இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!

செல்வ களஞ்சியமே95

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

நாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக் குழந்தைகளிடம் உருவாக்குவது? தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று எல்லாவிடங்களிலும் வன்முறை என்பது தினமும் நடந்தேறும் ஒரு நிகழ்ச்சியாக, எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இவைகளால் குழந்தைகள் பாதிக்காத வண்ணம் எப்படி நம் குழந்தைகளைக் காப்பாற்றுவது? அப்படிக் காப்பாற்றுவது சாத்தியமா? அவர்களை துன்பங்களைக் கண்டு இரங்கும்படி செய்ய முடியுமா?

ஒரு குழந்தையின் அத்தனை நடவடிக்கைகளையும் பெற்றோரால் கவனிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எல்லாக் குழந்தைகளும் வீட்டில் இருப்பதை விட வெளி உலகில் நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். அதேபோல இன்னொன்று: ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களுக்கென்று தனித்தன்மை வாய்ந்த ஆளுமையும் குணநலன்களும் உடையவர்களாக பிறக்கிறார்கள். இவைகளை மாற்றவோ கட்டுப்படுத்தவோ பெற்றோர்களால் இயலாது. ஆனால் குழந்தைகள் சமுதாய அக்கறை உள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, நியாய உணர்ச்சி உள்ளவர்களாக வளர பெற்றோர்கள் நிச்சயம் உதவ முடியும்.

ஒருகால கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் வளர வளரத் தான் தங்களைச் சுற்றி இருப்பவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாக மாறுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் குழந்தைகள் இளம் வயதிலேயே மற்றவர்களைப் பற்றிய அக்கறையைக் காண்பிக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. யாராவது சோகமாக இருந்தால் அவர்களை சந்தோஷப்படுத்தவும், பிரச்னை என்றால் தீர்வு கொடுக்கவும் முயலுகிறார்களாம். இப்படிப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் வாழ்வைப் பற்றிய நேர்மறை எண்ணங்களுடன், தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கையுடனும் வாழ்கிறார்களாம்.

குழந்தைகள் இரக்க சுபாவத்துடன் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்வது உங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதை அவர்களுக்கு தெரியப் படுத்துங்கள், உங்கள் செய்கைகள் மூலம். உங்களுக்குப் பிடிக்காததை குழந்தைகள் செய்தால் உடனே அந்த இடத்திலேயே அவர்களைக் கண்டியுங்கள். குழந்தைகளின் செய்கையை மட்டும் விமரியுங்கள் குழந்தையை அல்ல. நீ செய்தது சரியல்ல என்று சொல்லுங்கள் நீ சரியில்லை என்று சொல்லாமல். அவர்களின் தவறு என்ன என்பதை புரிய வையுங்கள். சரியான செய்கை எது என்று சொல்லிக் கொடுங்கள். உங்கள் செய்தி சுருக்கமாகவும் கூர்மையாகவும் குழந்தையின் மனதில் படியும்படி இருக்கட்டும். எந்தக் காலத்திலும் உங்கள் குழந்தையை குற்றவாளியாக நடத்தாதீர்கள்.

இரண்டுவிதமாக இதைச் சொல்லலாம்: நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் இரக்கம், உங்கள் குழந்தையிடம் நீங்கள் காட்டும் இரக்கம். குழந்தைகள் உங்களைப் பார்த்துத்தான் எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் அக்கறை காட்டினால் குழந்தைகளும் அதைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். நான் சொல்வதைச் செய். நான் செய்வதை செய்யாதே’ என்ற பழங்கால முறை இந்தக் காலக் குழந்தைகளிடம் செல்லுபடி ஆகாது.

உங்கள் குழந்தையை இரக்க குணத்துடன், அக்கறையுடன், மரியாதையுடன் நீங்கள் நடத்தினால் அவர்களுக்கு மற்றவர்களும் இப்படி நடத்தப்பட வேண்டியவர்களே என்பது புரியும்.

