இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உங்கள் குழந்தை மூடி டைப்பா?!

செல்வ களஞ்சியமே- 93

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சில குழந்தைகள் எல்லோருடனும் சுலபமாகப் பழகுகின்றன. சில வெளி மனிதர்களைப் பார்த்தால் அம்மாவின் பின்னாலோ அப்பாவின் பின்னாலோ போய் ஒளிந்து கொள்ளும். சிறு குழந்தையாய் இருக்கும்போது பரவாயில்லை. இதே கூச்ச சுபாவம் பெரியவனாக ஆன பின்பும் தொடர்ந்தால் குழந்தைக்கே அது நல்லதல்ல. அம்மாவோ அப்பாவோ தனிமை விரும்பியாக இருந்தால் குழந்தையும் அப்படி இருக்கலாம்.

சில பெற்றோர்கள் ‘என் பெண் மூடி டைப். யாருடனும் பேசமாட்டாள்’ என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள். இதனால் அவர்கள் வளர்ந்த பின்னும் மூடியாக இருப்பதையே விரும்புவார்கள். இயல்பாக பழக நினைத்தாலும் இந்த ‘மூடி’ என்கிற பெருமை போய்விடுமோ என்ற அச்சத்தில் அப்படியே இருக்க நினைப்பார்கள். யாரிடம் எப்படிப் பழகுவது என்று கூட புரியாமல் குழம்பி விடுவார்கள்.

குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கும்போது வெறும் உணவும் உடையும் மட்டும் போதாது. அவர்கள் எல்லோருடனும் இயல்பாகப் பழகவும் பெற்றோர்கள் உதவ வேண்டும். வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துப் போகும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அறிமுகம் செய்து வையுங்கள். உங்கள் குழந்தையின் தனித் திறமையை எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைக்கு அந்த சூழல் பிடித்ததாக அமையும்படி செய்யுங்கள். எப்பொழுதும் பள்ளிக்கூடம், படிப்பு பற்றியே பேசாமல் பொதுவான விஷயங்களை பேசுங்கள்.
பொதுவாக பெரியவர்கள் ஏதாவது ஒரு குழந்தையைப் பார்த்தால், எந்தப் பள்ளி, எத்தனையாவது வகுப்பு, பள்ளியில் என்ன சொல்லித் தந்தார்கள் என்று வழக்கமான கேள்விகளையே கேட்பார்கள். எனது உறவினரின் பேரன் அப்படிக் கேட்டால் என்ன சொல்லுவான் தெரியுமா? ‘ABCD, 1,2,3 …!’ என்பான். எப்போது யார் கேட்டாலும் இதே பதில் தான். எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டு கேட்டு அந்தக் குழந்தைக்கு அலுத்துப் போயிருக்கும் அதனால் தான் இந்த பதில் சொல்லுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

சமீபத்தில் முனைவர் பானுமதி எழுதிய ‘கொஞ்சுமொழி பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சுமொழியே மிஞ்சும்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அகரமுதல என்ற இணைய பத்திரிகையில் வந்திருந்தது. அதில் ஒரு கருத்தை வெகு அழகாக வெளியிடுகிறார். அதாவது குழந்தைகளிடத்தில் அவர்களது நிலைக்கு இறங்கி வந்து பேசுங்கள் என்கிறார்.

அவரது வார்த்தைகளிலேயே அவர் சொல்வதைக் கேளுங்கள்:
‘குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் உலகத்திற்குப் பெரியவர்கள் செல்ல வேண்டும் எடுத்த எடுப்பிலேயே ‘’நீ என்ன படிக்கிறாய்? எப்படி படிப்பாய்? எத்தனையாவது நிலை(ரேங்க்)?’’ என்றெல்லாம் கேட்கும் கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இப்படி வினாக்கள் தொடுக்கும்போது மிக மிக நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தால் உற்சாகத்துடன் விடை அளிக்கலாம். அவை கூட பள்ளியைத் தவிர பிற இடங்களில் படிப்பு, பாடம் இவற்றைப் பற்றி பேச விரும்புவதில்லை. அவ்வளவாகப் படிக்காத குழந்தைகளாக இருந்தால் சொல்லவே வேண்டா. அவை இது போன்ற வினாக்களை அறவே விரும்புவதில்லை. ஒன்று, குழந்தைகள் இப்படிப் பட்டவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து விடுகின்றன. இல்லாவிட்டால் குழந்தைகள் மனத்தில் மூண்டெழும் சினம் ‘‘சொல்ல முடியாது . போ’’ ‘‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. நீ உன் வீட்டுக்குப் போ’’ என்று கூற ஆரம்பித்து விடுகின்றன. இது போன்ற வினாக்கள் எழுப்பிய கோபத்தின் உச்சம் சில சமயங்களில் ‘போடா’, ‘போடி’, போன்ற சொற்களும் குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. அமுத மொழி பேசும் குழந்தைகளின் மலர் போன்ற மென்மையான வாயிலிருந்து நஞ்சு போன்ற கொடுஞ்சொற்கள் உமிழப் படுவதற்குப் பல நேரங்களில் பெரியவர்களே காரணமாகி விடுகின்றனர் என்பதைப் பெரியவர்கள் உணர வேண்டும்’.
என்ன ஒரு அருமையான கருத்து!

