இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?

செல்வ களஞ்சியமே94

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

பிறந்த நாள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய நாள்.அதுவும் குழந்தைகளுக்கு தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவது ரொம்பவும் குஷியைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி. பள்ளிக்கு இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகள் வாங்கி எடுத்துபோவது, அன்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு புது உடை உடுத்துக் கொண்டு போவது என்று வானில் பறக்கும் மனநிலையில் இருப்பார்கள்.

ஒருகாலத்தில், மாலை வேளையில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கமும் சிலரிடம் இருந்தது. ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்துவது என்பதற்காகவே இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிலரிடம் மட்டுமே இருந்து வந்த இந்தப் பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி போய்க் கொண்டிருகின்றன என்று தோன்றுகிறது. முன்பெல்லாம் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்த அளவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது. பிறந்த தேதி என்பதைக் கொண்டாட மாட்டோம். நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் பிறந்தநாள். அன்று புது ஆடை அணிந்து கொண்டு கோவிலுக்குப் போவோம். பெரியவர்களை வணங்குவோம். வீட்டில் பாயசம் வடையுடன் சாப்பாடு. அவ்வளவுதான். நாங்கள் சந்தோஷமாகவே இருந்தோம்.

சென்னையில் என் அக்காவின் பேத்தியை ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து கூட்டி வரப் போனேன். முதல் வகுப்பில் படிக்கிறாள் அந்தக் குழந்தை. என்னைப் பார்த்தவுடன் ஆயா வந்து ‘இந்தாங்கம்மா, ரிடர்ன் கிப்ட்’ என்று சொல்லி அழகிய காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பொருளைக் கொடுத்தார். நான் குழந்தையிடம் இது என்ன என்று கேட்பதற்கு முன்னேயே அது சொல்லிற்று. இன்னிக்கு ‘தீப்திக்கு பர்த்டே. அதான் ரிடர்ன் கிப்ட்!அந்தக் குழந்தைக்கு பரிசு கொடுத்தவர்களுக்கு மட்டும் இந்த ரிடர்ன் கிப்டா? அல்லது எல்லாக் குழந்தைகளுக்குமா என்று தெரியவில்லை. ஆனால் பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் எல்லோரும் கையிலும் இந்த ரிடர்ன் கிப்ட் இருந்தது. ஒருவேளை அந்த வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்திருப்பார்களோ, என்னவோ?

இன்று நட்சத்திரப் பிறந்த நாள் யாருக்கும் நினைவில் இருப்பதேயில்லை. பிறந்த தேதியன்று கொண்டாடிவிடுகிறார்கள். அதுவும் கேக் வெட்டி, மெழுகுவர்த்தியை அணைத்து, நண்பர்கள் புடை சூழ. கொண்டாடட்டும் அதில் தவறில்லை. ஆனால் அதில் பெற்றோர்கள் காட்டும் ஆடம்பரம் இருக்கிறதே அது கவலையைத் தருகிறது. குழந்தைக்கு விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவதையும் நான் தவறு சொல்லவில்லை. குழந்தைகளின் நண்பர்கள் அனைவரையும் கூப்பிட்டு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். அதுவும் தவறில்லை. இந்த பரிசுப் பொருட்கள் இருக்கிறதே, அதுதான் மனதை வருத்துகிறது. 5 அல்லது 6 வயதுக் குழந்தைக்கு என்ன வாங்கித் தருவது? நாம் வாங்கித் தரும் பொருட்கள் ஏற்கனவே அவர்கள் வீட்டில் நிச்சயம் இருக்கும். முக்கால்வாசிப் பேர்கள் கலர் பென்சில், க்ரேயான்ஸ் என்று வாங்கி வருகிறார்கள். ஏற்கனவே அவர்கள் வீட்டில் இவையெல்லாம் குவிந்திருக்கும். நாம் வாங்கித் தருவதும் சேர்ந்து ஒருமூலையில் கிடக்கும்.

