ஞா.கலையரசி

ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
இதன் தாவரப்பெயர் Cassia fistula Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன்.
தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும் தாக்குப் பிடித்து வளரக்கூடியது. அச்சிருபாக்கம், திருக்கோவிலூர்,, திருத்துறையூர் உள்ளிட்ட 20 சிவன் கோவில்களில் தலமரமாக இருக்கும் சிறப்புப் பெற்றது. தற்காலத்தில் தெருவோரங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தின் மலர் என்பதோடு, அதன் புத்தாண்டு தினமான விஷு பண்டிகையின் பூஜைக்குரிய மலராகவும் இது விளங்குகிறது. அங்கு இதன் பெயர் கனிக்கொன்னா அல்லது விஷு கொன்னா.. தாய்லாந்து நாட்டு மலரும் இதுவே.
இதன் காய்கள் பச்சையாக உருளை வடிவத்தில் இருக்கும். முற்றிப் பழமாகும் போது கருமைகலந்த காப்பிக்கொட்டை நிறமாகிவிடுகிறது. முற்றிய கனியின் ஓட்டை உடைத்து, விதையை எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை இதனுள்ளே வரிசையாகப் பிசுபிசுப்புடன் கூடிய சதைப்பற்றால் ஆன தடுப்புச்சுவர் அரண் போல் அமைந்திருக்க, ஒவ்வொரு அறையினுள்ளும், ஒரு விதை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு உள்ளது.

முற்றிய பிறகு வெடிக்கக் கூடிய கனியாகவும் இது தோன்றவில்லை! இவ்வளவு கடினமான ஓட்டிலிருந்து விதைகள் எப்படி வெளியே வருகின்றன? என்று எனக்கு வியப்பு. இனப்பெருக்கத்துக்கு இயற்கை இதற்கென்று ஒரு வழி வைத்திருக்காமலா இருக்கும் என்று இணையத்தில் தேடியபோது, கிடைத்த விடை சுவாரசியமானது…
சங்கக்காலத்தில் காடும் காடு சேர்ந்த பகுதியுமான முல்லை நிலத்துக்குரிய மரமாகத் தான், இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்.
காடுகளில் வளரும் இம்மரத்தின் கனிகளை, இதன் பிசுபிசுப்பு நிறைந்த தித்திப்பான சதைப்பகுதிக்காக நரி, குரங்கு போன்ற விலங்குகள் விரும்பித் தின்னுமாம். இது மிகச் சிறந்த மலமிளக்கி! என்னே இயற்கையின் விந்தை! எனவே சதைப்பகுதியுடன் உள்ளே போகும் விதைகள், இவற்றின் கழிவு வழியாக வெளியேறி பல்வேறு இடங்களுக்குப் பரவுமாம்.
விதைகள் விரைவில் முளைவிட, நான்கு மணி நேரம் வெதுவெதுப்பான நீரிலும், பின்னர் 24 மணி நேரம் குளிர்ந்த நீரிலும் ஊறவைத்துப் பின் விதைக்க வேண்டுமாம்.
நாட்டு மருத்துவத்தில் தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய தாவரங்களில் இதுவும் ஒன்று. ஆயுர் வேதத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டை, பூ ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாயம் தோல், மற்றும் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப் பயன்பட்டன.
கொன்றை பற்றிய சங்கப் பாடல்கள் ஏராளமாக இருப்பினும், விரிவஞ்சி இங்கு இரண்டு மட்டும்:-
பொன்னென மலர்ந்த கொன்றை மணிஎனத்
தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே! (ஐங்குறுநூறு 420)
“முல்லை நிலமே! பொன் போல் மலர்ந்த கொன்றை, , நீல மணிபோல் பூத்த காயம்பூ, மலர்ந்த தோன்றிமலர் ஆகியவற்றோடு சேர்ந்து நல்ல அழகு எய்தினாய்!.”
“புதுப்பூங் கொன்றைக்
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே”
(குறுந்தொகை : 21)
“கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. திடீரென்று மழை பெய்ததால், கார் காலம் வந்து விட்டதாக எண்ணி ஏமாந்து கொன்றை பூத்துவிட்டது; ஆனால் நான் நம்ப மாட்டேன் இது கார்காலம் இல்லை. அவர் பொய் சொல்ல மாட்டார் என்று தோழியிடம் தலைவி சொல்கிறாளாம்.”
முதிர்ந்த கொன்றை மரத்தைக் கொண்டே, அக்காலத்தில் உலக்கை செய்தனர் என்கிறார், காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.
வீட்டின் முன்புறத்தை (Front elevation) ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு படுத்த நினைப்பவர்கள், செலவின்றி ஒரே ஒரு கொன்றை மரத்தைத் தெருவோரத்தில் நட்டால் போதும்;
தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்கவிட்டது போல் ஜொலிக்கும் பொன் மஞ்சள் மலர்கள், உங்கள் வாசலுக்குத் தனி அழகைக் கொடுக்கும்!
(கொன்றை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி:- தமிழரும் தாவரமும் – முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி & விக்கிபீடியா)
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
புகைப்படங்கள் வெகு அருமை பாராட்டுக்கள்
படங்களை ரசித்தமைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி விஜி!