குழந்தைகள் உலகத்தில் நாம் நுழைவது என்பது கடினமானது. அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களைப் பற்றி பேசுங்கள் என்கிறார் முனைவர் பானுமதி. இந்தக் காலக் குழந்தைகள் பிறக்கும்போதே தொழில்நுட்ப அறிவுடன் பிறக்கின்றன. அவர்களது விளையாட்டுக்களும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கின்றன. பெரியவர்களுக்கு அத்தனை தொழில்நுட்பம் தெரியுமா? தெரியாவிட்டாலும் அவர்களுடன் கூட உட்கார்ந்துகொண்டு அவர்கள் விளையாடுவதை ரசிக்கலாம். கொஞ்சம் முயற்சித்தால் இந்த விளையாட்டுக்களை பெரியவர்களும் கற்கலாம். பெரிய பிரம்மவித்தை இல்லை இவை.

இன்னொன்றும் இங்கு சொல்ல விரும்புகிறேன். குழந்தைகள் தவறு செய்துவிட்டால் சில பெரியவர்கள் கடும் சொற்களால் அவர்களை திட்டுகிறார்கள். இது மிகவும் தவறு. அந்த சொற்களை குழந்தைகளும் மறுபடி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். பெரியவர்கள் தயவு செய்து இத்தகைய செயல்களை விடவேண்டும். குழந்தைகளின் வாயிலிருந்து நல்ல சொற்கள் மட்டுமே வரவேண்டும். குழந்தைகள் பேசும் சொற்கள் காதுக்கு இனிமையாக இருக்க வேண்டும்.

சமீபகாலமாக தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் ஒரு பெண் மிகவும் சந்தோஷமாக ஏதோ ஓர் குழு ஒரு விளையாட்டில் ஜெயித்து விட்டதாகச் சொல்லுவாள். அவளுடன் இருக்கும் இன்னொரு பெண் ‘அது நம் எதிரி குழு இல்லையா? நீ ஏன் சந்தொஷப்படுகிறாய்? ஸ்டுபிட்!’ என்று திட்டுவாள். ‘எல்லாம் ஒரே விளையாட்டுத் தானே ஸ்டுபிட்!’ என்று இந்தப் பெண் சொல்லுவாள். முதன்முதல் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் எல்லாம் பார்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஊடகத்தில் இப்படி ஒரு விளம்பரமா? இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் உறவினர் வீட்டுக் குழந்தைகள் ஒருவரையொருவர் ‘ஸ்டுபிட், ஸ்டுபிட்’ என்று திட்டத் தொடங்கிவிட்டனர். கொஞ்சமும் பொறுப்பில்லாமல் எப்படி இது போல ஒரு விளம்பரத்தைப் போடலாம்? இது தவறு என்று எழுதியவருக்கும், படமாக்கியவருக்கும் தோன்றவேயில்லையா?

“உங்கள் குழந்தை மூடி டைப்பா?!” இல் 2 கருத்துகள் உள்ளன

 1. பெற்றோர்களும் ஏனையோரும் புரிந்து கொள்ளத் தேவையான முக்கிய ஐந்து பொறுப்புகளை நான் கண்ணுற்றேன்.

  1-அம்மாவோ அப்பாவோ தனிமை விரும்பியாக இருந்தால் குழந்தையும் அப்படி இருக்கலாம்.
  2-குழந்தைகளிடத்தில் அவர்களது நிலைக்கு இறங்கி வந்து பேசுங்கள்.
  3-அமுத மொழி பேசும் குழந்தைகளின் மலர் போன்ற மென்மையான வாயிலிருந்து நஞ்சு போன்ற கொடுஞ்சொற்கள் உமிழப் படுவதற்குப் பல நேரங்களில் பெரியவர்களே காரணமாகி விடுகின்றனர் என்பதைப் பெரியவர்கள் உணர வேண்டும்’.
  என்ன ஒரு அருமையான கருத்து!
  4-குழந்தைகள் தவறு செய்துவிட்டால் சில பெரியவர்கள் கடும் சொற்களால் அவர்களை திட்டுகிறார்கள். இது மிகவும் தவறு. அந்த சொற்களை குழந்தைகளும் மறுபடி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். பெரியவர்கள் தயவு செய்து இத்தகைய செயல்களை விடவேண்டும்.
  5-இன்னொரு பெண் ‘அது நம் எதிரி குழு இல்லையா? நீ ஏன் சந்தொஷப்படுகிறாய்? ஸ்டுபிட்!’ என்று திட்டுவாள். ‘எல்லாம் ஒரே விளையாட்டுத் தானே ஸ்டுபிட்!’ என்று இந்தப் பெண் சொல்லுவாள். முதன்முதல் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் எல்லாம் பார்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஊடகத்தில் இப்படி ஒரு விளம்பரமா? இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் உறவினர் வீட்டுக் குழந்தைகள் ஒருவரையொருவர் ‘ஸ்டுபிட், ஸ்டுபிட்’ என்று திட்டத் தொடங்கிவிட்டனர். கொஞ்சமும் பொறுப்பில்லாமல் எப்படி இது போல ஒரு விளம்பரத்தைப் போடலாம்?

  இந்த ஐந்து பொறுப்புகளை நம்மாளுகள் கருத்திற்கொண்டால் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.