ஒரு குழந்தைக்கு பிறந்தநாள் என்றால் அதன் தம்பி, அக்கா, தங்கை, அண்ணா என்று இன்னொரு குழந்தை இருக்கும். அதற்கும் நாம் ஏதாவது வாங்கிப் போகவேண்டும். இல்லையென்றால் அது தன் சகோதரனுக்கு/சகோதரிக்கு மற்றவர்கள் வாங்கிக் கொடுப்பதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும். யாருடனும் பேசாது. முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டிருக்கும். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து பரிசு வாங்க வேண்டிய கட்டாயம் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு. எதற்கு இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம்? ஒரு குழந்தை பிறந்தநாள் கொண்டாடினால் மற்ற குழந்தைகளுக்கும் ஆசை வரும். குழந்தைகள் தானே! ஆனால் பெற்றோர்கள் இதனை தங்கள் தகுதியை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக வைத்துக் கொண்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

DSCN2839

ரிடர்ன் கிப்ட் கொடுப்பதிலும் தங்கள் பணக்காரத்தனத்தை காண்பித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. மொத்தத்தில் பணத்திற்கு மதிப்பு இல்லையோ என்று தோன்றுகிறது.

மேல்வீட்டு ராகுலின் பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு என்ன ட்ரீட் தெரியுமா? பிவிஆர் மாலில் முதலில் ஒரு திரைப்படம். பிறகு அங்கேயே சாப்பாடு. அங்கு வந்திருந்த குழந்தைகள் எல்லோருடைய பெற்றோர்களாலும் இதுபோல செலவழிக்க முடியுமா? அவனது நண்பர்கள் தங்கள் பிறந்தநாளைக்கு ராகுலைக் கூப்பிடுவார்களா? கூப்பிட்டால் இது போல ஒரு ட்ரீட் கொடுக்க முடியுமா?

இப்போது அந்தக்காலம் போல இல்லை; எல்லோருடைய வாங்கும் திறனும் அதிகரித்து விட்டது என்று ஒரு பேச்சு இருக்கிறது. இது கடன் அட்டைகள் காலம். எல்லாவற்றிற்கும் ஒரு EMI கட்டுகிறார்கள். ஆயுள் முழுவதும் ஏதோ ஒரு பொருளுக்காக EMI கட்டிக்கொண்டிருந்தால் எப்படி? பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். செல்வ களஞ்சியத்தில் இந்தப் பேச்சு எதற்கு என்று கேட்கலாம்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு மிகமிக முக்கியமானது. உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவரிடம் போகலாம். மன ஆரோக்கியம் பெற்றோரிடமிருந்து வருவது. அதனால் உங்கள் குழந்தைகளுக்கு உங்களது நிஜத்தைக் காட்டுங்கள். குழந்தையை சிறுவயதிலேயே வெட்டி ஆடம்பரத்திற்குப் பழக்காதீர்கள்.

குழந்தைகளின் பிறந்த நாளன்று அவர்களை ஒரு அநாதை இல்லத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அந்தக் குழந்தைகளின் நிலைமையை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். சக மனிதர்களிடம் கருணை என்பதை குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே விதையுங்கள். அநாதை இல்லத்துக் குழந்தைகளைப் பார்க்கும் உங்கள் வீட்டுச் செல்வங்களுக்கு தாங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள் என்பது புரியும்.

பிறந்தநாள் அன்று ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக்கொடுங்கள். சேமிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே ஆரம்பிக்கட்டும். தாத்தா பாட்டி இருந்தால் அவர்களிடம் அழைத்துப் போய் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வரலாம். உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பிறந்தாநாள் கொண்டாடட்டும். அதில் ஆடம்பரம் வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்.

அடுத்தவாரம் பேசலாம் தொடர்ந்து…..!

“பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. “இந்த விழயம் செலவ களஞ்சியத்தில் தான் இடம் பெறவேண்டும்…எல்லாவற்றிற்கும்
  “EMI கட்டும் நாம் ,கடவுளுக்கு தர வேண்டிய EMI -ஐ மறந்து விடுகிறோம்
  ….காஞ்சி மகாபெரியவர் ஆடம்பரமே ஒருவிதத்தில் பாவம் என்கிறார் …நம் பகட்டை
  பார்த்து அடுத்தவன் அதுபோல் வாழ பாவ கார்யத்தில் ஈடுபடுவான் …அவனை பாவம்
  செய்ய தூண்டிய பாவம் நமக்கு வரும் என்று “…என் பேரன் 2 வது பிறந்தநாள்
  …ஒரு டிரஸ் எடுத்தேன் …கோவிலுக்கு அழைத்து சென்றேன் ….அருகே உள்ள
  அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து போனேன் …முதல்நாளே அனுமதி பெற்று,பிஸ்கட்
  ..எல்ளுரண்டை..வாங்கி பேரனை விட்டு தர சொன்னேன் …அவன் …பாப்பா
  …அண்ணா…அக்கா என விரலை நீட்டி நீட்டி காட்டி சிலருக்கு ஊட்டியும் விட,சில
  குழந்தைகள் இவனுக்கு ஊட்ட மனசுக்கு இதமாக இருந்தது…என் பெண் ,அவருக்கு
  தெரிந்தால் திட்டுவார் …’எச்சில் எல்லாம் சாப்பிட்டனா என்று
  …..ம்..ம்…சபரி பாட்டிக்கும்,கண்ணப்பன் வேடனுக்கும் …இந்த பிஞ்சுகள்
  எந்தவகையில் குறைந்தவர்கள் …கேட்கவில்லை …நினைத்து கொண்டேன் …

  1. வாங்க வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி!
   உங்களின் செய்கை மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. குழந்தையின் குதூகலத்தையும் உங்கள் எழுத்துக்களில் உணர முடிகிறது. எல்லா தாத்தா பாட்டிகளும் இப்படிச் செய்தால் வரும் தலைமுறை நமக்கு பெருமை தேடித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. இந்தக் கொண்டாட்டத்தில் சிறியவர்களின் பெரியவர்களுக்குதான், தான் எல்லோரையும் விட அதிக நவீனமாகக் கொண்டாடினோம் என்ற பெருமை வருகிறது. -பாரினில் குழந்தைகள் என்ன சாப்பிடுவார்களோ அதைத்தான் செய்திருப்பார்கள். அழைத்துப் போக வருபவர்களுக்காக கேக்கும்,வேறு ஏதாவது ஸிம்பிளாக இருக்கும். ரிடன் கிப்ட்டால் கட்டாயம் பொருட்சிலவுதான். அப்புறம் அதற்கு மதிப்பே கிடையாது. இதெல்லாம் யார் யோசிக்கிரார்கள்? நீங்கள் மிகவும் விவரமாக எழுதியுள்ளீர்கள். அசத்தல்தான். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   குழந்தைகளை காரணம் காட்டி தங்களின் பெருமைகளை பறை சாற்றுகிறார்கள். என்ன செய்வது?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. மிக அருமையான பகிர்வு ரஞ்சனி நெடு நாளாக நானும் இது மாதிரி நிகழ்வுகளை கண்டு பொறுக்கமுடியாமல் தான் இருக்கிறேன் நீங்கள் எழுதிவிட்டீர்கள் அவ்வளவுதான். இந்த முறை சின்னுவின் ஐந்தாவது பிறந்த நாளுக்கென்று ஒரு R D தான் ஆரம்பித்துக்கொடுத்தோம் படிப்புக்கு இந்த நாளில் ஆகும் செலவுக்கு அவனுக்கு நாளை படிக்க உதவுமே என்று பாட்டி தாத்தா பரிசாக கொடுத்துள்ளோம். உபயோகமாக எத்தனையோ செய்ய இருக்க வீணாக பணத்தை தண்ணீராக செலவழிப்பது அறிவீனமாகத்தான் தோன்றுகிறது. உங்கள் பதுவு சில பெற்றோர்களின் கண்ணையாவது திறந்தால் சரி பாராட்டுக்கள் ரஞ்சனி

  1. வாங்க விஜயா!
   வாவ்! ஒரு நல்ல உதாரண தாத்தா, பாட்டியாக இருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!
   எல்லா பெற்றோர்களும் உங்களை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.
   வருகைக்கும், ஒரு பாசிடிவான கருத்துரைக்கும் நன்றி!

 4. மிக அருமையான பகிர்வு ரஞ்சனி உங்கள் பதிவு ஒரு சில பெற்றோர்களின் கண்களையாவது திறந்தால் சரி நல்ல பதிவு பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.