DSCN0569

இரக்கத்தை எப்படிக் காண்பிப்பது? இதோ ஒரு சிறு நிகழ்ச்சி:

நீதி மன்றத்தில் ஒரு வயதான மூதாட்டி நிற்கிறார் குற்றவாளிக் கூண்டில். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிறார் அழுதபடியே. அவர் செய்த குற்றம் என்ன? அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வேலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த மூதாட்டியின் பேரக்குழந்தை பசியால் கதறுகிறது. அதன் பசியைப் போக்க இவர் பக்கத்திலிருந்த தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மரவள்ளிக் கிழங்குகளை திருடி வரும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு இப்போது நீதிமன்றத்தில் நிற்கிறார். தோட்டத்து முதலாளி சொல்லுகிறார்: இந்த குற்றவாளிக்குக் கிடைக்கும் தண்டனை திருட நினைக்கும் மற்ற பேர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்’. என்று.

வழக்கை விசாரிக்கும் அந்த இந்தோனேசிய நீதிபதியின் பெயர் மார்சுகி. குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னால் நீதிக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். நூறு அமெரிக்க டாலர் அபராதத் தொகையாகக் கொடுக்க வேண்டும். அதைக் கட்ட முடியாத பட்சத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம்’ என்று தனது தீர்ப்பை வழங்குகிறார்.

பாவம் அந்த மூதாட்டி தன்னிடம் பணம் இல்லையென்று அழுகிறார். நீதிபதி அவளது தொப்பியை கழற்றி அதில் 5.50 அமெரிக்க டாலரைப் போட்டுவிட்டுச் சொல்லுகிறார்: நீதியின் பெயரால் இந்த நீதிமன்றத்தில் குழுமி இருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் 5.50 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கிறேன். ஏனெனில் இந்த நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த மூதாட்டியின் பேரக்குழந்தையை பட்டினி போட்டிருக்கிறோம். அதனால் அவர் திருடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். நம் சமுதாயத்தில் இப்படி ஒரு குற்றம் நடப்பதற்கு நாமும் ஒருவிதத்தில் காரணம். அதனால் தானே இவர் திருடியாவது அந்தக் குழந்தைக்கு உணவு கொடுக்கும்படி ஆயிற்று. அதனால் அவரது அபராதத் தொகையை நாம் எல்லோரும் கொடுக்க வேண்டும். என்னுடைய பங்கை நான் கொடுத்துவிட்டேன். மற்றவர்களிடமிருந்து பதிவாளர் வசூலிப்பார்’. தோட்டக்காரரிடமிருந்தும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. வசூலான பணத்தில் மூதாட்டியின் அபராதத் தொகை நீதிமன்றத்திற்குக் கட்டியது போக மீதம் அவரிடம் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நீதிபதியாக இருந்து தனது கடமையைச் செய்தவர், பிற்பகுதியில் மனிதராக மாறி மனித நேயத்தை காண்பித்தார். இரக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தை சொல்லமுடியுமா?

நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் வாழ்க்கைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், இல்லாதவர்களைப் பார்த்து இரக்கம் ஏற்படும். சிறுவயதிலேயே இந்த இரக்கக் சுபாவத்தை குழந்தைகளிடம் விதைப்போம். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை இரக்க சுபாவத்துடன் வளர்த்தால், நாமிருக்கும் இந்த சமுதாயம், சமுதாயத்தால் ஆன தேசம், தேசங்களை உள்ளடக்கிய இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும். இரக்கமற்ற செயல்களும், வன்முறைகளும் குறையும்.

 

“குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. “சிறுவயதிலேயே இரக்கக் சுபாவத்தை குழந்தைகளிடம் விதைப்போம்.” என்பதை நம்ம பெற்றோர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
    சிறந்த குழந்தைநல வழிகாட்டல்
    தொடருங்கள்

  2. பயனுள்ள பகிர்வு ரஞ்சனி உதாரணக்கதை வெகு அருமை. படிக்கும்போதே நெஞ்சம் நெகிழ்கிறது நல்ல தீர்ப்பளித்த நீதிபதியைக் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும். இரக்ககுணம் சிறுவயதிலேயே ஊட்டி வளர்க்க வேண்டிய ஒன்றுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.