல்லும்போது நீங்கள் செய்துகொண்டிருப்பதை நிறுத்தி விட்டு குழந்தை சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
உங்களுக்கு சிறு விஷயமாகத் தோன்றுவது குழந்தைக்கு மிகப் பெரிய விஷயமாக இருக்கலாம். குழந்தையை ‘சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்லாதே’ என்று அடக்காமல் முழுதாகக் கேளுங்கள். அவர்கள் பேசி முடித்தபின் நீங்கள் பேசுங்கள். அவர்கள் சொன்னதை திருப்பிச் சொல்லி நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்று பாருங்கள்.
‘நீ அனுவோட பென்சிலை எடுத்து எழுதினயா? அதுக்கு அவ உன்னோட சண்ட போட்டாளா? நீயும் சண்ட போட்டியா?’
‘இல்லப்பா, அவ என்னோட பென்சில எடுத்து எழுதினா, முதல்ல.. நான் ஒண்ணுமே சொல்லல. ஆனா நான் அவளோட பென்சில எடுத்த உடனே அவ என்னோட சண்ட போட ஆரம்பிச்சுட்டா….!’
முதலில் அனு இவளது பென்சிலை எடுத்ததால், இவள் அவளது பென்சிலை எடுத்திருக்கிறாள். இந்த பாயின்ட் மிகவும் முக்கியமானது!
உங்களது எதிர்வினைகளை நிதானமாக காண்பியுங்கள். எடுத்தவுடன் கோபித்துக் கொள்ளாதீர்கள். அவர்களது மனதைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லும்போது குறுக்கே பேசாமல் காதுகொடுத்துக் கேளுங்கள். எது சரி என்று விளக்குவதை விட, எனது கருத்து இது என்று சொல்லலாம். குழந்தையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
குழந்தைகளுடன் நிறையப் பேசுங்கள். பேச்சு என்பது அறிவுரை கூறுவதாகவோ, கருத்து சொல்வதாகவோ இல்லாமல், பொதுவான பேச்சாக இருக்கட்டும். குழந்தைகள் சிலசமயம் தங்கள் பிரச்னைகளை உங்களிடம் விரிவாக பேச விரும்பலாம். சிலசமயம் நீங்கள் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தால் போதும் என நினைக்கலாம். எல்லா சமயங்களிலும் அவர்களுக்கு தீர்வு சொல்ல விழையாதீர்கள். தீர்வு அவர்கள் எடுக்கட்டும். நீங்கள் ஒரு நல்ல ‘கேட்பாளி’ (listener) இருங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய ஆறுதலைக் கொடுக்கும்.
பேசும்போது குழந்தைகளை விமரிசனம் செய்யாதீர்கள்; பயமுறுத்தாதீர்கள்; வருத்தப்படும்படி பேசாதீர்கள். அவர்களது முடிவுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்கிறார்கள். அவர்களது முடிவு எந்தவிதமான கெட்ட பலனையும் கொடுக்காது என்னும் நிலையில் நீங்கள் அதில் குறுக்கிடாதீர்கள்.
குழந்தைக்குப் பிடித்தது, பிடிக்காதது எல்லாவற்றையும் அறிந்து வைத்திருங்கள். பிடித்தது என்று ஒரு பொருளைக் காட்டினால் ஏன் பிடித்தது என்று கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளை அறிந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களாக இருப்பது சுலபமான வேலையே இல்லை. குழந்தைகளுடன் நிறைய பேசுங்கள். உங்கள் குழந்தையைப் பற்றி அறிய பேச்சு ஒன்றுதான் வழி. நீங்கள் நல்ல ‘கேட்பாளராக’ இருந்தால் குழந்தை உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லும்.
அடுத்த பகுதியில் பேசலாம்….
நான்குபெண்கள் மீண்டும் வலம் வர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப்போன்ற ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு தொடர் எழுத வாய்ப்புக் கொடுத்த நான்குபெண்கள் புதுப்பொலிவுடன் வந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி.
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!
“பெற்றோர்களாக இருப்பது சுலபமான வேலையே அல்ல” நிசர்சனமான உண்மை ரஞ்சனி இதை நம் காலத்திலேயே தெரிந்துகொண்டோம் என்றாலும் தற்போதுள்ள ஸ்மார்ட் குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பது இன்னும் கடினமான காரியமாக உள்ளது என்பதை என் பேரன் சுன்னுவைப் பார்த்து தெரிந்து கொள்ளுகிறேன் எங்களை யெல்லாம் எப்படியம்மா வளர்த்தாய்? என்று நான் என் அம்மாவிடம் 30 வருடங்கள் முன்பு கேட்ட அதே கேள்வியை என் பெண் என்னை இப்போது கேட்கிறாள் பதிலே தெரியவில்லை என்ன செய்வது /